நாலாயிர திவ்ய பிரபந்தம்

இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி

நைமிசாரணியம்
997வாள் நிலா முறுவல் சிறு நுதல் பெருந் தோள்
      மாதரார் வன முலைப் பயனே
பேணினேன் அதனைப் பிழை எனக் கருதி
      பேதையேன் பிறவி நோய் அறுப்பான்
ஏண் இலேன் இருந்தேன் எண்ணினேன் எண்ணி
      இளையவர் கலவியின் திறத்தை
நாணினேன் வந்து உன் திருவடி அடைந்தேன்-
      நைமிசாரணியத்துள் எந்தாய்             (1)
   
998சிலம்பு அடி உருவின் கரு நெடுங் கண்ணார்-
      திறத்தனாய் அறத்தையே மறந்து
புலன் படிந்து உண்ணும் போகமே பெருக்கி
      போக்கினேன் பொழுதினை வாளா
அலம் புரி தடக்கை ஆயனே மாயா
      வானவர்க்கு அரசனே வானோர்
நலம் புரிந்து இறைஞ்சும் திருவடி அடைந்தேன்-
      நைமிசாரணியத்துள் எந்தாய்             (2)
   
999சூதினைப் பெருக்கி களவினைத் துணிந்து
      சுரி குழல் மடந்தையர்திறத்துக்
காதலே மிகுத்து கண்டவா திரிந்த
      தொண்டனேன் நமன்-தமர் செய்யும்
வேதனைக்கு ஒடுங்கி நடுங்கினேன் வேலை
      வெண் திரை அலமரக் கடைந்த
நாதனே வந்து உன் திருவடி அடைந்தேன்-
      நைமிசாரணியத்துள் எந்தாய்             (3)
   
1000வம்பு உலாம் கூந்தல் மனைவியைத் துறந்து
      பிறர் பொருள் தாரம் என்று இவற்றை
நம்பினார் இறந்தால் நமன்-தமர் பற்றி
      எற்றி வைத்து எரி எழுகின்ற
செம்பினால் இயன்ற பாவையை பாவீ
      தழுவு என மொழிவதற்கு அஞ்சி
நம்பனே வந்து உன் திருவடி அடைந்தேன்-
      நைமிசாரணியத்துள் எந்தாய்             (4)
   
1001இடும்பையால் அடர்ப்புண்டு இடுமினோ துற்று என்று
      இரந்தவர்க்கு இல்லையே என்று
நெடுஞ் சொலால் மறுத்த நீசனேன் அந்தோ
      நினைக்கிலேன் வினைப் பயன் தன்னை
கடுஞ் சொலார் கடியார் காலனார் தமரால்
      படுவது ஓர் கொடு மிறைக்கு அஞ்சி
நடுங்கி நான் வந்து உன் திருவடி அடைந்தேன்-
      நைமிசாரணியத்துள் எந்தாய்             (5)
   
1002கொடிய மனத்தால் சினத் தொழில் புரிந்து
      திரிந்து நாய் இனத்தொடும் திளைத்திட்டு
ஓடியும் உழன்றும் உயிர்களே கொன்றேன்
      உணர்விலேன் ஆதலால் நமனார்
பாடியைப் பெரிதும் பரிசு அழித்திட்டேன்
      பரமனே பாற்கடல் கிடந்தாய்
நாடி நான் வந்து உன் திருவடி அடைந்தேன்
      -நைமிசாரணியத்துள் எந்தாய்             (6)
   
1003நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழிந்தும்
      நீதி அல்லாதன செய்தும்
துஞ்சினார் செல்லும் தொல் நெறி கேட்டே
      துளங்கினேன் விளங்கனி முனிந்தாய்
வஞ்சனேன் அடியேன் நெஞ்சினில் பிரியா
      வானவா தானவர்க்கு என்றும்
நஞ்சனே வந்து உன் திருவடி அடைந்தேன்-
      நைமிசாரணியத்துள் எந்தாய்             (7)
   
1004ஏவினார் கலியார் நலிக என்று என்மேல்-
      எங்ஙனே வாழும் ஆறு?-ஐவர்
கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன்
      குறுங்குடி நெடுங் கடல் வண்ணா
பாவின் ஆர் இன் சொல் பல் மலர் கொண்டு உன்
      பாதமே பரவி நான் பணிந்து என்
நாவினால் வந்து உன் திருவடி அடைந்தேன்
      -நைமிசாரணியத்துள் எந்தாய்             (8)
   
1005ஊன் இடைச் சுவர் வைத்து என்பு தூண் நாட்டி
      உரோமம் வேய்ந்து ஒன்பது வாசல்-
தான் உடைக் குரம்பை பிரியும்போது உன்-தன்
      சரணமே சரணம் என்று இருந்தேன்
தேன் உடைக் கமலத் திருவினுக்கு அரசே
      திரை கொள் மா நெடுங் கடல் கிடந்தாய்
நான் உடைத் தவத்தால் திருவடி அடைந்தேன்-
      நைமிசாரணியத்துள் எந்தாய்             (9)
   
1006ஏதம் வந்து அணுகாவண்ணம் நாம் எண்ணி
      எழுமினோ தொழுதும் என்று இமையோர்-
நாதன் வந்து இறைஞ்சும் நைமிசாரணியத்து
      எந்தையைச் சிந்தையுள் வைத்து
காதலே மிகுத்த கலியன் வாய் ஒலிசெய்
      மாலை-தான் கற்று வல்லார்கள்
ஓத நீர் வையம் ஆண்டு வெண் குடைக் கீழ்
      உம்பரும் ஆகுவர் தாமே             (10)