நாலாயிர திவ்ய பிரபந்தம்

இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி

திருவேங்கடம் 1
1017கொங்கு அலர்ந்த மலர்க் குருந்தம்
      ஒசித்த கோவலன் எம் பிரான்
சங்கு தங்கு தடங் கடல் துயில்
      கொண்ட தாமரைக் கண்ணினன்
பொங்கு புள்ளினை வாய் பிளந்த
      புராணர்-தம் இடம்-பொங்கு நீர்
செங் கயல் திளைக்கும் சுனைத் திரு-
      வேங்கடம் அடை நெஞ்சமே (1)
   
1018பள்ளி ஆவது பாற்கடல் அரங்
      கம் இரங்க வன் பேய் முலை
பிள்ளையாய் உயிர் உண்ட எந்தை
      பிரான்-அவன் பெருகும் இடம்-
வெள்ளியான் கரியான் மணி நிற
      வண்ணன் என்று எண்ணி நாள்தொறும்
தெள்ளியார் வணங்கும் மலைத் திரு
      வேங்கடம் அடை நெஞ்சமே             (2)
   
1019நின்ற மா மருது இற்று வீழ
      நடந்த நின்மலன் நேமியான்
என்றும் வானவர் கைதொழும் இணைத்
      தாமரை அடி எம் பிரான்
கன்றி மாரி பொழிந்திட கடிது
      ஆ-நிரைக்கு இடர் நீக்குவான்
சென்று குன்றம் எடுத்தவன் திரு
      வேங்கடம் அடை நெஞ்சமே             (3)
   
1020பார்த்தற்கு ஆய் அன்று பாரதம் கைசெய்
      திட்டு வென்ற பரஞ்சுடர்
கோத்து அங்கு ஆயர்-தம் பாடியில் குரவை
      பிணைந்த எம் கோவலன்
ஏத்துவார்-தம் மனத்து உள்ளான் இட-
      வெந்தை மேவிய எம் பிரான்
தீர்த்த நீர்த் தடம் சோலை சூழ் திரு
      வேங்கடம் அடை நெஞ்சமே             (4)
   
1021வண் கையான் அவுணர்க்கு நாயகன்
      வேள்வியில் சென்று மாணியாய்
மண் கையால் இரந்தான் மராமரம்
      ஏழும் எய்த வலத்தினான்
எண் கையான் இமயத்து உள்ளான்
      இருஞ்சோலை மேவிய எம் பிரான்
திண் கை மா துயர் தீர்த்தவன் திரு
      வேங்கடம் அடை நெஞ்சமே             (5)
   
1022எண் திசைகளும் ஏழ் உலகமும்
      வாங்கி பொன் வயிற்றில் பெய்து
பண்டு ஓர் ஆல் இலைப் பள்ளி கொண்டவன்
      பால் மதிக்கு இடர் தீர்த்தவன்
ஒண் திறல் அவுணன் உரத்து உகிர்
      வைத்தவன் ஒள் எயிற்றொடு
திண் திறல் அரியாயவன் திரு
      வேங்கடம் அடை நெஞ்சமே             (6)
   
1023பாரும் நீர் எரி காற்றினோடு
      ஆகாசமும் இவை ஆயினான்
பேரும் ஆயிரம் பேச நின்ற
      பிறப்பிலி பெருகும் இடம்-
காரும் வார் பனி நீள் விசும்பிடைச்
      சோரும் மா முகில் தோய்தர
சேரும் வார் பொழில் சூழ் எழில் திரு
      வேங்கடம் அடை நெஞ்சமே            (7)
   
1024அம்பரம் அனல் கால் நிலம் சலம்
      ஆகி நின்ற அமரர்-கோன்
வம்பு உலாம் மலர்மேல் மலி மட
      மங்கை-தன் கொழுநன்-அவன்
கொம்பின் அன்ன இடை மடக் குற
      மாதர் நீள் இதணம்தொறும்
செம் புனம்-அவை காவல் கொள் திரு
      வேங்கடம் அடை நெஞ்சமே 8
   
1025பேசும் இன் திருநாமம் எட்டு எழுத்தும்
      சொலி நின்று பின்னரும்
பேசுவார்-தமை உய்ய வாங்கி
      பிறப்பு அறுக்கும் பிரான் இடம்-
வாச மா மலர் நாறு வார் பொழில்
      சூழ் தரும் உலகுக்கு எலாம்
தேசமாய்த் திகழும் மலைத் திரு
      வேங்கடம் அடை நெஞ்சமே             (9)
   
1026செங் கயல் திளைக்கும் சுனைத் திரு
      வேங்கடத்து உறை செல்வனை
மங்கையர் தலைவன் கலிகன்றி
      வண் தமிழ்ச் செஞ்சொல் மாலைகள்
சங்கை இன்றித் தரித்து உரைக்கவல்
      லார்கள் தஞ்சமதாகவே
வங்க மா கடல் வையம் காவலர்
      ஆகி வான்-உலகு ஆள்வரே             (10)