நாலாயிர திவ்ய பிரபந்தம்

இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி

திருவேங்கடம் 2
1027தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும்
நோயே பட்டொழிந்தேன் நுன்னைக் காண்பது ஓர் ஆசையினால்-
வேய் ஏய் பூம் பொழில் சூழ் விரை ஆர் திருவேங்கடவா!-
நாயேன் வந்து அடைந்தேன் நல்கி ஆள் என்னைக் கொண்டருளே (1)
   
1028மான் ஏய் கண் மடவார் மயக்கில் பட்டு மா நிலத்து
நானே நானாவித நரகம் புகும் பாவம் செய்தேன்-
தேன் ஏய் பூம் பொழில் சூழ் திருவேங்கட மா மலை என்
ஆனாய்!-வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே            (2)
   
1029கொன்றேன் பல் உயிரை குறிக்கோள் ஒன்று இலாமையினால்
என்றேனும் இரந்தார்க்கு இனிது ஆக உரைத்து அறியேன்-
குன்று ஏய் மேகம் அதிர் குளிர் மா மலை வேங்கடவா
அன்றே வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே (3)
   
1030குலம்-தான் எத்தனையும் பிறந்தே இறந்து எய்த்தொழிந்தேன்
நலம்-தான் ஒன்றும் இலேன் நல்லது ஓர் அறம் செய்தும் இலேன்-
நிலம் தோய் நீள் முகில் சேர் நெறி ஆர் திருவேங்கடவா!-
அலந்தேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே            (4)
   
1031எப் பாவம் பலவும் இவையே செய்து இளைத்தொழிந்தேன்
துப்பா நின் அடியே தொடர்ந்து ஏத்தவும் கிற்கின்றிலேன்-
செப்பு ஆர் திண் வரை சூழ் திருவேங்கட மா மலை என்
அப்பா!-வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே (5)
   
1032மண் ஆய் நீர் எரி கால் மஞ்சு உலாவும் ஆகாசமும் ஆம்
புண் ஆர் ஆக்கை-தன்னுள் புலம்பித் தளர்ந்து எய்த்தொழிந்தேன்-
விண் ஆர் நீள் சிகர விரைஆர் திருவேங்கடவா!-
அண்ணா வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே             (6)
   
1033தெரியேன் பாலகனாய் பல தீமைகள் செய்துமிட்டேன்
பெரியேன் ஆயினபின் பிறர்க்கே உழைத்து ஏழை ஆனேன்-
கரி சேர் பூம் பொழில் சூழ் கன மா மலை வேங்கடவா!-
அரியே வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே (7)
   
1034நோற்றேன் பல் பிறவி நுன்னைக் காண்பது ஓர் ஆசையினால்
ஏற்றேன் இப் பிறப்பே இடர் உற்றனன்-எம் பெருமான்
கோல் தேன் பாய்ந்து ஒழுகும் குளிர் சோலை சூழ் வேங்கடவா
ஆற்றேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே (8)
   
1035பற்றேல் ஒன்றும் இலேன் பாவமே செய்து பாவி ஆனேன்
மற்றேல் ஒன்று அறியேன்-மாயனே எங்கள் மாதவனே
கல் தேன் பாய்ந்து ஒழுகும் கமலச் சுனை வேங்கடவா!-
அற்றேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே (9)
   
1036கண் ஆய் ஏழ் உலகுக்கு உயிர் ஆய எம் கார் வண்ணனை
விண்ணோர்-தாம் பரவும் பொழில் வேங்கட வேதியனை
திண் ஆர் மாடங்கள் சூழ் திரு மங்கையர்-கோன் கலியன்
பண் ஆர் பாடல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே             (10)