நாலாயிர திவ்ய பிரபந்தம்

இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி

திருவேங்கடம் 3
1037கண் ஆர் கடல் சூழ் இலங்கைக்கு இறைவன்-தன்
திண் ஆகம் பிளக்கச் சரம் செல உய்த்தாய்
விண்ணோர் தொழும் வேங்கட மா மலை மேய
அண்ணா அடியேன் இடரைக் களையாயே             (1)
   
1038இலங்கைப் பதிக்கு அன்று இறை ஆய அரக்கர்
குலம் கெட்டு அவர் மாள கொடிப் புள் திரித்தாய்
விலங்கல் குடுமித் திருவேங்கடம் மேய
அலங்கல் துளப முடியாய் அருளாயே             (2)
   
1039நீர் ஆர் கடலும் நிலனும் முழுது உண்டு
ஏர் ஆலம் இளந் தளிர்மேல் துயில் எந்தாய்
சீர் ஆர் திருவேங்கட மா மலை மேய
ஆரா அமுதே அடியேற்கு அருளாயே             (3)
   
1040உண்டாய்-உறிமேல் நறு நெய் அமுது ஆக
கொண்டாய்-குறள் ஆய் நிலம் ஈர் அடியாலே
விண் தோய் சிகரத் திருவேங்கடம் மேய
அண்டா அடியேனுக்கு அருள்புரியாயே             (4)
   
1041தூண் ஆய் அதனூடு அரியாய் வந்து தோன்றி
பேணா அவுணன் உடலம் பிளந்திட்டாய்
சேண் ஆர் திருவேங்கட மா மலை மேய
கோள் நாகணையாய் குறிக்கொள் எனை நீயே             (5)
   
1042மன்னா இம் மனிசப் பிறவியை நீக்கி
தன் ஆக்கி தன் இன் அருள் செய்யும் தலைவன்
மின் ஆர் முகில் சேர் திருவேங்கடம் மேய
என் ஆனை என் அப்பன் என் நெஞ்சில் உளானே            (6)
   
1043மான் ஏய் மட நோக்கிதிறத்து எதிர் வந்த
ஆன் ஏழ் விடை செற்ற அணி வரைத் தோளா
தேனே திருவேங்கட மா மலை மேய
கோனே என் மனம் குடிகொண்டு இருந்தாயே             (7)
   
1044சேயன் அணியன் என சிந்தையுள் நின்ற
மாயன் மணி வாள் ஒளி வெண் தரளங்கள்
வேய் விண்டு உதிர் வேங்கட மா மலை மேய
ஆயன் அடி அல்லது மற்று அறியேனே             (8)
   
1045வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய்-
நந்தாத கொழுஞ் சுடரே எங்கள் நம்பீ
சிந்தாமணியே திருவேங்கடம் மேய
எந்தாய்!-இனி யான் உனை என்றும் விடேனே             (9)
   
1046வில்லார் மலி வேங்கட மா மலை மேய
மல் ஆர் திரள் தோள் மணி வண்ணன் அம்மானைக்
கல் ஆர் திரள் தோள் கலியன் சொன்ன மாலை
வல்லார்-அவர் வானவர் ஆகுவர் தாமே             (10)