நாலாயிர திவ்ய பிரபந்தம்

இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி

திருநீர்மலை
1077அன்று ஆயர் குலக் கொடியோடு அணி மா
      மலர் மங்கையொடு அன்பு அளவி அவுணர்க்கு
என்றானும் இரக்கம் இலாதவனுக்கு
      உறையும் இடம் ஆவது-இரும் பொழில் சூழ்
நன்று ஆய புனல் நறையூர் திருவாலி
      குடந்தை தடம் திகழ் கோவல்நகர்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கு
      இடம் மா மலை ஆவது-நீர்மலையே             (1)
   
1078காண்டாவனம் என்பது ஓர் காடு அமரர்க்கு
      அரையன்னது கண்டு அவன் நிற்க முனே
மூண்டு ஆர் அழல் உண்ண முனிந்ததுவும்
      அது அன்றியும் முன் உலகம் பொறை தீர்த்து
ஆண்டான் அவுணன்-அவன் மார்வு-அகலம்
      உகிரால் வகிர் ஆக முனிந்து அரியாய்
நீண்டான் குறள் ஆகி நிமிர்ந்தவனுக்கு
      இடம் மா மலை ஆவது-நீர்மலையே             (2)
   
1079அலம் மன்னும் அடல் சுரி சங்கம் எடுத்து
      அடல் ஆழியினால் அணி ஆர் உருவில்
புலம் மன்னும் வடம் புனை கொங்கையினாள்
      பொறை தீர முன் ஆள் அடு வாள் அமரில்
பல மன்னர் பட சுடர் ஆழியினைப்
      பகலோன் மறையப் பணிகொண்டு அணிசேர்
நில மன்னனும் ஆய் உலகு ஆண்டவனுக்கு
      இடம் மா மலை ஆவது-நீர்மலையே             (3)
   
1080தாங்காதது ஓர் ஆள் அரி ஆய் அவுணன்-
      தனை வீட முனிந்து அவனால் அமரும்
பூங் கோதையர் பொங்கு எரி மூழ்க விளைத்து
      அது அன்றியும் வென்றி கொள் வாள் அமரில்
பாங்கு ஆக முன் ஐவரொடு அன்பு அளவி
      பதிற்றைந்து இரட்டிப் படை வேந்தர் பட
நீங்காச் செருவில் நிறை காத்தவனுக்கு
      இடம் மா மலை ஆவது-நீர்மலையே             (4)
   
1081மாலும் கடல் ஆர மலைக் குவடு இட்டு
      அணை கட்டி வரம்பு உருவ மதி சேர்
கோல மதிள் ஆய இலங்கை கெட
      படை தொட்டு ஒருகால் அமரில் அதிர
காலம் இது என்று அயன் வாளியினால்
      கதிர் நீள் முடி பத்தும் அறுத்து அமரும்
நீல முகில் வண்ணன் எமக்கு இறைவற்கு
      இடம் மா மலை ஆவது-நீர்மலையே             (5)
   
1082பார் ஆர் உலகும் பனி மால் வரையும்
      கடலும் சுடரும் இவை உண்டும் எனக்கு
ஆராது என நின்றவன் எம் பெருமான்
      அலை நீர் உலகுக்கு அரசு ஆகிய அப்
பேரானை முனிந்த முனிக்கு அரையன்
      பிறர் இல்லை நுனக்கு எனும் எல்லையினான்
நீர் ஆர் பெயரான் நெடுமால்-அவனுக்கு
      இடம் மா மலை ஆவது-நீர்மலையே             (6)
   
1083புகர் ஆர் உரு ஆகி முனிந்தவனைப்
      புகழ் வீட முனிந்து உயிர் உண்டு அசுரன்
நகர் ஆயின பாழ்பட நாமம் எறிந்து
      அது அன்றியும் வென்றி கொள் வாள் அவுணன்
பகராதவன் ஆயிரம் நாமம் அடிப்
      பணியாதவனை பணியால் அமரில்
நிகர் ஆயவன் நெஞ்சு இடந்தான்-அவனுக்கு
      இடம் மா மலை ஆவது-நீர்மலையே             (7)
   
1084பிச்சச் சிறு பீலி பிடித்து உலகில்
      பிணம் தின் மடவார்-அவர் போல் அங்ஙனே
அச்சம் இலர் நாண் இலர் ஆதன்மையால்
      அவர் செய்கை வெறுத்து அணி மா மலர் தூய்
நச்சி நமனார் அடையாமை நமக்கு
      அருள்செய் என உள் குழைந்து ஆர்வமொடு
நிச்சம் நினைவார்க்கு அருள்செய்யும்- அவற்கு
      இடம் மா மலை ஆவது- நீர்மலையே             (8)
   
1085பேசும் அளவு அன்று இது வம்மின் நமர்
      பிறர் கேட்பதன் முன் பணிவார் வினைகள்
நாசம் அது செய்திடும் ஆதன்மையால்
      அதுவே நமது உய்விடம் நாள்மலர்மேல்
வாசம் அணி வண்டு அறை பைம் புறவின்-
      மனம் ஐந்தொடு நைந்து உழல்வார் மதிஇல்
நீசர்-அவர் சென்று அடையாதவனுக்கு
      இடம் மா மலை ஆவது-நீர்மலையே             (9)
   
1086நெடுமால்-அவன் மேவிய நீர்மலைமேல்
      நிலவும் புகழ் மங்கையர்-கோன் அமரில்
கட மா களி யானை வல்லான் கலியன்
      ஒலி செய் தமிழ் மாலை வல்லார்க்கு உடனே
விடும் மால் வினை வேண்டிடில் மேல் உலகும்
      எளிது ஆயிடும் அன்றி இலங்கு ஒலி சேர்
கொடு மா கடல் வையகம் ஆண்டு மதிக்
      குடை மன்னவர் ஆய் அடி கூடுவரே             (10)