நாலாயிர திவ்ய பிரபந்தம்

இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி

திருக்கடல்மல்லை:1
1087பார்-ஆயது உண்டு உமிழ்ந்த பவளத் தூணை
      படு கடலில் அமுதத்தை பரி வாய் கீண்ட
சீரானை எம்மானை தொண்டர்-தங்கள்
      சிந்தையுள்ளே முளைத்து எழுந்த தீம் கரும்பினை
போர் ஆனைக் கொம்பு ஒசித்த போர் ஏற்றினை
      புணர் மருதம் இற நடந்த பொன் குன்றினை
கார் ஆனை இடர் கடிந்த கற்பகத்தைக்
      கண்டது நான்-கடல்மல்லைத் தலசயனத்தே             (1)
   
1088பூண்டு அவத்தம் பிறர்க்கு அடைந்து தொண்டு பட்டு
      பொய்ந் நூலை மெய்ந் நூல் என்று என்றும் ஓதி
மாண்டு அவத்தம் போகாதே வம்மின் எந்தை
      என் வணங்கப்படுவானை கணங்கள் ஏத்தும்
நீண்ட வத்தை கரு முகிலை எம்மான்-தன்னை
      நின்றவூர் நித்திலத்தை தொத்து ஆர் சோலைக்
காண்டவத்தைக் கனல் எரிவாய்ப் பெய்வித்தானைக்
      கண்டது நான்-கடல்மல்லைத் தலசயனத்தே             (2)
   
1089உடம்பு உருவில் மூன்று ஒன்றாய் மூர்த்தி வேறு ஆய்
      உலகு உய்ய நின்றானை அன்று பேய்ச்சி
விடம் பருகு வித்தகனை கன்று மேய்த்து
      விளையாட வல்லானை வரைமீ கானில்
தடம் பருகு கரு முகிலை தஞ்சைக் கோயில்
      தவ நெறிக்கு ஓர் பெரு நெறியை வையம் காக்கும்
கடும் பரிமேல் கற்கியை நான் கண்டுகொண்டேன்-
      கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே (3)
   
1090பேய்த் தாயை முலை உண்ட பிள்ளை- தன்னை
      பிணை மருப்பின் கருங் களிற்றை பிணை மான் நோக்கின்
ஆய்த் தாயர் தயிர் வெண்ணெய் அமர்ந்த கோவை
      அந்தணர்-தம் அமுதத்தை குரவை முன்னே
கோத்தானை குடம் ஆடு கூத்தன்-தன்னை
      கோகுலங்கள் தளராமல் குன்றம் ஏந்திக்
காத்தானை எம்மானைக் கண்டுகொண்டேன்-
      கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே             (4)
   
1091பாய்ந்தானை திரி சகடம் பாறி வீழ
      பாலகன் ஆய் ஆல் இலையில் பள்ளி இன்பம்
ஏய்ந்தானை இலங்கு ஒளி சேர் மணிக் குன்று அன்ன
      ஈர் இரண்டு மால் வரைத் தோள் எம்மான்-தன்னை
தோய்ந்தானை நிலமகள் தோள் தூதில் சென்று அப்
      பொய் அறைவாய்ப் புகப் பெய்த மல்லர் மங்கக்
காய்ந்தானை எம்மானைக் கண்டுகொண்டேன்
      -கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே             (5)
   
1092கிடந்தானை தடங் கடலுள் பணங்கள் மேவி
      கிளர் பொறிய மறி திரிய அதனின்பின்னே
படர்ந்தானை படு மதத்த களிற்றின் கொம்பு
      பறித்தானை பார் இடத்தை எயிறு கீற
இடந்தானை வளை மருப்பின் ஏனம் ஆகி
      இரு நிலனும் பெரு விசும்பும் எய்தா வண்ணம்
கடந்தானை எம்மானைக் கண்டுகொண்டேன்-
      கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே            (6)
   
1093பேணாத வலி அரக்கர் மெலிய அன்று
      பெரு வரைத் தோள் இற நெரித்து அன்று அவுணர்-கோனைப்
பூண் ஆகம் பிளவு எடுத்த போர் வல்லோனை
      பொரு கடலுள் துயில் அமர்ந்த புள் ஊர்தியை
ஊண் ஆகப் பேய் முலை நஞ்சு உண்டான்-தன்னை
      உள்ளுவார் உள்ளத்தே உறைகின்றானைக்
காணாது திரிதருவேன் கண்டுகொண்டேன்-
      கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே             (7)
   
1094பெண் ஆகி இன் அமுதம் வஞ்சித்தானை
      பிரை எயிற்று அன்று அடல் அரியாய்ப் பெருகினானை
தண் ஆர்ந்த வார் புனல் சூழ் மெய்யம் என்னும்
      தட வரைமேல் கிடந்தானை பணங்கள் மேவி
எண்ணானை எண் இறந்த புகழினானை
      இலங்கு ஒளி சேர் அரவிந்தம் போன்று நீண்ட
கண்ணானைக் கண் ஆரக் கண்டுகொண்டேன்
      -கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே             (8)
   
1095தொண்டு ஆயார்-தாம் பரவும் அடியினானை
      படி கடந்த தாளாளற்கு ஆள் ஆய் உய்தல்
விண்டானை-தென் இலங்கை அரக்கர் வேந்தை
      -விலங்கு உண்ண வலங் கைவாய்ச் சரங்கள் ஆண்டு
பண்டு ஆய வேதங்கள் நான்கும் ஐந்து
      வேள்விகளும் கேள்வியோடு அங்கம் ஆறும்
கண்டானைத் தொண்டனேன் கண்டுகொண்டேன்
      -கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே            (9)
   
1096பட நாகத்து அணைக் கிடந்து அன்று அவுணர்-கோனைப்
      பட வெகுண்டு மருது இடை போய் பழன வேலித்
தடம் ஆர்ந்த கடல்மல்லைத் தலசயனத்துத்
      தாமரைக்கண் துயில் அமர்ந்த தலைவன்-தன்னைக்
கடம் ஆரும் கருங் களிறு வல்லான் வெல் போர்க்
      கலிகன்றி ஒலிசெய்த இன்பப் பாடல்
திடம் ஆக இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்
      தீவினையை முதல் அரிய வல்லார் தாமே             (10)