நாலாயிர திவ்ய பிரபந்தம்

இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி

திருக்கடல்மல்லை:2
1097நண்ணாத வாள் அவுணர் இடைப் புக்கு வானவரை
பெண் ஆகி அமுது ஊட்டும் பெருமானார் மருவினிய
தண் ஆர்ந்த கடல்மல்லைத் தலசயனத்து உறைவாரை
எண்ணாதே இருப்பாரை இறைப் பொழுதும் எண்ணோமே (1)
   
1098பார் வண்ண மட மங்கை பனி நல் மா மலர்க் கிழத்தி
நீர் வண்ணன் மார்வத்தில் இருக்கையை முன் நினைந்து அவன் ஊர்
கார்வண்ண முது முந்நீர்க் கடல்மல்லைத் தலசயனம்
ஆர் எண்ணும் நெஞ்சு உடையார்-அவர் எம்மை ஆள்வாரே             (2)
   
1099ஏனத்தின் உருவு ஆகி நில-மங்கை எழில் கொண்டான்
வானத்தில்-அவர் முறையால் மகிழ்ந்து ஏத்தி வலம் கொள்ள
கானத்தின் கடல்மல்லைத் தலசயனத்து உறைகின்ற
ஞானத்தின் ஒளி உருவை நினைவார் என் நாயகரே             (3)
   
1100விண்டாரை வென்று ஆவி விலங்கு உண்ண மெல் இயலார்
கொண்டாடும் மல் அகலம் அழல் ஏற வெம் சமத்துக்
கண்டாரை கடல்மல்லைத் தலசயனத்து உறைவாரைக்
கொண்டாடும் நெஞ்சு உடையார்-அவர் எங்கள் குலதெய்வமே (4)
   
1101பிச்சச் சிறு பீலிச் சமண் குண்டர் முதலாயோர்
விச்சைக்கு இறை என்னும் அவ் இறையைப் பணியாதே
கச்சிக் கிடந்தவன் ஊர் கடல்மல்லைத் தலசயனம்
நச்சித் தொழுவாரை நச்சு என் தன் நல் நெஞ்சே             (5)
   
1102புலன் கொள் நிதிக் குவையோடு புழைக் கை மா களிற்று இனமும்
நலம் கொள் நவமணிக் குவையும் சுமந்து எங்கும் நான்று ஒசிந்து
கலங்கள் இயங்கும் மல்லைக் கடல்மல்லைத் தலசயனம்
வலங்கொள் மனத்தார்-அவரை வலங்கொள் என் மட நெஞ்சே             (6)
   
1103பஞ்சிச் சிறு கூழை உரு ஆகி மருவாத
வஞ்சப் பெண் நஞ்சு உண்ட அண்ணல் முன் நண்ணா
கஞ்சைக் கடந்தவன் ஊர் கடல்மல்லைத் தலசயனம்
நெஞ்சில் தொழுவாரைத் தொழுவாய் என் தூய் நெஞ்சே            (7)
   
1104செழு நீர் மலர்க் கமலம் திரை உந்து வன் பகட்டால்
உழும் நீர் வயல் உழவர் உழ பின் முன் பிழைத்து எழுந்த
கழு நீர் கடி கமழும் கடல்மல்லைத் தலசயனம்
தொழும் நீர் மனத்தவரைத் தொழுவாய் என் தூய் நெஞ்சே            (8)
   
1105பிணங்கள் இடு காடு-அதனுள் நடம் ஆடு பிஞ்ஞகனோடு
இணங்கு திருச் சக்கரத்து எம் பெருமானார்க்கு இடம் விசும்பில்
கணங்கள் இயங்கும் மல்லைக் கடல்மல்லைத் தலசயனம்
வணங்கும் மனத்தார்-அவரை வணங்கு என்-தன் மட நெஞ்சே             (9)
   
1106கடி கமழும் நெடு மறுகின் கடல்மல்லைத் தலசயனத்து
அடிகள் அடியே நினையும் அடியவர்கள்-தம் அடியான்
வடி கொள் நெடு வேல் வலவன் கலிகன்றி ஒலி வல்லார்
முடி கொள் நெடு மன்னவர்-தம் முதல்வர் ஆவாரே             (10)