நாலாயிர திவ்ய பிரபந்தம்

இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி

திருப்பரமேச்சுரவிண்ணகரம்
1127சொல்லு வன் சொல் பொருள் தான் அவை ஆய்
      சுவை ஊறு ஒலி நாற்றமும் தோற்றமும் ஆய்
நல் அரன் நாரணன் நான்முகனுக்கு
      இடம்-தான்-தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி
பல்லவன் வில்லவன் என்று உலகில்
      பலராய்ப் பல வேந்தர் வணங்கு கழல்
பல்லவன் மல்லையர்-கோன் பணிந்த
      பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே             (1)
   
1128கார் மன்னு நீள் விசும்பும் கடலும்
      சுடரும் நிலனும் மலையும் தன் உந்தித்
தார் மன்னு தாமரைக்கண்ணன் இடம்-
      தடம் மா மதிள் சூழ்ந்து அழகு ஆய கச்சி
தேர் மன்னு தென்னவனை முனையில்
      செருவில் திறல் வாட்டிய திண் சிலையோன்
பார் மன்னு பல்லவர்-கோன் பணிந்த
      பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே             (2)
   
1129உரம் தரு மெல் அணைப் பள்ளி கொண்டான்
      ஒருகால் முன்னம் மா உருவாய்க் கடலுள்
வரம் தரு மா மணிவண்ணன் இடம்
      -மணி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி
நிரந்தவர் மண்ணையில் புண் நுகர் வேல்
      நெடு வாயில் உக செருவில் முன நாள்
பரந்தவன் பல்லவர்-கோன் பணிந்த
      பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே             (3)
   
1130அண்டமும் எண் திசையும் நிலனும்
      அலை நீரொடு வான் எரி கால் முதலா
உண்டவன் எந்தை பிரானது இடம்
      -ஒளி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி
விண்டவர் இண்டைக் குழாமுடனே
      விரைந்தார் இரிய செருவில் முனிந்து
பண்டு ஒருகால் வளைத்தான் பணிந்த
      பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே             (4)
   
1131தூம்பு உடைத் திண் கை வன் தாள் களிற்றின்
      துயர் தீர்த்து அரவம் வெருவ முன நாள்
பூம் புனல் பொய்கை புக்கான்-அவனுக்கு
      இடம்-தான்-தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி
தேம் பொழில் குன்று எயில் தென்னவனைத்
      திசைப்ப செருமேல் வியந்து அன்று சென்ற
பாம்பு உடைப் பல்லவர்-கோன் பணிந்த
      பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே             (5)
   
1132திண் படைக் கோளரியின் உரு ஆய்
      திறலோன் அகலம் செருவில் முன நாள்
புண் படப் போழ்ந்த பிரானது இடம்-
      பொரு மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி
வெண் குடை நீழல் செங்கோல் நடப்ப
      விடை வெல் கொடி வேல்-படை முன் உயர்த்த
பண்பு உடைப் பல்லவர்-கோன் பணிந்த
      பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே             (6)
   
1133இலகிய நீள் முடி மாவலி-தன்
      பெரு வேள்வியில் மாண் உரு ஆய் முன நாள்
சலமொடு மா நிலம் கொண்டவனுக்கு
      இடம்-தான்-தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி
உலகு உடை மன்னவன் தென்னவனைக்
      கன்னி மா மதிள் சூழ் கருவூர் வெருவ
பல படை சாய வென்றான் பணிந்த
      பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே             (7)
   
1134குடைத் திறல் மன்னவன் ஆய் ஒருகால்
      குரங்கைப் படையா மலையால் கடலை
அடைத்தவன் எந்தை பிரானது இடம்-
      அணி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி
விடைத் திறல் வில்லவன் நென்மெலியில்
      வெருவ செரு வேல் வலங் கைப் பிடித்த
படைத் திறல் பல்லவர்-கோன் பணிந்த
      பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே             (8)
   
1135பிறை உடை வாள் நுதல் பின்னைதிறத்து
      முன்னே ஒருகால் செருவில் உருமின்
மறை உடை மால் விடை ஏழ் அடர்த்தாற்கு
      இடம்-தான்-தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி
கறை உடை வாள் மற மன்னர் கெட
      கடல்போல முழங்கும் குரல் கடுவாய்ப்
பறை உடைப் பல்லவர்-கோன் பணிந்த
      பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே             (9)
   
1136பார் மன்னு தொல் புகழ்ப் பல்லவர்-கோன்
      பணிந்த பரமேச்சுரவிண்ணகர்மேல்
கார் மன்னு நீள் வயல் மங்கையர்-தம்
      தலைவன் கலிகன்றி குன்றாது உரைத்த
சீர் மன்னு செந்தமிழ் மாலை வல்லார்
      திரு மா மகள்-தன் அருளால் உலகில்
தேர் மன்னராய் ஒலி மா கடல் சூழ்
      செழு நீர் உலகு ஆண்டு திகழ்வர்களே            (10)