நாலாயிர திவ்ய பிரபந்தம்

இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி

திருக்கோவலூர்
1137மஞ்சு ஆடு வரை ஏழும் கடல்கள் ஏழும்
      வானகமும் மண்ணகமும் மற்றும் எல்லாம்
எஞ்சாமல் வயிற்று அடக்கி ஆலின்மேல் ஓர்
      இளந் தளிரில் கண்வளர்ந்த ஈசன் தன்னை-
துஞ்சா நீர் வளம் சுரக்கும் பெண்ணைத் தென்பால்
      தூய நான்மறையாளர் சோமுச் செய்ய
செஞ்சாலி விளை வயலுள் திகழ்ந்து தோன்றும்
      திருக்கோவலூர்-அதனுள்-கண்டேன் நானே            (1)
   
1138கொந்து அலர்ந்த நறுந் துழாய் சாந்தம் தூபம்
      தீபம் கொண்டு அமரர் தொழ பணம் கொள் பாம்பில்
சந்து அணி மென் முலை மலராள் தரணி-மங்கை
      தாம் இருவர் அடி வருடும் தன்மையானை-
வந்தனை செய்து இசை ஏழ் ஆறு அங்கம் ஐந்து
      வளர் வேள்வி நால் மறைகள் மூன்று தீயும்
சிந்தனை செய்து இருபொழுதும் ஒன்றும் செல்வத்
      திருக்கோவலூர்-அதனுள்-கண்டேன் நானே             (2)
   
1139கொழுந்து அலரும் மலர்ச் சோலைக் குழாம்கொள் பொய்கைக்
      கோள் முதலை வாள் எயிற்றுக் கொண்டற்கு எள்கி
அழுந்திய மா களிற்றினுக்கு அன்று ஆழி ஏந்தி
      அந்தரமே வரத் தோன்றி அருள் செய்தானை-
எழுந்த மலர்க் கரு நீலம் இருந்தில் காட்ட
      இரும் புன்னை முத்து அரும்பிச் செம் பொன்காட்ட
செழுந் தட நீர்க் கமலம் தீவிகைபோல் காட்டும்
      திருக்கோவலூர்-அதனுள்-கண்டேன் நானே             (3)
   
1140தாங்கு அரும் போர் மாலி படப் பறவை ஊர்ந்து
      தராதலத்தோர் குறை முடித்த தன்மையானை
ஆங்கு அரும்பிக் கண் நீர் சோர்ந்து அன்பு கூரும்
      அடியவர்கட்கு ஆர் அமுதம் ஆனான்-தன்னை-
கோங்கு அரும்பு சுரபுன்னை குரவு ஆர் சோலைக்
      குழாம் வரி வண்டு இசை பாடும் பாடல் கேட்டுத்
தீங் கரும்பு கண்வளரும் கழனி சூழ்ந்த
      திருக்கோவலூர்-அதனுள்-கண்டேன் நானே             (4)
   
1141கறை வளர் வேல் கரன் முதலாக் கவந்தன் வாலி
      கணை ஒன்றினால் மடிய இலங்கை-தன்னுள்
பிறை எயிற்று வாள் அரக்கர் சேனை எல்லாம்
      பெருந்தகையோடு உடன் துணித்த பெம்மான்-தன்னை-
மறை வளர புகழ் வளர மாடம்தோறும்
      மண்டபம் ஒண் தொளி அனைத்தும் வாரம் ஓத
சிறை அணைந்த பொழில் அணைந்த தென்றல் வீசும்
      திருக்கோவலூர்-அதனுள்-கண்டேன் நானே            (5)
   
1142உறி ஆர்ந்த நறு வெண்ணெய் ஒளியால் சென்று அங்கு
      உண்டானைக் கண்டு ஆய்ச்சி உரலோடு ஆர்க்க
தறி ஆர்ந்த கருங் களிறே போல நின்று
      தடங் கண்கள் பனி மல்கும் தன்மையானை-
வெறி ஆர்ந்த மலர்-மகள் நா-மங்கையோடு
      வியன் கலை எண் தோளினாள் விளங்கு செல்வச்
செறி ஆர்ந்த மணி மாடம் திகழ்ந்து தோன்றும்
      திருக்கோவலூர்-அதனுள்-கண்டேன் நானே             (6)
   
1143இருங் கை மா கரி முனிந்து பரியைக் கீறி
      இன விடைகள் ஏழ் அடர்த்து மருதம் சாய்த்து
வரும் சகடம் இற உதைத்து மல்லை அட்டு
      வஞ்சம் செய் கஞ்சனுக்கு நஞ்சு ஆனானை-
கருங் கமுகு பசும் பாளை வெண் முத்து ஈன்று
      காய் எல்லாம் மரகதம் ஆய் பவளம் காட்ட
செருந்தி மிக மொட்டு அலர்த்தும் தேன் கொள் சோலைத்
      திருக்கோவலூர்-அதனுள்-கண்டேன் நானே (7)
   
1144பார் ஏறு பெரும் பாரம் தீரப் பண்டு
      பாரதத்துத் தூது இயங்கி பார்த்தன் செல்வத்
தேர் ஏறு சாரதி ஆய் எதிர்ந்தார் சேனை
      செருக்களத்துத் திறல் அழியச் செற்றான்-தன்னை-
போர் ஏறு ஒன்று உடையானும் அளகைக் கோனும்
      புரந்தரனும் நான்முகனும் பொருந்தும் ஊர்போல்
சீர் ஏறு மறையாளர் நிறைந்த செல்வத்
      திருக்கோவலூர்-அதனுள்-கண்டேன் நானே             (8)
   
1145தூ வடிவின் பார்-மகள் பூ-மங்கையோடு
      சுடர் ஆழி சங்கு இருபால் பொலிந்து தோன்ற
காவடிவின் கற்பகமே போல நின்று
      கலந்தவர்கட்கு அருள்புரியும் கருத்தினானை
சேவடி கை திருவாய் கண் சிவந்த ஆடை
      செம் பொன் செய் திரு உருவம் ஆனான்-தன்னை-
தீ வடிவின் சிவன் அயனே போல்வார் மன்னு
      திருக்கோவலூர்-அதனுள்-கண்டேன் நானே             (9)
   
1146வாரணம் கொள் இடர் கடிந்த மாலை நீல
      மரகதத்தை மழை முகிலே போல்வான்-தன்னைச்
சீர் அணங்கு மறையாளர் நிறைந்த செல்வத்
      திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் என்று
வார் அணங்கு முலை மடவார் மங்கை வேந்தன்
      வாட் கலியன் ஒலி ஐந்தும் ஐந்தும் வல்லார
காரணங்களால் உலகம் கலந்து அங்கு ஏத்த
      கரந்து எங்கும் பரந்தானைக் காண்பர்-தாமே             (10)