நாலாயிர திவ்ய பிரபந்தம்

இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி

திருவயிந்திரபுரம்
1147இருந் தண் மா நிலம் ஏனம்-அது ஆய் வளை
      மருப்பினில் அகத்து ஒடுக்கி
கருந் தண் மா கடல் கண் துயின்றவன் இடம்-
      கமல நல் மலர்த் தேறல்
அருந்தி இன் இசை முரன்று எழும் அளி குலம்
      பொதுளி அம் பொழிலூடே
செருந்தி நாள் மலர் சென்று அணைந்து உழிதரு
      திருவயிந்திரபுரமே             (1)
   
1148மின்னும் ஆழி அங்கையவன் செய்யவள்
      உறை தரு திரு மார்பன்
பன்னு நான்மறைப் பல் பொருள் ஆகிய
      பரன் இடம்-வரைச் சாரல்
பின்னும் மாதவிப் பந்தலில் பெடை வர
      பிணி அவிழ் கமலத்துத்
தென்ன என்று வண்டு இன் இசை முரல்தரு
      திருவயிந்திரபுரமே             (2)
   
1149வையம் ஏழும் உண்டு ஆல் இலை வைகிய
      மாயவன் அடியவர்க்கு
மெய்யன் ஆகிய தெய்வநாயகன் இடம்-
      மெய்தகு வரைச் சாரல்
மொய் கொள் மாதவி சண்பகம் முயங்கிய
      முல்லை அம் கொடி ஆட
செய்ய தாமரைச் செழும் பணை திகழ்தரு
      திருவயிந்திரபுரமே             (3)
   
1150மாறு கொண்டு உடன்று எதிர்ந்த வல் அவுணன்-தன்
      மார்பு-அகம் இரு பிளவாக்
கூறு கொண்டு அவன் குலமகற்கு இன் அருள்
      கொடுத்தவன் இடம்-மிடைந்து
சாறு கொண்ட மென் கரும்பு இளங் கழை தகை
      விசும்பு உற மணி நீழல்
சேறு கொண்ட தண் பழனம்-அது எழில் திகழ்
      திருவயிந்திரபுரமே             (4)
   
1151ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று
      அகல் இடம் அளந்து ஆயர்
பூங் கொடிக்கு இன விடை பொருதவன் இடம்
      -பொன் மலர் திகழ் வேங்கை
கோங்கு செண்பகக் கொம்பினில் குதிகொடு
      குரக்கினம் இரைத்து ஓடி
தேன் கலந்த தண் பலங்கனி நுகர்தரு
      திருவயிந்திரபுரமே             (5)
   
1152கூன் உலாவிய மடந்தை-தன் கொடுஞ் சொலின்
      திறத்து இளங் கொடியோடும்
கான் உலாவிய கரு முகில் திரு நிறத்தவன்
      இடம்-கவின் ஆரும்
வான் உலாவிய மதி தவழ் மால் வரை
      மா மதிள் புடை சூழ
தேன் உலாவிய செழும் பொழில் தழுவிய
      திருவயிந்திரபுரமே             (6)
   
1153மின்னின் நுண் இடை மடக் கொடி காரணம்
      விலங்கலின்மிசை இலங்கை
மன்னன் நீள் முடி பொடிசெய்த மைந்தனது
      இடம்-மணி வரை நீழல்
அன்னம் மா மலர் அரவிந்தத்து அமளியில்
      பெடையொடும் இனிது அமர
செந்நெல் ஆர் கவரிக் குலை வீசு தண்
      திருவயிந்திரபுரமே             (7)
   
1154விரை கமழ்ந்த மென் கருங் குழல் காரணம்
      வில் இறுத்து அடல் மழைக்கு
நிரை கலங்கிட வரை குடை எடுத்தவன்
      நிலவிய இடம்-தடம் ஆர்
வரை வளம் திகழ் மத கரி மருப்பொடு
      மலை வளர் அகில் உந்தித்
திரை கொணர்ந்து அணை செழு நதி வயல் புகு
      திருவயிந்திரபுரமே             (8)
   
1155வேல் கொள் கைத் தலத்து அரசர் வெம் போரினில்
      விசயனுக்கு ஆய் மணித் தேர்
கோல் கொள் கைத் தலத்து எந்தை பெம்மான் இடம்-
      குலவு தண் வரைச் சாரல்
கால் கொள் கண் கொடி கைஎழ கமுகு இளம்
      பாளைகள் கமழ் சாரல்
சேல்கள் பாய்தரு செழு நதி வயல் புகு
      திருவயிந்திரபுரமே             (9)
   
1156மூவர் ஆகிய ஒருவனை மூவுலகு
      உண்டு உமிழ்ந்து அளந்தானை
தேவர் தானவர் சென்று சென்று இறைஞ்ச தண்
      திருவயிந்திரபுரத்து
மேவு சோதியை வேல் வலவன் கலி
      கன்றி விரித்து உரைத்த
பாவு தண் தமிழ்ப் பத்து இவை பாடிடப்
      பாவங்கள் பயிலாவே             (10)