நாலாயிர திவ்ய பிரபந்தம்

இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி

தில்லைத் திருச்சித்திரகூடம் 1
1157ஊன் வாட உண்ணாது உயிர் காவல் இட்டு
      உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து
தாம் வாட வாடத் தவம் செய்ய வேண்டா-
      தமதா இமையோர் உலகு ஆளகிற்பீர்
கான் ஆட மஞ்ஞைக் கணம் ஆட மாடே
      கயல் ஆடு கால் நீர்ப் பழனம் புடைபோய்த்
தேன் ஆட மாடக் கொடி ஆடு தில்லைத்
      திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே             (1)
   
1158காயோடு நீடு கனி உண்டு வீசு
      கடுங் கால் நுகர்ந்து நெடுங் காலம் ஐந்து
தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா
      -திரு மார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்
வாய் ஓது வேதம் மலிகின்ற தொல்சீர்
      மறையாளர் நாளும் முறையால் வளர்த்த
தீ ஓங்க ஓங்கப் புகழ் ஓங்கு தில்லைத்
      திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே             (2)
   
1159வெம்பும் சினத்துப் புனக் கேழல் ஒன்று ஆய்
      விரி நீர் முது வெள்ளம் உள்புக்கு அழுந்த
வம்பு உண் பொழில் சூழ் உலகு அன்று எடுத்தான்
      அடிப்போது அணைவான் விருப்போடு இருப்பீர
பைம் பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து
      படை மன்னவன் பல்லவர்- கோன் பணிந்த
செம் பொன் மணி மாடங்கள் சூழ்ந்த தில்லைத்
      திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே             (3)
   
1160அரு மா நிலம் அன்று அளப்பான் குறள் ஆய்
      அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த
பெருமான் திருநாமம் பிதற்றி நும்-தம்
      பிறவித் துயர் நீங்குதும் என்னகிற்பீர்
கரு மா கடலுள் கிடந்தான் உவந்து
      கவை நா அரவின்-அணைப் பள்ளியின்மேல்
திருமால் திருமங்கையொடு ஆடு தில்லைத்
      திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே             (4)
   
1161கோ மங்க வங்கக் கடல் வையம் உய்ய
      குல மன்னர் அங்கம் மழுவில் துணிய
தாம் அங்கு அமருள் படை தொட்ட வென்றித்
      தவ மா முனியைத் தமக்கு ஆக்ககிற்பீர்
பூ-மங்கை தங்கி புல-மங்கை மன்னி
      புகழ்-மங்கை எங்கும் திகழ புகழ் சேர்
சேமம் கொள் பைம் பூம் பொழில் சூழ்ந்த தில்லைத்
      திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே (5)
   
1162நெய் வாய் அழல் அம்பு துரந்து முந்நீர்
      துணியப் பணிகொண்டு அணி ஆர்ந்து இலங்கு
மை ஆர் மணிவண்ணனை எண்ணி நும்-தம்
      மனத்தே இருத்தும்படி வாழவல்லீர்
அவ் வாய் இள மங்கையர் பேசவும் தான்
      அரு மா மறை அந்தணர் சிந்தை புக
செவ் வாய்க் கிளி நான்மறை பாடு தில்லைத்
      திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே             (6)
   
1163மௌவல் குழல் ஆய்ச்சி மென் தோள் நயந்து
      மகரம் சுழலச் சுழல் நீர் பயந்த
தெய்வத் திரு மா மலர் மங்கை தங்கு
      திருமார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்
கௌவைக் களிற்றின் மருப்பும் பொருப்பில்
      கமழ் சந்தும் உந்தி நிவா வலம் கொள்
தெய்வப் புனல் சூழ்ந்து அழகு ஆய தில்லைத்
      திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே            (7)
   
1164மா வாயின் அங்கம் மதியாது கீறி
      மழை மா முது குன்று எடுத்து ஆயர்-தங்கள்
கோ ஆய் நிரை மேய்த்து உலகு உண்ட மாயன்
      குரை மா கழல் கூடும் குறிப்பு உடையீர்
மூவாயிரம் நான்மறையாளர் நாளும்
      முறையால் வணங்க அணங்கு ஆய சோதித்
தேவாதிதேவன் திகழ்கின்ற தில்லைத்
      திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே             (8)
   
1165செரு நீல வேல் கண் மடவார்திறத்துச்
      சினத்தோடு நின்று மனத்தால் வளர்க்கும்
அரு நீல பாவம் அகல புகழ் சேர்
      அமரர்க்கும் எய்தாத அண்டத்து இருப்பீர்
பெரு நீர் நிவா உந்தி முத்தம் கொணர்ந்து எங்கும்
      வித்தும் வயலுள் கயல் பாய்ந்து உகள
திரு நீலம் நின்று திகழ்கின்ற தில்லைத்
      திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே             (9)
   
1166சீர் ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய தில்லைத்
      திருச்சித்ரகூடத்து உறை செங் கண் மாலுக்கு
ஆராத உள்ளத்தவர் கேட்டு உவப்ப
      அலை நீர் உலகுக்கு அருளே புரியும்
கார் ஆர் புயல் கைக் கலிகன்றி குன்றா
      ஒலி மாலை ஓர் ஒன்பதோடு ஒன்றும் வல்லார்
பார் ஆர் உலகம் அளந்தான் அடிக்கீழ்ப்
      பல காலம் நிற்கும்படி வாழ்வர்-தாமே             (10)