இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி
|
| திருக்காழிச் சீராமவிண்ணகரம் |
| 1177 | ஒரு குறள் ஆய் இரு நிலம் மூவடி மண் வேண்டி உலகு அனைத்தும் ஈர் அடியால் ஒடுக்கி ஒன்றும் தருக எனா மாவலியைச் சிறையில் வைத்த தாடாளன் தாள் அணைவீர் தக்க கீர்த்தி அரு மறையின் திரள் நான்கும் வேள்வி ஐந்தும் அங்கங்கள்-அவை ஆறும் இசைகள் ஏழும் தெருவில் மலி விழா வளமும் சிறக்கும் காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே (1) | |
|
| |
|
|
| 1178 | நான்முகன் நாள் மிகைத் தருக்கை இருக்கு வாய்மை நலம் மிகு சீர் உரோமசனால் நவிற்றி நக்கன் ஊன்முகம் ஆர் தலை ஓட்டு ஊண் ஒழித்த எந்தை ஒளி மலர்ச் சேவடி அணைவீர் உழு சே ஓடச் சூல் முகம் ஆர் வளை அளைவாய் உகுத்த முத்தைத் தொல் குருகு சினை எனச் சூழ்ந்து இயங்க எங்கும் தேன் முகம் ஆர் கமல வயல் சேல் பாய் காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே (2) | |
|
| |
|
|
| 1179 | வை அணைந்த நுதிக் கோட்டு வராகம் ஒன்று ஆய் மண் எல்லாம் இடந்து எடுத்து மதங்கள் செய்து நெய் அணைந்த திகிரியினால் வாணன் திண் தோள் நேர்த்தவன் தாள் அணைகிற்பீர் நெய்தலோடு மை அணைந்த குவளைகள் தம் கண்கள் என்றும் மலர்க் குமுதம் வாய் என்றும் கடைசிமார்கள் செய் அணைந்து களை களையாது ஏறும் காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே (3) | |
|
| |
|
|
| 1180 | பஞ்சிய மெல் அடிப் பின்னைதிறத்து முன் நாள் பாய் விடைகள் ஏழ் அடர்த்து பொன்னன் பைம் பூண் நெஞ்சு இடந்து குருதி உக உகிர் வேல் ஆண்ட நின்மலன் தாள் அணைகிற்பீர் நீலம் மாலைத் தஞ்சு உடைய இருள் தழைப்ப தரளம் ஆங்கே தண் மதியின் நிலாக் காட்ட பவளம்-தன்னால் செஞ் சுடர் வெயில் விரிக்கும் அழகு ஆர் காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே (4) | |
|
| |
|
|
| 1181 | தெவ் ஆய மற மன்னர் குருதி கொண்டு திருக் குலத்தில் இறந்தோர்க்குத் திருத்திசெய்து வெவ் வாய மா கீண்டு வேழம் அட்ட விண்ணவர்-கோன் தாள் அணைவீர் விகிர்த மாதர் அவ் ஆய வாள் நெடுங் கண் குவளை காட்ட அரவிந்தம் முகம் காட்ட அருகே ஆம்பல் செவ் வாயின் திரள் காட்டும் வயல் சூழ் காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே (5) | |
|
| |
|
|
| 1182 | பைங் கண் விறல் செம் முகத்து வாலி மாள படர் வனத்துக் கவந்தனொடும் படை ஆர் திண் கை வெம் கண் விறல் விராதன் உக வில் குனித்த விண்ணவர்-கோன் தாள் அணைவீர் வெற்புப்பாலும துங்க முக மாளிகை மேல் ஆயம் கூறும் துடி இடையார் முகக் கமலச் சோதி-தன்னால் திங்கள் முகம் பனி படைக்கும் அழகு ஆர் காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே (6) | |
|
| |
|
|
| 1183 | பொரு இல் வலம் புரி அரக்கன் முடிகள் பத்தும் புற்று மறிந்தன போலப் புவிமேல் சிந்த செருவில் வலம் புரி சிலைக் கை மலைத் தோள் வேந்தன் திருவடி சேர்ந்து உய்கிற்பீர் திரை நீர்த் தெள்கி மருவி வலம்புரி கைதைக் கழி ஊடு ஆடி வயல் நண்ணி மழை தரு நீர் தவழ் கால் மன்னி தெருவில் வலம்புரி தரளம் ஈனும் காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே (7) | |
|
| |
|
|
| 1184 | பட்டு அரவு ஏர் அகல் அல்குல் பவளச் செவ் வாய் பணை நெடுந் தோள் பிணை நெடுங் கண் பால் ஆம் இன்சொல் மட்டு அவிழும் குழலிக்கா வானோர் காவின் மரம் கொணர்ந்தான் அடி அணைவீர் அணில்கள் தாவ நெட்டு இலைய கருங் கமுகின் செங் காய் வீழ நீள் பலவின் தாழ் சினையில் நெருங்கு பீனத் தெட்ட பழம் சிதைந்து மதுச் சொரியும் காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே (8) | |
|
| |
|
|
| 1185 | பிறை தங்கு சடையானை வலத்தே வைத்து பிரமனைத் தன் உந்தியிலே தோற்றுவித்து கறை தங்கு வேல் தடங் கண் திருவை மார்பில் கலந்தவன் தாள் அணைகிற்பீர் கழுநீர் கூடி துறை தங்கு கமலத்துத் துயின்று கைதைத் தோடு ஆரும் பொதி சோற்றுச் சுண்ணம் நண்ணி சிறை வண்டு களி பாடும் வயல் சூழ் காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே (9) | |
|
| |
|
|
| 1186 | செங் கமலத்து அயன் அனைய மறையோர் காழிச் சீராமவிண்ணகர் என் செங் கண் மாலை அம் கமலத் தட வயல் சூழ் ஆலி நாடன் அருள் மாரி அரட்டு அமுக்கி அடையார் சீயம் கொங்கு மலர்க் குழலியர் வேள் மங்கை வேந்தன் கொற்ற வேல் பரகாலன் கலியன் சொன்ன சங்க முகத் தமிழ்-மாலை பத்தும் வல்லார் தடங் கடல் சூழ் உலகுக்குத் தலைவர் தாமே (10) | |
|
| |
|
|