நாலாயிர திவ்ய பிரபந்தம்

இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி

திருவாலி:2
1197தூ விரிய மலர் உழக்கி துணையோடும் பிரியாதே
பூ விரிய மது நுகரும் பொறி வரிய சிறு வண்டே
தீ விரிய மறை வளர்க்கும் புகழ் ஆளர் திருவாலி
ஏ வரி வெம் சிலையானுக்கு என் நிலைமை உரையாயே (1)
   
1198பிணி அவிழு நறு நீல மலர் கிழிய பெடையோடும்   
அணி மலர்மேல் மது நுகரும் அறு கால சிறு வண்டே   
மணி கழுநீர் மருங்கு அலரும் வயல் ஆலி மணவாளன்   
பணி அறியேன் நீ சென்று என் பயலை நோய் உரையாயே (2)
   
1199நீர் வானம் மண் எரி கால் ஆய்நின்ற நெடுமால்-தன்
தார் ஆய நறுந் துளவம் பெறும் தகையேற்கு அருளானே
சீர் ஆரும் வளர் பொழில் சூழ் திருவாலி வயல் வாழும்
கூர் வாய சிறு குருகே குறிப்பு அறிந்து கூறாயே             (3)
   
1200தானாக நினையானேல் தன் நினைந்து நைவேற்கு ஓர்
மீன் ஆய கொடி நெடு வேள் வலி செய்ய மெலிவேனோ?
தேன் வாய வரி வண்டே திருவாலி நகர் ஆளும்   
ஆன்-ஆயற்கு என் உறு நோய் அறிய சென்று உரையாயே (4)
   
1201வாள் ஆய கண் பனிப்ப மென் முலைகள் பொன் அரும்ப
நாள் நாளும் நின் நினைந்து நைவேற்கு ஓ மண் அளந்த
தாளாளா தண் குடந்தை நகராளா வரை எடுத்த     
தோளாளா என்-தனக்கு ஓர் துணையாளன் ஆகாயே    (5)
   
1202தார் ஆய தன் துளவம் வண்டு உழுதவரை மார்பன்
போர் ஆனைக் கொம்பு ஒசித்த புள் பாகன் என் அம்மான்
தேர் ஆரும் நெடு வீதித் திருவாலி நகர் ஆளும்
கார் ஆயன் என்னுடைய கன வளையும் கவர்வானோ?             (6)
   
1203கொண்டு அரவத் திரை உலவு குரை கடல்மேல் குலவரைபோல்
பண்டு அரவின் அணைக் கிடந்து பார் அளந்த பண்பாளா
வண்டு அமரும் வளர் பொழில் சூழ் வயல் ஆலி மைந்தா என்
கண் துயில் நீ கொண்டாய்க்கு என் கன வளையும் கடவேனோ? (7)
   
1204குயில் ஆலும் வளர் பொழில் சூழ் தண் குடந்தைக் குடம் ஆடி
துயிலாத கண்_இணையேன் நின் நினைந்து துயர்வேனோ?
முயல் ஆலும் இள மதிக்கே வளை இழந்தேற்கு இது நடுவே
வயல் ஆலி மணவாளா கொள்வாயோ மணி நிறமே?             (8)
   
1205நிலை ஆளா நின் வணங்க வேண்டாயே ஆகிலும் என்
முலை ஆள ஒருநாள் உன் அகலத்தால் ஆளாயே
சிலையாளா மரம் எய்த திறல் ஆளா திருமெய்ய
மலையாளா நீ ஆள வளை ஆள மாட்டோமே             (9)
   
1206மை இலங்கு கருங் குவளை மருங்கு அலரும் வயல் ஆலி
நெய் இலங்கு சுடர் ஆழிப் படையானை நெடுமாலை   
கை இலங்கு வேல் கலியன் கண்டு உரைத்த தமிழ்-மாலை
ஐ இரண்டும் இவை வல்லார்க்கு அரு வினைகள் அடையாவே (10)