| இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார்
 பெரிய திருமொழி
 
 | 
		| திருநாங்கூர் அரிமேயவிண்ணகரம் | 
					
			
			
      | | 1237 | திரு மடந்தை மண் மடந்தை இருபாலும் திகழத் தீவினைகள் போய் அகல அடியவர்கட்கு என்றும்
 அருள் நடந்து இவ் ஏழ் உலகத்தவர் பணிய வானோர்
 அமர்ந்து ஏத்த இருந்த இடம்-பெரும் புகழ் வேதியர் வாழ்-
 தரும் இடங்கள் மலர்கள் மிகு கைதைகள் செங்கழுநீர்
 தாமரைகள் தடங்கள்தொறும் இடங்கள்தொறும் திகழ
 அரு இடங்கள் பொழில் தழுவி எழில் திகழும் நாங்கூர்
 அரிமேயவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே             (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1238 | வென்றி மிகு நரகன் உரம்-அது அழிய விசிறும் விறல் ஆழித் தடக் கையன் விண்ணவர்கட்கு அன்று
 குன்று கொடு குரை கடலைக் கடைந்து அமுதம் அளிக்கும்
 குருமணி என் ஆர் அமுதம் குலவி உறை கோயில்-
 என்றும் மிகு பெருஞ் செல்வத்து எழில் விளங்கு மறையோர்
 ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெருங் குணத்தோர்
 அன்று உலகம் படைத்தவனை அனையவர்கள் நாங்கூர்
 அரிமேயவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே             (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1239 | உம்பரும் இவ் ஏழ் உலகும் ஏழ் கடலும் எல்லாம் உண்ட பிரான் அண்டர்கள் முன் கண்டு மகிழ்வு எய்தக்
 கும்பம் மிகு மத யானை மருப்பு ஒசித்து கஞ்சன்
 குஞ்சி பிடித்து அடித்த பிரான் கோயில்-மருங்கு எங்கும்
 பைம் பொனொடு வெண் முத்தம் பல புன்னை காட்ட
 பலங்கனிகள் தேன் காட்ட பட அரவு ஏர் அல்குல்
 அம்பு அனைய கண் மடவார் மகிழ்வு எய்தும் நாங்கூர்
 அரிமேயவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே             (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1240 | ஓடாத ஆள் அரியின் உருவம்-அது கொண்டு அன்று உலப்பில் மிகு பெரு வரத்த இரணியனைப் பற்றி
 வாடாத வள் உகிரால் பிளந்து அவன்-தன் மகனுக்கு
 அருள்செய்தான் வாழும் இடம்-மல்லிகை செங்கழுநீர்
 சேடு ஏறு மலர்ச் செருந்தி செழுங் கமுகம் பாளை
 செண்பகங்கள் மணம் நாறும் வண் பொழிலின் ஊடே
 ஆடு ஏறு வயல் ஆலைப் புகை கமழும் நாங்கூர்
 அரிமேயவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே             (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1241 | கண்டவர்-தம் மனம் மகிழ மாவலி-தன் வேள்விக் களவு இல் மிகு சிறு குறள் ஆய் மூவடி என்று இரந்திட்டு
 அண்டமும் இவ் அலை கடலும் அவனிகளும் எல்லாம்
 அளந்த பிரான் அமரும் இடம்-வளங் கொள் பொழில் அயலே
 அண்டம் உறு முழவு ஒலியும் வண்டு இனங்கள் ஒலியும்
 அரு மறையின் ஒலியும் மடவார் சிலம்பின் ஒலியும்
 அண்டம் உறும் அலை கடலின் ஒலி திகழும் நாங்கூர்
 அரிமேயவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே      (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1242 | வாள் நெடுங் கண் மலர்க் கூந்தல் மைதிலிக்கா இலங்கை மன்னன் முடி ஒருபதும் தோள் இருபதும் போய் உதிரத்
 தாள் நெடுந் திண் சிலை வளைத்த தயரதன் சேய் என்-தன்
 தனிச் சரண் வானவர்க்கு அரசு கருதும் இடம்-தடம் ஆர்
 சேண் இடம் கொள் மலர்க் கமலம் சேல் கயல்கள் வாளை
 செந்நெலொடும் அடுத்து அரிய உதிர்ந்த செழு முத்தம்
 வாள் நெடுங் கண் கடைசியர்கள் வாரும் அணி நாங்கூர்
 அரிமேயவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே             (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1243 | தீ மனத்தான் கஞ்சனது வஞ்சனையில் திரியும் தேனுகனும் பூதனை-தன் ஆர் உயிரும் செகுத்தான்
 காமனைத்தான் பயந்த கரு மேனி உடை அம்மான்
 கருதும் இடம்-பொருது புனல் துறை துறை முத்து உந்தி
 நா மனத்தால் மந்திரங்கள் நால் வேதம் ஐந்து
 வேள்வியோடு ஆறு அங்கம் நவின்று கலை பயின்று அங்கு
 ஆம் மனத்து மறையவர்கள் பயிலும் அணி நாங்கூர்
 அரிமேயவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே   (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1244 | கன்று-அதனால் விளவு எறிந்து கனி உதிர்த்த காளை காமரு சீர் முகில் வண்ணன் காலிகள் முன் காப்பான்
 குன்று-அதனால் மழை தடுத்து குடம் ஆடு கூத்தன்
 குலவும் இடம்-கொடி மதிள்கள் மாளிகை கோபுரங்கள்
 துன்று மணி மண்டபங்கள் சாலைகள் தூ மறையோர்
 தொக்கு ஈண்டித் தொழுதியொடு மிகப் பயிலும் சோலை
 அன்று அலர்வாய் மது உண்டு அங்கு அளி முரலும் நாங்கூர்
 அரிமேயவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே            (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1245 | வஞ்சனையால் வந்தவள்-தன் உயிர் உண்டு வாய்த்த தயிர் உண்டு வெண்ணெய் அமுது உண்டு வலி மிக்க
 கஞ்சன் உயிர்-அது உண்டு இவ் உலகு உண்ட காளை
 கருதும் இடம்-காவிரி சந்து அகில் கனகம் உந்தி
 மஞ்சு உலவு பொழிலூடும் வயலூடும் வந்து
 வளம் கொடுப்ப மா மறையோர் மா மலர்கள் தூவி
 அஞ்சலித்து அங்கு அரி சரண் என்று இறைஞ்சும் அணி நாங்கூர்
 அரிமேயவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே            (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1246 | சென்று சின விடை ஏழும் பட அடர்ந்து பின்னை செவ்வித் தோள் புணர்ந்து உகந்த திருமால்-தன் கோயில்
 அன்று அயனும் அரன் சேயும் அனையவர்கள் நாங்கூர்
 அரிமேயவிண்ணகரம் அமர்ந்த செழுங் குன்றை
 கன்றி நெடு வேல் வலவன் மங்கையர்-தம் கோமான்
 கலிகன்றி ஒலி மாலை ஐந்தினொடு மூன்றும்
 ஒன்றினொடும் ஒன்றும் இவை கற்று வல்லார் உலகத்து
 உத்தமர்கட்கு உத்தமர் ஆய் உம்பரும் ஆவர்களே            (10)
 | 
 |  | 
		
			|  |  |  |