| இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார்
 பெரிய திருமொழி
 
 | 
		| திருநாங்கூர்த் திருத்தேவனார்தொகை | 
					
			
			
      | | 1247 | போது அலர்ந்த பொழில் சோலைப் புறம் எங்கும் பொரு திரைகள் தாது உதிர வந்து அலைக்கும் தட மண்ணித் தென் கரைமேல்
 மாதவன்-தான் உறையும் இடம் வயல் நாங்கை-வரி வண்டு
 தேதென என்று இசை பாடும்-திருத்தேவனார்தொகையே             (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1248 | யாவரும் ஆய் யாவையும் ஆய் எழில் வேதப் பொருள்களும் ஆய் மூவரும் ஆய் முதல் ஆய மூர்த்தி அமர்ந்து உறையும் இடம்
 மா வரும் திண் படை மன்னை வென்றி கொள்வார் மன்னு நாங்கை-
 தேவரும் சென்று இறைஞ்சு பொழில்-திருத்தேவனார்தொகையே             (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1249 | வான் நாடும் மண் நாடும் மற்று உள்ள பல் உயிரும் தான் ஆய எம் பெருமான் தலைவன் அமர்ந்து உறையும் இடம்
 ஆனாத பெருஞ் செல்வத்து அரு மறையோர் நாங்கை-தன்னுள்__
 தேன் ஆரும் மலர்ப் பொழில் சூழ்-திருத்தேவனார்தொகையே 3
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1250 | இந்திரனும் இமையவரும் முனிவர்களும் எழில் அமைந்த சந்த மலர்ச் சதுமுகனும் கதிரவனும் சந்திரனும்
 எந்தை எமக்கு அருள் என நின்றருளும் இடம் எழில் நாங்கை-
 சுந்தர நல் பொழில் புடை சூழ்-திருத்தேவனார்தொகையே             (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1251 | அண்டமும் இவ் அலை கடலும் அவனிகளும் குல வரையும் உண்ட பிரான் உறையும் இடம் ஒளி மணி சந்து அகில் கனகம்
 தெண் திரைகள் வரத் திரட்டும் திகழ் மண்ணித் தென் கரைமேல்
 திண் திறலார் பயில்-நாங்கைத் திருத்தேவனார்தொகையே             (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1252 | ஞாலம் எல்லாம் அமுது செய்து நான்மறையும் தொடராத பாலகன் ஆய் ஆல் இலையில் பள்ளிகொள்ளும் பரமன் இடம்
 சாலி வளம் பெருகி வரும் தட மண்ணித் தென் கரைமேல்
 சேல் உகளும் வயல்-நாங்கைத் திருத்தேவனார்தொகையே             (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1253 | ஓடாத ஆளரியின் உரு ஆகி இரணியனை வாடாத வள் உகிரால் பிளந்து அளைந்த மாலது இடம்
 ஏடு ஏறு பெருஞ் செல்வத்து எழில் மறையோர் நாங்கை-தன்னுள்-
 சேடு ஏறு பொழில் தழுவு-திருத்தேவனார்தொகையே             (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1254 | வார் ஆரும் இளங் கொங்கை மைதிலியை மணம் புணர்வான் கார் ஆர் திண் சிலை இறுத்த தனிக் காளை கருதும் இடம்
 ஏர் ஆரும் பெருஞ் செல்வத்து எழில் மறையோர் நாங்கை-தன்னுள்-
 சீர் ஆரும் மலர்ப் பொழில் சூழ்-திருத்தேவனார்தொகையே             (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1255 | கும்பம் மிகு மத யானை பாகனொடும் குலைந்து வீழ கொம்பு-அதனைப் பறித்து எறிந்த கூத்தன் அமர்ந்து உறையும் இடம்
 வம்பு அவிழும் செண்பகத்து மணம் கமழும் நாங்கை-தன்னுள்-
 செம் பொன் மதிள் பொழில் புடைசூழ்-திருத்தேவனார்தொகையே             (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1256 | கார் ஆர்ந்த திருமேனிக் கண்ணன் அமர்ந்து உறையும் இடம் சீர் ஆர்ந்த பொழில் நாங்கைத் திருத்தேவனார்தொகைமேல்
 கூர் ஆர்ந்த வேல் கலியன் கூறு தமிழ்ப் பத்தும் வல்லார்
 ஏர் ஆர்ந்த வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே             (10)
 | 
 |  | 
		
			|  |  |  |