நாலாயிர திவ்ய பிரபந்தம்

இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி

திருநாங்கூர்க் காவளம்பாடி
1297தா அளந்து உலகம் முற்றும்
      தட மலர்ப் பொய்கை புக்கு
நா வளம் நவின்று அங்கு ஏத்த
      நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய்
மா வளம் பெருகி மன்னும்
      மறையவர் வாழும் நாங்கைக்
காவளம்பாடி மேய
      கண்ணனே களைகண் நீயே             (1)
   
1298மண் இடந்து ஏனம் ஆகி
      மாவலி வலி தொலைப்பான்
விண்ணவர் வேண்டச் சென்று
      வேள்வியில் குறை இரந்தாய்
துண் என மாற்றார்-தம்மைத்
      தொலைத்தவர் நாங்கை மேய
கண்ணனே காவளம் தண்
      பாடியாய் களைகண் நீயே             (2)
   
1299உருத்து எழு வாலி மார்வில்
      ஒரு கணை உருவ ஓட்டி   
கருத்து உடைத் தம்பிக்கு இன்பக்
      கதிர் முடி அரசு அளித்தாய்
பருத்து எழு பலவும் மாவும்
      பழம் விழுந்து ஒழுகும் நாங்கைக்
கருத்தனே காவளம் தண்
      பாடியாய் களைகண் நீயே             (3)
   
1300முனைமுகத்து அரக்கன் மாள
      முடிகள் பத்து அறுத்து வீழ்த்து ஆங்கு
அனையவற்கு இளையவற்கே
      அரசு அளித்து அருளினானே
சுனைகளில் கயல்கள் பாயச்
      சுரும்பு தேன் நுகரும் நாங்கைக்
கனை கழல் காவளம் தண்
      பாடியாய் களைகண் நீயே             (4)
   
1301பட அரவு உச்சி-தன்மேல்
      பாய்ந்து பல் நடங்கள்செய்து
மடவரல் மங்கை-தன்னை
      மார்வகத்து இருத்தினானே
தட வரை தங்கு மாடத்
      தகு புகழ் நாங்கை மேய
கடவுளே காவளம் தண்
      பாடியாய் களைகண் நீயே             (5)
   
1302மல்லரை அட்டு மாள
      கஞ்சனை மலைந்து கொன்று
பல் அரசு அவிந்து வீழப்
      பாரதப் போர் முடித்தாய்
நல் அரண் காவின் நீழல்
      நறை கமழ் நாங்கை மேய
கல் அரண் காவளம் தண்
      பாடியாய் களைகண் நீயே            (6)
   
1303மூத்தவற்கு அரசு வேண்டி
      முன்பு தூது எழுந்தருளி
மாத்து அமர் பாகன் வீழ
      மத கரி மருப்பு ஒசித்தாய்
பூத்து அமர் சோலை ஓங்கி
      புனல் பரந்து ஒழுகும் நாங்கைக்
காத்தனே காவளம் தண்
      பாடியாய் களைகண் நீயே             (7)
   
1304ஏவு இளங் கன்னிக்கு ஆகி
      இமையவர்-கோனைச் செற்று
கா வளம் கடிது இறுத்துக்
      கற்பகம் கொண்டு போந்தாய்
பூ வளம் பொழில்கள் சூழ்ந்த
      புரந்தரன் செய்த நாங்கைக்
காவளம்பாடி மேய
      கண்ணனே களைகண் நீயே             (8)
   
1305சந்தம் ஆய் சமயம் ஆகி
      சமய ஐம் பூதம் ஆகி
அந்தம் ஆய் ஆதி ஆகி
      அரு மறை-அவையும் ஆனாய்
மந்தம் ஆர் பொழில்கள்தோறும்
      மட மயில் ஆலும் நாங்கைக்
கந்தம் ஆர் காவளம் தண்
      பாடியாய் களைகண் நீயே             (9)
   
1306மா வளம் பெருகி மன்னும்
      மறையவர் வாழும் நாங்கைக்
காவளம்பாடி மேய
      கண்ணனைக் கலியன் சொன்ன
பா வளம் பத்தும் வல்லார்
      பார்மிசை அரசர் ஆகிக்
கோ இள மன்னர் தாழக்
      குடை நிழல் பொலிவர்-தாமே             (10)