நாலாயிர திவ்ய பிரபந்தம்

இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி

திருநாங்கூர்ப் பார்த்தன்பள்ளி
1317கவள யானைக் கொம்பு ஒசித்த
      கண்ணன் என்றும் காமரு சீர்
குவளை மேகம் அன்ன மேனி
      கொண்ட கோன் என் ஆனை என்றும்
தவள மாடம் நீடு நாங்கைத்
      தாமரையாள் கேள்வன் என்றும்
பவள வாயாள் என் மடந்தை
      பார்த்தன்பள்ளி பாடுவாளே             (1)
   
1318கஞ்சன் விட்ட வெம் சினத்த
      களிறு அடர்த்த காளை என்றும்
வஞ்சம் மேவி வந்த பேயின்
      உயிரை உண்ட மாயன் என்றும்
செஞ்சொலாளர் நீடு நாங்கைத்
      தேவ-தேவன் என்று என்று ஓதி
பஞ்சி அன்ன மெல் அடியாள்
      பார்த்தன்பள்ளி பாடுவாளே             (2)
   
1319அண்டர்-கோன் என் ஆனை என்றும்
      ஆயர் மாதர் கொங்கை புல்கு
செண்டன் என்றும் நான்மறைகள்
      தேடி ஓடும் செல்வன் என்றும்
வண்டு உலாவு பொழில் கொள் நாங்கை
      மன்னும் மாயன் என்று என்று ஓதி-
பண்டுபோல் அன்று-என் மடந்தை
      பார்த்தன்பள்ளி பாடுவாளே             (3)
   
1320கொல்லை ஆனாள் பரிசு அழிந்தாள்-
      கோல் வளையார்-தம் முகப்பே
மல்லை முந்நீர் தட்டு இலங்கை
      கட்டு அழித்த மாயன் என்றும்
செல்வம் மல்கு மறையோர் நாங்கைத்
      தேவ-தேவன் என்று என்று ஓதி
பல் வளையாள் என் மடந்தை
      பார்த்தன்பள்ளி பாடுவாளே             (4)
   
1321அரக்கர் ஆவி மாள அன்று
      ஆழ் கடல் சூழ் இலங்கை செற்ற
குரக்கரசன் என்றும் கோல
      வில்லி என்றும் மா மதியை
நெருக்கும் மாடம் நீடு நாங்கை
      நின்மலன்-தான் என்று என்று ஓதி
பரக்கழிந்தாள் என் மடந்தை
      பார்த்தன்பள்ளி பாடுவாளே             (5)
   
1322ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த
      நாதன் என்றும் நானிலம் சூழ்
வேலை அன்ன கோல மேனி
      வண்ணன் என்றும் மேல் எழுந்து
சேல் உகளும் வயல் கொள் நாங்கைத்
      தேவ-தேவன் என்று என்று ஓதி
பாலின் நல்ல மென்-மொழியாள்
      பார்த்தன்பள்ளி பாடுவாளே             (6)
   
1323நாடி என்-தன் உள்ளம் கொண்ட
      நாதன் என்றும் நான்மறைகள்
தேடி என்றும் காண மாட்டாச்
      செல்வன் என்றும் சிறை கொள் வண்டு
சேடு உலவு பொழில் கொள்
      நாங்கைத் தேவ-தேவன் என்று என்று ஓதி
பாடகம் சேர் மெல்-அடியாள்
      பார்த்தன்பள்ளி பாடுவாளே             (7)
   
1324உலகம் ஏத்தும் ஒருவன் என்றும்
      ஒண் சுடரோடு உம்பர் எய்தா
நிலவும் ஆழிப் படையன் என்றும்
      நேசன் என்றும் தென் திசைக்குத்
திலதம் அன்ன மறையோர் நாங்கைத்
      தேவ-தேவன் என்று என்று ஓதி
பலரும் ஏச என் மடந்தை
      பார்த்தன்பள்ளி பாடுவாளே             (8)
   
1325கண்ணன் என்றும் வானவர்கள்
      காதலித்து மலர்கள் தூவும்
எண்ணன் என்றும் இன்பன் என்றும்
      ஏழ் உலகுக்கு ஆதி என்றும்
திண்ண மாடம் நீடு நாங்கைத்
      தேவ-தேவன் என்று என்று ஓதி
பண்ணின் அன்ன மென்-மொழியாள்
      பார்த்தன்பள்ளி பாடுவாளே             (9)
   
1326பாருள் நல்ல மறையோர் நாங்கைப்
      பார்த்தன்பள்ளிச் செங் கண் மாலை
வார் கொள் நல்ல முலை மடவாள்
      பாடலைத் தாய் மொழிந்த மாற்றம்
கூர் கொள் நல்ல வேல் கலியன்
      கூறு தமிழ்ப் பத்தும் வல்லார்
ஏர் கொள் நல்ல வைகுந்தத்துள்
      இன்பம் நாளும் எய்துவாரே             (10)