நாலாயிர திவ்ய பிரபந்தம்

இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி

திருப்புள்ளம்பூதங்குடி
1347அறிவது அறியான் அனைத்து உலகும்
      உடையான் என்னை ஆள் உடையான்
குறிய மாணி உரு ஆய
      கூத்தன் மன்னி அமரும் இடம்-
நறிய மலர்மேல் சுரும்பு ஆர்க்க
      எழில் ஆர் மஞ்ஞை நடம் ஆட
பொறி கொள் சிறை வண்டு இசை பாடும்-
      புள்ளம்பூதங்குடி-தானே             (1)    
   
1348கள்ளக் குறள் ஆய் மாவலியை
      வஞ்சித்து உலகம் கைப்படுத்து
பொள்ளைக் கரத்த போதகத்தின்
      துன்பம் தவிர்த்த புனிதன் இடம்-
பள்ளச் செறுவில் கயல் உகள
      பழனக் கழனி-அதனுள் போய
புள்ளு பிள்ளைக்கு இரை தேடும்-
      புள்ளம்பூதங்குடி-தானே             (2)
   
1349மேவா அரக்கர் தென் இலங்கை
      வேந்தன் வீயச் சரம் துரந்து
மா வாய் பிளந்து மல் அடர்த்து
      மருதம் சாய்த்த மாலது இடம்-
கா ஆர் தெங்கின் பழம் வீழ
      கயல்கள் பாய குருகு இரியும்
பூ ஆர் கழனி எழில் ஆரும்-
      புள்ளம்பூதங்குடி-தானே             (3)
   
1350வெற்பால் மாரி பழுது ஆக்கி
      விறல் வாள் அரக்கர் தலைவன்-தன்
வற்பு ஆர் திரள் தோள் ஐந் நான்கும்
      துணித்த வல் வில் இராமன் இடம்-
கற்பு ஆர் புரிசைசெய் குன்றம்
      கவின் ஆர் கூடம் மாளிகைகள்
பொற்பு ஆர் மாடம் எழில் ஆரும்-
      புள்ளம்பூதங்குடி-தானே             (4)
   
1351மை ஆர் தடங் கண் கருங் கூந்தல்
      ஆய்ச்சி மறைய வைத்த தயிர்
நெய் ஆர் பாலோடு அமுது செய்த
      நேமி அங் கை மாயன் இடம்-
செய் ஆர் ஆரல் இரை கருதிச்
      செங் கால் நாரை சென்று அணையும்
பொய்யா நாவின் மறையாளர்-
      புள்ளம்பூதங்குடி-தானே             (5)
   
1352மின்னின் அன்ன நுண் மருங்குல்
      வேய் ஏய் தடந் தோள் மெல்லியற்கா
மன்னு சினத்த மழ விடைகள்
      ஏழ் அன்று அடர்த்த மாலது இடம்-
மன்னும் முது நீர் அரவிந்த
      மலர்மேல் வரி வண்டு இசை பாட
புன்னை பொன் ஏய் தாது உதிர்க்கும்-
      புள்ளம்பூதங்குடி-தானே            (6)
   
1353குடையா விலங்கல் கொண்டு ஏந்தி
      மாரி பழுதா நிரை காத்து
சடையான் ஓட அடல் வாணன்
      தடந் தோள் துணித்த தலைவன் இடம்-
குடியா வண்டு கள் உண்ண
      கோல நீலம் மட்டு உகுக்கும
புடை ஆர் கழனி எழில் ஆரும்-
      புள்ளம்பூதங்குடி-தானே             (7)
   
1354கறை ஆர் நெடு வேல் மற மன்னர்
      வீய விசயன் தேர் கடவி
இறையான் கையில் நிறையாத
      முண்டம் நிறைத்த எந்தை இடம்-
மறையால் முத்தீ-அவை வளர்க்கும்
      மன்னு புகழால் வண்மையால்
பொறையால் மிக்க அந்தணர் வாழ்-
      புள்ளம்பூதங்குடி-தானே             (8)
   
1355துன்னி மண்ணும் விண் நாடும்
      தோன்றாது இருள் ஆய் மூடிய நாள்
அன்னம் ஆகி அரு மறைகள்
      அருளிச்செய்த அமலன் இடம்-
மின்னு சோதி நவமணியும்
      வேயின் முத்தும் சாமரையும்
பொன்னும் பொன்னி கொணர்ந்து அலைக்கும்-
      புள்ளம்பூதங்குடி-தானே            (9)
   
1356கற்றா மறித்து காளியன்-தன்
      சென்னி நடுங்க நடம்பயின்ற
பொன் தாமரையாள்-தன் கேள்வன்
      புள்ளம்பூதங்குடி-தன்மேல
் கற்றார் பரவும் மங்கையர்-கோன்
      கார் ஆர் புயல்கைக் கலிகன்றி
சொல்- தான் ஈர் ஐந்து இவை பாட
      சோர நில்லா-துயர்-தாமே             (10)