நாலாயிர திவ்ய பிரபந்தம்

இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி

திருவரங்கம்: 2
1387வெருவாதாள் வாய்வெருவி வேங்கடமே
      வேங்கடமே என்கின்றாளால்
மருவாளால் என் குடங்கால் வாள் நெடுங் கண்
      துயில் மறந்தாள்-வண்டு ஆர் கொண்டல்
உருவாளன் வானவர்-தம் உயிராளன்
      ஒலி திரை நீர்ப் பௌவம் கொண்ட
திருவாளன் என் மகளைச் செய்தனகள்
      எங்ஙனம் நான் சிந்திக்கேனே? (1)
   
1388கலை ஆளா அகல் அல்குல் கன வளையும்
      கை ஆளா-என் செய்கேன் நான்?
விலை ஆளா அடியேனை வேண்டுதியோ?
      வேண்டாயோ? என்னும்-மெய்ய
மலையாளன் வானவர்-தம் தலையாளன்
      மராமரம் ஏழ் எய்த வென்றிச்
சிலையாளன் என் மகளைச் செய்தனகள்
      எங்ஙனம் நான் சிந்திக்கேனே? (2)
   
1389மான் ஆய மென் நோக்கி வாள் நெடுங் கண்
      நீர் மல்கும் வளையும் சோரும்
தேன் ஆய நறுந் துழாய் அலங்கலின்
      திறம் பேசி உறங்காள் காண்மின்-
கான்-ஆயன் கடி மனையில் தயிர் உண்டு
      நெய் பருக நந்தன் பெற்ற
ஆன்-ஆயன் என் மகளைச் செய்தனகள்
      அம்மனைமீர் அறிகிலேனே (3)
   
1390தாய் வாயில் சொல் கேளாள் தன் ஆயத்
      தோடு அணையாள் தட மென் கொங்கை-
யே ஆரச் சாந்து அணியாள் எம் பெருமான்
      திருவரங்கம் எங்கே? என்னும்-
பேய் மாய முலை உண்டு இவ் உலகு உண்ட
      பெரு வயிற்றன் பேசில் நங்காய்
மா மாயன் என் மகளைச் செய்தனகள்
      மங்கைமீர் மதிக்கிலேனே             (4)
   
1391பூண் முலைமேல் சாந்து அணியாள் பொரு கயல் கண்
      மை எழுதாள் பூவை பேணாள
் ஏண் அறியாள் எத்தனையும் எம் பெருமான்
      திருவரங்கம் எங்கே? என்னும்-
நாள் மலராள் நாயகன் ஆய் நாம் அறிய
      ஆய்ப்பாடி வளர்ந்த நம்பி
ஆண் மகன் ஆய் என் மகளைச் செய்தனகள்
      அம்மனைமீர்             (5)
   
1392தாது ஆடு வன மாலை தாரானோ?
      என்று என்றே தளர்ந்தாள் காண்மின்
யாதானும் ஒன்று உரைக்கில் எம் பெருமான்
      திருவரங்கம் என்னும்-பூமேல்
மாது ஆளன் குடம் ஆடி மதுசூதன்
      மன்னர்க்கு ஆய் முன்னம் சென்ற
தூதாளன் என் மகளைச் செய்தனகள்
      எங்ஙனம் நான் சொல்லுகேனே? (6)
   
1393வார் ஆளும் இளங் கொங்கை வண்ணம் வேறு
      ஆயினவாறு எண்ணாள் எண்ணில்
பேராளன் பேர் அல்லால் பேசாள் இப்
      பெண் பெற்றேன் என் செய்கேன் நான்?
தார் ஆளன் தண் குடந்தை நகர் ஆளன்
      ஐவர்க்கு ஆய் அமரில் உய்த்த
தேர் ஆளன் என் மகளைச் செய்தனகள்
      எங்ஙனம் நான் செப்புகேனே?             (7)
   
1394உறவு ஆதும் இலள் என்று என்று ஒழியாது
      பலர் ஏசும் அலர் ஆயிற்றால
் மறவாதே எப்பொழுதும் மாயவனே
      மாதவனே என்கின்றாளால்-
பிறவாத பேராளன் பெண் ஆளன்
      மண் ஆளன் விண்ணோர்-தங்கள
்அறவாளன் என் மகளைச் செய்தனகள்
      அம்மனைமீர் அறிகிலேனே             (8)
   
1395பந்தோடு கழல் மருவாள் பைங் கிளியும்
      பால் ஊட்டாள் பாவை பேணாள்
வந்தானோ திருவரங்கன்? வாரானோ?
      என்று என்றே வளையும் சோரும்-
சந்தோகன் பௌழியன் ஐந் தழல் ஓம்பு
      தைத்திரியன் சாமவேதி
அந்தோ வந்து என் மகளைச் செய்தனகள்
      அம்மனைமீர் அறிகிலேனே (9)
   
1396சேல் உகளும் வயல் புடை சூழ் திருவரங்கத்து
      அம்மானைச் சிந்தைசெய்த
நீல மலர்க் கண் மடவாள் நிறை அழிவைத்
      தாய் மொழிந்த-அதனை நேரார்
கால வேல் பரகாலன் கலிகன்றி
      ஒலி மாலை கற்று வல்லார்
மாலை சேர் வெண் குடைக்கீழ் மன்னவர் ஆய்
      பொன்-உலகில் வாழ்வர்-தாமே             (10)