நாலாயிர திவ்ய பிரபந்தம்

இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி

திருவரங்கம்: 4
1407பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப்
      பதங்களும் பதங்களின் பொருளும்
பிண்டம் ஆய் விரிந்த பிறங்கு ஒளி அனலும்
      பெருகிய புனலொடு நிலனும்
கொண்டல் மாருதமும் குரை கடல் ஏழும்
      ஏழு மா மலைகளும் விசும்பும்
அண்டமும் தான் ஆய் நின்ற எம் பெருமான்-
      அரங்க மா நகர் அமர்ந்தானே             (1)
   
1408இந்திரன் பிரமன் ஈசன் என்று இவர்கள்
      எண் இல் பல் குணங்களே இயற்ற
தந்தையும் தாயும் மக்களும் மிக்க
      சுற்றமும் சுற்றி நின்று அகலாப்
பந்தமும் பந்தம் அறுப்பது ஓர் மருந்தும்
      பான்மையும் பல் உயிர்க்கு எல்லாம்
அந்தமும் வாழ்வும் ஆய எம் பெருமான்-
      அரங்க மா நகர் அமர்ந்தானே            (2)
   
1409மன்னு மா நிலனும் மலைகளும் கடலும்
      வானமும் தானவர் உலகும்
துன்னு மா இருள் ஆய் துலங்கு ஒளி சுருங்கி
      தொல்லை நான்மறைகளும் மறைய
பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி
      பிறங்கு இருள் நிறம் கெட ஒருநாள்
அன்னம் ஆய் அன்று அங்கு அரு மறை பயந்தான்
      -அரங்க மா நகர் அமர்ந்தானே             (3)
   
1410மா இருங் குன்றம் ஒன்று மத்து ஆக
      மாசுணம் அதனொடும் அளவி
பா இரும் பௌவம் பகடு விண்டு அலற
      படு திரை விசும்பிடைப் படர
சேய் இரு விசும்பும் திங்களும் சுடரும்
      தேவரும் தாம் உடன் திசைப்ப
ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்தான்-
      அரங்க மா நகர் அமர்ந்தானே             (4)
   
1411எங்ஙனே உய்வர் தானவர் நினைந்தால்?
      -இரணியன் இலங்கு பூண் அகலம்
பொங்கு வெம் குருதி பொன்மலை பிளந்து
      பொழிதரும் அருவி ஒத்து இழிய
வெம் கண் வாள் எயிற்று ஓர் வெள்ளி மா விலங்கல்
      விண் உறக் கனல் விழித்து எழுந்தது
அங்ஙனே ஒக்க அரி உரு ஆனான்-
      அரங்க மா நகர் அமர்ந்தானே             (5)
   
1412ஆயிரம் குன்றம் சென்று தொக்கனைய
      அடல் புரை எழில் திகழ் திரள் தோள்
ஆயிரம் துணிய அடல் மழுப் பற்றி
      மற்று அவன் அகல் விசும்பு அணைய
ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச
      அறிதுயில் அலை கடல் நடுவே
ஆயிரம் சுடர் வாய் அரவு-அணைத் துயின்றான்-
      அரங்க மா நகர் அமர்ந்தானே             (6)   
   
1413சுரி குழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த
      கொடுமையின் கடு விசை அரக்கன்
எரிவிழித்து இலங்கும் மணி முடி பொடிசெய்து
      இலங்கை பாழ்படுப்பதற்கு எண்ணி
வரி சிலை வளைய அடு சரம் துரந்து
      மறி கடல் நெறிபட மலையால்
அரிகுலம் பணிகொண்டு அலை கடல் அடைத்தான்-
      அரங்க மா நகர் அமர்ந்தானே             (7)
   
1414ஊழி ஆய் ஓமத்து உச்சி ஆய் ஒருகால்
      உடைய தேர் ஒருவன் ஆய் உலகில்
சூழி மால் யானைத் துயர் கெடுத்து இலங்கை
      மலங்க அன்று அடு சரம் துரந்து
பாழியால் மிக்க பார்த்தனுக்கு அருளி
      பகலவன் ஒளி கெடப் பகலே
ஆழியால் அன்று அங்கு ஆழியை மறைத்தான்-
      அரங்க மா நகர் அமர்ந்தானே             (8)
   
1415பேயினார் முலை ஊண் பிள்ளை ஆய் ஒருகால்
      பெரு நிலம் விழுங்கி அது உமிழ்ந்த
வாயன் ஆய் மால் ஆய் ஆல் இலை வளர்ந்து
      மணி முடி வானவர்-தமக்குச
சேயன் ஆய் அடியோர்க்கு அணியன் ஆய் வந்து என்
      சிந்தையுள் வெம் துயர் அறுக்கும்
ஆயன் ஆய் அன்று குன்றம் ஒன்று எடுத்தான்
      -அரங்க மா நகர் அமர்ந்தானே             (9)
   
1416பொன்னும் மா மணியும் முத்தமும் சுமந்து
      பொரு திரை மா நதி புடை சூழ்ந்து
அன்னம் மாடு உலவும் அலை புனல் சூழ்ந்த
      அரங்க மா நகர் அமர்ந்தானை
மன்னு மா மாட மங்கையர் தலைவன்
      மான வேல் கலியன் வாய் ஒலிகள்
பன்னிய பனுவல் பாடுவார் நாளும்
      பழவினை பற்று அறுப்பாரே             (10)