நாலாயிர திவ்ய பிரபந்தம்

இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி

திருவரங்கம்: 5
1417ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாது
      இரங்கி மற்று அவற்கு இன் அருள் சுரந்து
மாழை மான் மட நோக்கி உன் தோழி
      உம்பி எம்பி என்று ஒழிந்திலை உகந்து
தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற
      சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட
ஆழி வண்ண நின் அடி-இணை அடைந்தேன்-
      அணி பொழில் திருவரங்கத்து அம்மானே             (1)
   
1418வாத மா மகன் மர்க்கடம் விலங்கு
      மற்று ஓர் சாதி என்று ஒழிந்திலை உகந்து
காதல் ஆதரம் கடலினும் பெருகச்
      செய்தகவினுக்கு இல்லை கைம்மாறு என்று
கோது இல் வாய்மையினாயொடும் உடனே
      உண்பன் நான் என்ற ஒண் பொருள் எனக்கும
ஆதல் வேண்டும் என்று அடி-இணை அடைந்தேன்
      -அணி பொழில் திருவரங்கத்து அம்மானே             (2)
   
1419கடி கொள் பூம் பொழில் காமரு பொய்கை
      வைகு தாமரை வாங்கிய வேழம்
முடியும் வண்ணம் ஓர் முழு வலி முதலை
      பற்ற மற்று அது நின் சரண் நினைப்ப
கொடிய வாய் விலங்கின் உயிர் மலங்கக்
      கொண்ட சீற்றம் ஒன்று உண்டு உளது அறிந்து உன
அடியனேனும் வந்து அடி-இணை அடைந்தேன்-
      அணி பொழில் திருவரங்கத்து அம்மானே             (3)
   
1420நஞ்சு சோர்வது ஓர் வெம் சின அரவம்
      வெருவி வந்து நின் சரண் என சரண் ஆய்
நெஞ்சில் கொண்டு நின் அம் சிறைப் பறவைக்கு
      அடைக்கலம் கொடுத்து அருள்செய்தது அறிந்து
வெம் சொலாளர்கள் நமன்-தமர் கடியர்
      கொடிய செய்வன உள அதற்கு அடியேன்
அஞ்சி வந்து நின் அடி-இணை அடைந்தேன்
      அணி பொழில் திருவரங்கத்து அம்மானே             (4)
   
1421மாகம் மா நிலம் முழுதும் வந்து இறைஞ்சும்
      மலர் அடி கண்ட மா மறையாளன்
தோகை மா மயில் அன்னவர் இன்பம்
      துற்றிலாமையில் அத்த இங்கு ஒழிந்து
போகம் நீ எய்தி பின்னும் நம் இடைக்கே
      போதுவாய் என்ற பொன் அருள் எனக்கும
ஆக வேண்டும் என்று அடி-இணை அடைந்தேன்
      -அணி பொழில் திருவரங்கத்து அம்மானே             (5)
   
1422மன்னு நான்மறை மா முனி பெற்ற
      மைந்தனை மதியாத வெம் கூற்றம்-
தன்னை அஞ்சி நின் சரண் என சரண் ஆய்
      தகவு இல் காலனை உக முனிந்து ஒழியா
பின்னை என்றும் நின் திருவடி பிரியா
      வண்ணம் எண்ணிய பேர் அருள் எனக்கும்
அன்னது ஆகும் என்று அடி-இணை அடைந்தேன்-
      அணி பொழில் திருவரங்கத்து அம்மானே             (6)
   
1423ஓது வாய்மையும் உவனியப் பிறப்பும்
      உனக்கு முன் தந்த அந்தணன் ஒருவன்
காதல் என் மகன் புகல் இடம் காணேன்
      கண்டு நீ தருவாய் எனக்கு என்று
கோது இல் வாய்மையினான் உனை வேண்டிய
      குறை முடித்து அவன் சிறுவனைக் கொடுத்தாய்-
ஆதலால் வந்து உன் அடி-இணை அடைந்தேன்-
      அணி பொழில் திருவரங்கத்து அம்மானே             (7)
   
1424வேத வாய்மொழி அந்தணன் ஒருவன்
      எந்தை நின் சரண் என்னுடை மனைவி
காதல் மக்களைப் பயத்தலும் காணாள்
      கடியது ஓர் தெய்வம் கொண்டு ஒளிக்கும் என்று அழைப்ப
ஏதலார் முன்னே இன் அருள் அவற்குச்
      செய்து உன் மக்கள் மற்று இவர் என்று கொடுத்தாய்
ஆதலால் வந்து உன் அடி-இணை அடைந்தேன்
      -அணி பொழில் திருவரங்கத்து அம்மானே             (8)
   
1425துளங்கு நீள் முடி அரசர்-தம் குரிசில்
      தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவற்கு
உளம் கொள் அன்பினோடு இன் அருள் சுரந்து அங்கு
      ஓடு நாழிகை ஏழ் உடன் இருப்ப
வளம் கொள் மந்திரம் மற்று அவற்கு அருளிச்
      செய்த ஆறு அடியேன் அறிந்து உலகம்
அளந்த பொன் அடியே அடைந்து உய்ந்தேன்
      -அணி பொழில் திருவரங்கத்து அம்மானே             (9)
   
1426மாட மாளிகை சூழ் திருமங்கை
      -மன்னன் ஒன்னலர்-தங்களை வெல்லும்
ஆடல்மா வலவன் கலிகன்றி
      அணி பொழில் திருவரங்கத்து அம்மானை
நீடு தொல் புகழ் ஆழி வல்லானை
      எந்தையை நெடுமாலை நினைந்த
பாடல் பத்து-இவை பாடுமின் தொண்டீர்
      பாட நும்மிடைப் பாவம் நில்லாவே             (10)