நாலாயிர திவ்ய பிரபந்தம்

இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி

திருப்பேர் நகர்
1427கை இலங்கு ஆழி சங்கன் கரு முகில் திரு நிறத்தன்
பொய் இலன் மெய்யன்-தன் தாள் அடைவரேல் அடிமை ஆக்கும
செய் அலர் கமலம் ஓங்கு செறி பொழில் தென் திருப்பேர்
பை அரவு-அணையான் நாமம் பரவி நான் உய்ந்த ஆறே             (1)
   
1428வங்கம் ஆர் கடல்கள் ஏழும் மலையும் வானகமும் மற்றும்
அம் கண் மா ஞாலம் எல்லாம் அமுதுசெய்து உமிழ்ந்த எந்தை
திங்கள் மா முகில் அணவு செறி பொழில் தென் திருப்பேர்
எங்கள் மால் இறைவன் நாமம் ஏத்தி நான் உய்ந்த ஆறே             (2)
   
1429ஒருவனை உந்திப் பூமேல் ஓங்குவித்து ஆகம்-தன்னால்
ஒருவனைச் சாபம் நீக்கி உம்பர் ஆள் என்று விட்டான்
பெரு வரை மதிள்கள் சூழ்ந்த பெரு நகர் அரவு-அணைமேல
்கரு வரை வண்ணன்-தன் பேர் கருதி நான் உய்ந்த ஆறே             (3)
   
1430ஊன் அமர் தலை ஒன்று ஏந்தி உலகு எலாம் திரியும் ஈசன்
ஈன் அமர் சாபம் நீக்காய் என்ன ஒண் புனலை ஈந்தான்
தேன் அமர் பொழில்கள் சூழ்ந்த செறி வயல் தென் திருப்பேர்
வானவர்-தலைவன் நாமம் வாழ்த்தி நான் உய்ந்த ஆறே             (4)
   
1431வக்கரன் வாய் முன் கீண்ட மாயனே என்று வானோர்
புக்கு அரண் தந்தருளாய் என்ன பொன் ஆகத்தானை
நக்கு அரி உருவம் ஆகி நகம் கிளர்ந்து இடந்து உகந்த
சக்கரச் செல்வன் தென்பேர்த் தலைவன் தாள் அடைந்து உய்ந்தேனே             (5)
   
1432விலங்கலால் கடல் அடைத்து விளங்கிழை பொருட்டு வில்லால்
இலங்கை மா நகர்க்கு இறைவன் இருபது புயம் துணித்தான்
நலம் கொள் நான்மறை வல்லார்கள் ஓத்து ஒலி ஏத்தக் கேட்டு
மலங்கு பாய் வயல் திருப்பேர் மருவி நான் வாழ்ந்த ஆறே             (6)
   
1433வெண்ணெய்-தான் அமுதுசெய்ய வெகுண்டு மத்து ஆய்ச்சி ஓச்சி
கண்ணி ஆர் குறுங் கயிற்றால் கட்ட வெட்டொன்று இருந்தான்
திண்ண மா மதிள்கள் சூழ்ந்த தென் திருப்பேருள் வேலை
வண்ணனார் நாமம் நாளும் வாய் மொழிந்து உய்ந்த ஆறே             (7)
   
1434அம் பொன் ஆர் உலகம் ஏழும் அறிய ஆய்ப்பாடி-தன்னுள்
கொம்பு அனார் பின்னை கோலம் கூடுதற்கு ஏறு கொன்றான்
செம் பொன் ஆர் மதிள்கள் சூழ்ந்த தென் திருப்பேருள் மேவும்
எம்பிரான் நாமம் நாளும் ஏத்தி நான் உய்ந்த ஆறே             (8)
   
1435நால் வகை வேதம் ஐந்து வேள்வி ஆறு அங்கம் வல்லார்
மேலை வானவரின் மிக்க வேதியர் ஆதி காலம்
சேல் உகள் வயல் திருப்பேர்ச் செங் கண் மாலோடும் வாழ்வார்
சீல மா தவத்தர் சிந்தை ஆளி என் சிந்தையானே             (9)
   
1436வண்டு அறை பொழில் திருப்பேர் வரி அரவு-அணையில் பள்ளி
கொண்டு உறைகின்ற மாலைக் கொடி மதிள் மாட மங்கைத்
திண் திறல் தோள் கலியன் செஞ்சொலால் மொழிந்த மாலை
கொண்டு இவை பாடி ஆடக் கூடுவர்-நீள் விசும்பே             (10)