நாலாயிர திவ்ய பிரபந்தம்

இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி

திருநந்திபுரவிண்ணகரம்
1437தீது அறு நிலத்தொடு எரி காலினொடு நீர் கெழு
      விசும்பும் அவை ஆய்
மாசு அறு மனத்தினொடு உறக்கமொடு இறக்கை அவை
      ஆய பெருமான்
தாய் செற உளைந்து தயிர் உண்டு குடம் ஆடு தட
      மார்வர் தகைசேர்
நாதன் உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம்
      -நண்ணு மனமே             (1)
   
1438உய்யும் வகை உண்டு சொன செய்யில் உலகு ஏழும் ஒழி
      யாமை முன நாள்
மெய்யின் அளவே அமுதுசெய்ய வல ஐயன்-அவன்
      மேவும் நகர்-தான்-
மைய வரி வண்டு மது உண்டு கிளையோடு மலர்
      கிண்டி அதன்மேல்
நைவளம் நவிற்று பொழில் நந்திபுரவிண்ணகரம்
      -நண்ணு மனமே             (2)
   
1439உம்பர் உலகு ஏழு கடல் ஏழு மலை ஏழும் ஒழி
      யாமை முன நாள்
தம் பொன் வயிறு ஆர் அளவும் உண்டு அவை உமிழ்ந்த தட
      மார்வர் தகை சேர்
வம்பு மலர்கின்ற பொழில் பைம் பொன் வரு தும்பி மணி
      கங்குல் வயல் சூழ்
நம்பன் உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம்
      -நண்ணு மனமே             (3)
   
1440பிறையின் ஒளி எயிறு இலக முறுகி எதிர் பொருதும் என
      வந்த அசுரர்
இறைகள்-அவை-நெறு-நெறு என வெறிய-அவர் வயிறு அழல
      நின்ற பெருமான்
சிறை கொள் மயில் குயில் பயில மலர்கள் உக அளி முரல
      அடிகொள் நெடு மா
நறைசெய் பொழில் மழை தவழும் நந்திபுரவிண்ணகரம்-
      நண்ணு மனமே             (4)
   
1441மூள எரி சிந்தி முனிவு எய்தி அமர் செய்தும் என
      வந்த அசுரர்
தோளும் அவர் தாளும் முடியோடு பொடி ஆக நொடி
      ஆம் அளவு எய்தான்
வாளும் வரி வில்லும் வளை ஆழி கதை சங்கம் இவை
      அம்கை உடையான்
நாளும் உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம்-
      நண்ணு மனமே             (5)
   
1442தம்பியொடு தாம் ஒருவர் தன் துணைவி காதல் துணை
      ஆக முன நாள்
வெம்பி எரி கானகம் உலாவும் அவர்-தாம் இனிது
      மேவும் நகர்-தான்-
கொம்பு குதி கொண்டு குயில் கூவ மயில் ஆலும் எழில்
      ஆர் புறவு சேர்
நம்பி உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம்-
      நண்ணு மனமே             (6)
   
1443தந்தை மனம் உந்து துயர் நந்த இருள் வந்த விறல்
      நந்தன் மதலை
எந்தை இவன் என்று அமரர் கந்த மலர் கொண்டு தொழ
      நின்ற நகர்-தான்-
மந்த முழவு ஓசை மழை ஆக எழு கார் மயில்கள்
      ஆடு பொழில் சூழ்
நந்தி பணிசெய்த நகர் நந்திபுரவிண்ணகரம்-
      நண்ணு மனமே             (7)
   
1444எண்ணில் நினைவு எய்தி இனி இல்லை இறை என்று முனி
      யாளர் திரு ஆர்
பண்ணில் மலி கீதமொடு பாடி அவர் ஆடலொடு
      கூட எழில் ஆர்
மண்ணில் இதுபோல நகர் இல்லை என வானவர்கள்
      தாம் மலர்கள் தூய்
நண்ணி உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம்
      -நண்ணு மனமே             (8)
   
1445வங்கம் மலி பௌவம்-அது மா முகடின் உச்சி புக
      மிக்க பெருநீர்
அங்கம் அழியார் அவனது ஆணை தலை சூடும் அடியார்
      அறிதியேல்
பொங்கு புனல் உந்து மணி கங்குல் இருள் சீறும் ஒளி
      எங்கும் உளதால்
நங்கள் பெருமான் உறையும் நந்திபுரவிண்ணகரம்-
      நண்ணு மனமே             (9)
   
1446நறை செய் பொழில் மழை தவழும் நந்திபுரவிண்ணகரம்
      நண்ணி உறையும்
உறை கொள் புகர் ஆழி சுரி சங்கம்-அவை அம் கை உடை
      யானை ஒளி சேர்
கறை வளரும் வேல் வல்ல கலியன் ஒலி மாலை-இவை
      ஐந்தும் ஐந்தும்
முறையின் இவை பயில வல அடியவர்கள் கொடுவினைகள்
      முழுது அகலுமே             (10)