நாலாயிர திவ்ய பிரபந்தம்

இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி

திருவிண்ணகர்:1
1447வண்டு உணும் நறு மலர் இண்டை கொண்டு
பண்டை நம் வினை கெட என்று அடிமேல்
தொண்டரும் அமரரும் பணிய நின்று அங்கு
அண்டமொடு அகல்-இடம் அளந்தவனே
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே             (1)
   
1448அண்ணல் செய்து அலை கடல் கடைந்து அதனுள்
கண்ணுதல் நஞ்சு உண்ணக்கண்டவனே
விண்ணவர் அமுது உண அமுதில் வரும்
பெண் அமுது உண்ட எம் பெருமானே
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே             (2)
   
1449குழல் நிற வண்ண நின்கூறு கொண்ட
தழல் நிற வண்ணன் நண்ணார் நகரம்
விழ நனி மலை சிலை வளைவு செய்து அங்கு
அழல் நிற அம்பு-அதுஆனவனே
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே             (3)
   
1450நிலவொடு வெயில் நிலவு இரு சுடரும்
உலகமும் உயிர்களும் உண்டு ஒருகால்
கலை தரு குழவியின் உருவினை ஆய்
அலை கடல் ஆல் இலை வளர்ந்தவனே
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே             (4)
   
1451பார் எழு கடல் எழு மலை எழும் ஆய்
சீர் கெழும் இவ் உலகு ஏழும் எல்லாம்
ஆர் கெழு வயிற்றினில் அடக்கி நின்று அங்கு
ஓர் எழுத்து ஓர் உரு ஆனவனே
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே             (5)
   
1452கார் கெழு கடல்களும் மலைகளும் ஆய்
ஏர் கெழும் உலகமும் ஆகி முத
லார்களும் அறிவு-அரும் நிலையினை ஆய்
சீர் கெழு நான்மறை ஆனவனே
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே             (6)
   
1453உருக்கு உறு நறு நெய் கொண்டு ஆர் அழலில்
இருக்கு உறும் அந்தணர் சந்தியின்வாய்
பெருக்கமொடு அமரர்கள் அமர நல்கும்
இருக்கினில் இன் இசை ஆனவனே
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே             (7)
   
1454காதல் செய்து இளையவர் கலவி தரும்
வேதனை வினை அது வெருவுதல் ஆம்
ஆதலின் உனது அடி அணுகுவன் நான்
போது அலர் நெடுமுடிப் புண்ணியனே
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே             (8)
   
1455சாதலும் பிறத்தலும் என்று இவற்றைக்
காதல் செய்யாது உன கழல் அடைந்தேன்
ஓதல் செய் நான்மறை ஆகி உம்பர்
ஆதல் செய் மூவுரு ஆனவனே
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே             (9)
   
1456பூ மரு பொழில் அணி விண்ணகர் மேல்
காமரு சீர்க் கலிகன்றி சொன்ன
பா மரு தமிழ்-இவை பாட வல்லார்
வாமனன் அடி-இணை மருவுவரே             (10)