நாலாயிர திவ்ய பிரபந்தம்

இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி

திருநறையூர்:1
1477கண்ணும் சுழன்று பீளையோடு ஈளை வந்து ஏங்கினால்
பண் இன் மொழியார் பைய நடமின் என்னாதமுன்
விண்ணும் மலையும் வேதமும் வேள்வியும் ஆயினான்
நண்ணும் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே             (1)
   
1478கொங்கு உண் குழலார் கூடி இருந்து சிரித்து நீர்
இங்கு என் இருமி எம்பால் வந்தது? என்று இகழாதமுன்
திங்கள் எரி கால் செஞ் சுடர் ஆயவன் தேசு உடை
நங்கள் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே             (2)
   
1479கொங்கு ஆர் குழலார் கூடி இருந்து சிரித்து எம்மை
எம் கோலம் ஐயா என் இனிக் காண்பது? என்னாதமுன்
செங்கோல் வலவன் தாள் பணிந்து ஏத்தித் திகழும் ஊர்-
நம் கோன் நறையூர்-நாம் தொழுதும் எழு நெஞ்சமே             (3)
   
1480கொம்பும் அரவமும் வல்லியும் வென்ற நுண் ஏர் இடை
வம்பு உண் குழலார் வாசல் அடைத்து இகழாதமுன்
செம் பொன் கமுகு-இனம்-தான் கனியும் செழும் சோலை சூழ்
நம்பன் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே             (4)
   
1481விலங்கும் கயலும் வேலும் ஒண் காவியும் வென்ற கண்
சலம் கொண்ட சொல்லார்-தாங்கள் சிரித்து இகழாத முன்
மலங்கும் வராலும் வாளையும் பாய் வயல் சூழ்தரு
நலம் கொள் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே             (5)
   
1482மின் நேர் இடையார் வேட்கையை மாற்றியிருந்து
என் நீர் இருமி எம்பால் வந்தது? என்று இகழாதமுன்
தொல் நீர் இலங்கை மலங்க விலங்கு எரி ஊட்டினான்
நல் நீர் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே             (6)
   
1483வில் ஏர் நுதலார் வேட்கையை மாற்றி சிரித்து இவன்
பொல்லான் திரைந்தான் என்னும் புறன் -உரை கேட்பதன்முன்
சொல் ஆர் மறை நான்கு ஓதி உலகில் நிலாயவர்
நல்லார் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே             (7)
   
1484வாள் ஒண் கண் நல்லார் தாங்கள் மதனன் என்றார்-தம்மைக்
கேள்மின்கள் ஈளையோடு ஏங்கு கிழவன் என்னாதமுன்
வேள்வும் விழவும் வீதியில் என்றும் அறாத ஊர்
நாளும் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே             (8)
   
1485கனி சேர்ந்து இலங்கு நல் வாயவர் காதன்மை விட்டிட
குனி சேர்ந்து உடலம் கோலில் தளர்ந்து இளையாதமுன்
பனி சேர் விசும்பில் பால்மதி கோள் விடுத்தான் இடம்
நனி சேர் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே             (9)
   
1486பிறை சேர் நுதலார் பேணுதல் நம்மை இலாதமுன்
நறை சேர் பொழில் சூழ் நறையூர் தொழு நெஞ்சமே என்ற
கறை ஆர் நெடு வேல் மங்கையர்-கோன் கலிகன்றி சொல்
மறவாது உரைப்பவர் வானவர்க்கு இன் அரசு ஆவரே             (10)