நாலாயிர திவ்ய பிரபந்தம்

இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி

திருநறையூர்:3
1497அம்பரமும் பெரு நிலனும் திசைகள் எட்டும்
      அலை கடலும் குல வரையும் உண்ட கண்டன்
கொம்பு அமரும் வட மரத்தின் இலைமேல் பள்ளி
      கூடினான் திருவடியே கூடகிற்பீர்
வம்பு அவிழும் செண்பகத்தின் வாசம் உண்டு
      மணி வண்டு வகுளத்தின் மலர்மேல் வைகும்
செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்த கோயில்
      திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே             (1)
   
1498கொழுங் கயல் ஆய் நெடு வெள்ளம் கொண்ட காலம்
      குல வரையின் மீது ஓடி அண்டத்து அப்பால்
எழுந்து இனிது விளையாடும் ஈசன் எந்தை
      இணை-அடிக்கீழ் இனிது இருப்பீர் இன வண்டு ஆலும்
உழும் செறுவில் மணி கொணர்ந்து கரைமேல் சிந்தி
      உலகு எல்லாம் சந்தனமும் அகிலும் கொள்ள
செழும் பொன்னி வளம் கொடுக்கும் சோழன் சேர்ந்த
      திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே             (2)
   
1499பவ்வ நீர் உடை ஆடை ஆகச் சுற்றி
      பார் அகலம் திருவடியா பவனம் மெய்யா
செவ்வி மாதிரம் எட்டும் தோளா அண்டம்
      திரு முடியா நின்றான்பால் செல்லகிற்பீர்
கவ்வை மா களிறு உந்தி வெண்ணி ஏற்ற
      கழல் மன்னர் மணி முடிமேல் காகம் ஏறத்
தெய்வ வாள் வலம் கொண்ட சோழன் சேர்ந்த
      திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே             (3)
   
1500பைங் கண் ஆள்-அரி உரு ஆய் வெருவ நோக்கி
      பரு வரத் தோள் இரணியனைப் பற்றி வாங்கி
அம் கை வாள் உகிர் நுதியால் அவனது ஆகம்
      அம் குருதி பொங்குவித்தான் அடிக்கீழ் நிற்பீர்
வெம் கண் மா களிறு உந்தி வெண்ணி ஏற்ற
      விறல் மன்னர் திறல் அழிய வெம் மா உய்த்த
செங்கணான் கோச் சோழன் சேர்ந்த கோயில்
      திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே             (4)
   
1501அன்று உலகம் மூன்றினையும் அளந்து வேறு ஓர்
      அரி உரு ஆய் இரணியனது ஆகம் கீண்டு
வென்று அவனை விண் உலகில் செல உய்த்தாற்கு
      விருந்து ஆவீர் மேல் எழுந்து விலங்கல் பாய்ந்து
பொன் சிதறி மணி கொணர்ந்து கரைமேல் சிந்திப்
      புலம் பரந்து நிலம் பரக்கும் பொன்னி நாடன்
தென் தமிழன் வட புலக்கோன் சோழன் சேர்ந்த
      திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே             (5)
   
1502தன்னாலே தன் உருவம் பயந்த தான் ஆய்
      தயங்கு ஒளி சேர் மூவுலகும் தான் ஆய் வான் ஆய்
தன்னாலே தன் உருவின் மூர்த்தி மூன்று ஆய்
      தான் ஆயன் ஆயினான் சரண் என்று உய்வீர்
மின் ஆடு வேல் ஏந்து விளைந்த வேளை
      விண் ஏறத் தனி வேல் உய்த்து உலகம் ஆண்ட
தென் நாடன் குட கொங்கன் சோழன் சேர்ந்த
      திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே             (6)
   
1503முலைத் தடத்த நஞ்சு உண்டு துஞ்சப் பேய்ச்சி
      முது துவரைக் குலபதி ஆய் காலிப்பின்னே
இலைத் தடத்த குழல் ஊதி ஆயர் மாதர்
      இன வளை கொண்டான் அடிக்கீழ் எய்தகிற்பீர்
மலைத் தடத்த மணி கொணர்ந்து வையம் உய்ய
      வளம் கொடுக்கும் வரு புனல் அம் பொன்னிநாடன்
சிலைத் தடக் கைக் குலச் சோழன் சேர்ந்த கோயில்
      திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே             (7)
   
1504முருக்கு இலங்கு கனித் துவர் வாய்ப் பின்னை கேள்வன்
      மன் எல்லாம் முன் அவியச் சென்று வென்றிச்
செருக்களத்துத் திறல் அழியச் செற்ற வேந்தன்
      சிரம் துணித்தான் திருவடி நும் சென்னி வைப்பீர்
இருக்கு இலங்கு திருமொழி வாய் எண் தோள் ஈசற்கு
      எழில் மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட
திருக் குலத்து வளச் சோழன் சேர்ந்த கோயில்
      திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே             (8)
   
1505தார் ஆளன் தண் அரங்க ஆளன் பூமேல்
      தனியாளன் முனியாளர் ஏத்த நின்ற
பேர் ஆளன் ஆயிரம் பேர் உடைய ஆளன்
      பின்னைக்கு மணவாளன்-பெருமை கேட்பீர்
பார் ஆளர் அவர் இவர் என்று அழுந்தை ஏற்ற
      படை மன்னர் உடல் துணியப் பரிமா உய்த்த
தேர் ஆளன் கோச் சோழன் சேர்ந்த கோயில்
      திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே             (9)
   
1506செம் மொழி வாய் நால் வேத வாணர் வாழும்
      திருநறையூர் மணிமாடச் செங் கண் மாலைப்
பொய்ம் மொழி ஒன்று இல்லாத மெய்ம்மையாளன்
      புல மங்கைக் குல வேந்தன் புலமை ஆர்ந்த
அம் மொழி வாய்க் கலிகன்றி இன்பப் பாடல்
      பாடுவார் வியன் உலகில் நமனார் பாடி
வெம் மொழி கேட்டு அஞ்சாதே மெய்ம்மை சொல்லில்
      விண்ணவர்க்கு விருந்து ஆகும் பெருந் தக்கோரே             (10)