நாலாயிர திவ்ய பிரபந்தம்

இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி

திருநறையூர்:6
1527பெடை அடர்த்த மட அன்னம் பிரியாது மலர்க் கமல
மடல் எடுத்து மது நுகரும் வயல் உடுத்த திருநறையூர்-
முடை அடர்த்த சிரம் ஏந்தி மூவுலகும் பலி திரிவோன்
இடர் கெடுத்த திருவாளன் இணை-அடியே அடை நெஞ்சே            (1)
   
1528கழி ஆரும் கன சங்கம் கலந்து எங்கும் நிறைந்து ஏறி
வழி ஆர முத்து ஈன்று வளம் கொடுக்கும் திருநறையூர்-
பழி ஆரும் விறல் அரக்கன் பரு முடிகள்-அவை சிதற
அழல் ஆரும் சரம் துரந்தான் அடி-இணையே அடை நெஞ்சே             (2)
   
1529சுளை கொண்ட பலங்கனிகள் தேன் பாய கதலிகளின்
திளை கொண்ட பழம் கெழுமித் திகழ் சோலைத் திருநறையூர்-
வளை கொண்ட வண்ணத்தன் பின் தோன்றல் மூவுலகோடு
அளை வெண்ணெய் உண்டான்-தன்-அடி-இணையே அடை நெஞ்சே             (3)
   
1530துன்று ஒளித் துகில் படலம் துன்னி எங்கும் மாளிகைமேல்
நின்று ஆர வான் மூடும் நீள் செல்வத் திருநறையூர்-
மன்று ஆரக் குடம் ஆடி வரை எடுத்து மழை தடுத்த
குன்று ஆரும் திரள் தோளன் குரை கழலே அடை நெஞ்சே             (4)
   
1531அகில் குறடும் சந்தனமும் அம் பொன்னும் அணி முத்தும்
மிகக் கொணர்ந்து திரை உந்தும் வியன் பொன்னித் திருநறையூர்-
பகல் கரந்த சுடர் ஆழிப் படையான் இவ் உலகு ஏழும்
புகக் கரந்த திரு வயிற்றன் பொன்-அடியே அடை நெஞ்சே             (5)
   
1532பொன் முத்தும் அரி உகிரும் புழைக் கை மா கரிக் கோடும்
மின்னத் தண் திரை உந்தும் வியன் பொன்னித் திருநறையூர்-
மின் ஒத்த நுண் மருங்குல் மெல்-இயலைத் திரு மார்வில்
மன்ன தான் வைத்து உகந்தான் மலர் அடியே அடை நெஞ்சே             (6)
   
1533சீர் தழைத்த கதிர்ச் செந்நெல் செங் கமலத்து இடை இடையில்
பார் தழைத்துக் கரும்பு ஓங்கிப் பயன் விளைக்கும் திருநறையூர்-
கார் தழைத்த திரு உருவன் கண்ண-பிரான் விண்ணவர்-கோன்
தார் தழைத்த துழாய் முடியன் தளிர் அடியே அடை நெஞ்சே             (7)
   
1534குலை ஆர்ந்த பழுக் காயும் பசுங் காயும் பாளை முத்தும்
தலை ஆர்ந்த இளங் கமுகின் தடஞ் சோலைத் திருநறையூர்-
மலை ஆர்ந்த கோலம் சேர் மணி மாடம் மிக மன்னி
நிலை ஆர நின்றான்-தன் நீள் கழலே அடை நெஞ்சே             (8)
   
1535மறை ஆரும் பெரு வேள்விக் கொழும் புகை போய் வளர்ந்து எங்கும்
நிறை ஆர வான் மூடும் நீள் செல்வத் திருநறையூர்-
பிறை ஆரும் சடையானும் பிரமனும் முன் தொழுது ஏத்த
இறை ஆகி நின்றான் தன் இணை-அடியே அடை நெஞ்சே             (9)
   
1536திண் களக மதிள் புடை சூழ் திருநறையூர் நின்றானை
வண் களகம் நிலவு எறிக்கும் வயல் மங்கை நகராளன்
பண்கள் அகம் பயின்ற சீர்ப் பாடல்-இவை பத்தும் வல்லார்
விண்கள் அகத்து இமையவர் ஆய் வீற்றிருந்து வாழ்வாரே             (10)