நாலாயிர திவ்ய பிரபந்தம்

இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி

திருநறையூர்:10
1567சின இல் செங் கண் அரக்கர் உயிர் மாளச்
      செற்ற வில்லி என்று கற்றவர் தம்தம்
மனமுள் கொண்டு என்றும் எப்போதும் நின்று ஏத்தும்
      மா முனியை மரம் ஏழ் எய்த மைந்தனை
நனவில் சென்று ஆர்க்கும் நண்ணற்கு அரியானை
      நான் அடியேன் நறையூர் நின்ற நம்பியைக்
கனவில் கண்டேன் இன்று கண்டமையால் என்
      கண்-இணைகள் களிப்பக் களித்தேனே             (1)
   
1568தாய் நினைந்த கன்றே ஒக்க என்னையும்
      தன்னையே நினைக்கச் செய்து தான் எனக்கு
ஆய் நினைந்து அருள் செய்யும் அப்பனை
      அன்று இவ் வையகம் உண்டு உமிழ்ந்திட்ட
வாயனை மகரக் குழைக் காதனை
      மைந்தனை மதிள் கோவல் இடைகழி
ஆயனை அமரர்க்கு அரி ஏற்றை என்
      அன்பனை அன்றி ஆதரியேனே             (2)
   
1569வந்த நாள் வந்து என் நெஞ்சு இடம் கொண்டான்
      மற்று ஓர் நெஞ்சு அறியான் அடியேனுடைச்
சிந்தை ஆய் வந்து தென்புலர்க்கு என்னைச்
      சேர்கொடான் இது சிக்கெனப் பெற்றேன்
கொந்து உலாம் பொழில் சூழ் குடந்தைத் தலைக்
      கோவினை குடம் ஆடிய கூத்தனை
எந்தையை எந்தை தந்தை தம்மானை
      எம்பிரானை-எத்தால் மறக்கேனே?             (3)
   
1570உரங்களால் இயன்ற மன்னர் மாள
      பாரதத்து ஒரு தேர் ஐவர்க்கு ஆய்ச் சென்று
இரங்கி ஊர்ந்து அவர்க்கு இன் அருள் செய்யும்
      எம்பிரானை வம்பு ஆர் புனல் காவிரி
அரங்கம் ஆளி என் ஆளி விண் ஆளி
      ஆழி சூழ் இலங்கை மலங்கச் சென்று
சரங்கள் ஆண்ட தன் தாமரைக் கண்ணனுக்கு
      அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாதே            (4)
   
1571ஆங்கு வெம் நரகத்து அழுந்தும்போது
      அஞ்சேல் என்று அடியேனை அங்கே வந்து
தாங்கு தாமரை அன்ன பொன் ஆர் அடி
      எம்பிரானை உம்பர்க்கு அணி ஆய் நின்ற
வேங்கடத்து அரியை பரி கீறியை
      வெண்ணெய் உண்டு உரலினிடை ஆப்புண்ட
தீங் கரும்பினை தேனை நன் பாலினை
      அன்றி என் மனம் சிந்தை செய்யாதே             (5)
   
1572எள் தனைப்பொழுது ஆகிலும் என்றும்
      என் மனத்து அகலாது இருக்கும் புகழ்
தட்டு அலர்த்த பொன்னே அலர் கோங்கின்
      தாழ் பொழில் திருமாலிருஞ்சோலை அம்
கட்டியை கரும்பு ஈன்ற இன் சாற்றை
      காதலால் மறை நான்கும் முன் ஓதிய
பட்டனை பரவைத் துயில் ஏற்றை என்
      பண்பனை அன்றி பாடல் செய்யேனே             (6)
   
1573பண்ணின் இன் மொழி யாழ் நரம்பில் பெற்ற
      பாலை ஆகி இங்கே புகுந்து என்
கண்ணும் நெஞ்சும் வாயும் இடம் கொண்டான்
      கொண்ட பின் மறையோர் மனம் தன் உள்
விண் உளார் பெருமானை எம்மானை
      வீங்கு நீர் மகரம் திளைக்கும் கடல்
வண்ணன் மா மணி வண்ணன் எம் அண்ணல்
      வண்ணமே அன்றி வாய் உரையாதே             (7)
   
1574இனி எப் பாவம் வந்து எய்தும் சொல்லீர் எமக்கு-
      இம்மையே அருள்பெற்றமையால் அடும்
துனியைத் தீர்த்து இன்பமே தருகின்றது ஓர்
      தோற்றத் தொல் நெறியை வையம் தொழப்படும்
முனியை வானவரால் வணங்கப்படும்
      முத்தினை பத்தர்-தாம் நுகர்கின்றது ஓர்
கனியை காதல் செய்து என் உள்ளம் கொண்ட
      கள்வனை-இன்று கண்டுகொண்டேனே             (8)
   
1575என் செய்கேன் அடியேன் உரையீர் இதற்கு
      என்றும் என் மனத்தே இருக்கும் புகழ்த்
தஞ்சை ஆளியை பொன்பெயரோன் நெஞ்சம்
      அன்று இடந்தவனை தழலே புரை
மின் செய் வாள் அரக்கன் நகர் பாழ்பட
      சூழ் கடல் சிறை வைத்து இமையோர் தொழும்
பொன் செய் மால் வரையை மணிக் குன்றினை
      அன்றி என் மனம் போற்றி என்னாதே             (9)
   
1576தோடு விண்டு அலர் பூம் பொழில் மங்கையர்
      தோன்றல் வாள் கலியன் திரு ஆலி
நாடன் நல் நறையூர் நின்ற நம்பி-தன்
      நல்ல மா மலர்ச் சேவடி சென்னியில்
சூடியும் தொழுதும் எழுந்து ஆடியும்
      தொண்டர்கட்கு அவன் சொன்ன சொல்-மாலைப்
பாடல் பத்து-இவை பாடுமின் தொண்டீர்
      பாட நும்மிடைப் பாவம் நில்லாவே             (10)