நாலாயிர திவ்ய பிரபந்தம்

இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி

திருச்சேறை
1577கண் சோர வெம் குருதி வந்து இழிய
      வெம் தழல்போல் கூந்தலாளை
மண் சேர முலை உண்ட மா மதலாய்
      வானவர்-தம் கோவே என்று
விண் சேரும் இளந் திங்கள் அகடு உரிஞ்சு
      மணி மாடம் மல்கு செல்வத்
தண் சேறை எம் பெருமான் தாள் தொழுவார்
      காண்மின்-என் தலைமேலாரே            (1)
   
1578அம் புருவ வரி நெடுங் கண் அலர்-மகளை
      வரை அகலத்து அமர்ந்து மல்லல்
கொம்பு உருவ விளங்கனிமேல் இளங் கன்று
      கொண்டு எறிந்த கூத்தர் போலாம்
வம்பு அலரும் தண் சோலை வண் சேறை
      வான் உந்து கோயில் மேய
எம் பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும்
      என் மனத்தே இருக்கின்றாரே             (2)
   
1579மீது ஓடி வாள் எயிறு மின் இலக
      முன் விலகும் உருவினாளைக்
காதோடு கொடி மூக்கு அன்று உடன் அறுத்த
      கைத்தலத்தா என்று நின்று
தாதோடு வண்டு அலம்பும் தண் சேறை
      எம் பெருமான் தாளை ஏத்தி
போதோடு புனல் தூவும் புண்ணியரே
      விண்ணவரின் பொலிகின்றாரே             (3)
   
1580தேர் ஆளும் வாள் அரக்கன் தென் இலங்கை
      வெம் சமத்துப் பொன்றி வீழ
போர் ஆளும் சிலை-அதனால் பொரு கணைகள்
      போக்குவித்தாய் என்று நாளும்
தார் ஆளும் வரை மார்பன் தண் சேறை
      எம் பெருமான் உம்பர் ஆளும்
பேராளன் பேர் ஓதும் பெரியோரை
      ஒருகாலும் பிரிகிலேனே             (4)
   
1581வந்திக்கும் மற்றவர்க்கும் மாசு உடம்பின்
      வல் அமணர் தமக்கும் அல்லேன்
முந்திச் சென்று அரி உரு ஆய் இரணியனை
      முரண் அழித்த முதல்வர்க்கு அல்லால்-
சந்தப் பூ மலர்ச் சோலைத் தண் சேறை
      எம் பெருமான் தாளை நாளும்
சிந்திப்பார்க்கு என் உள்ளம் தேன் ஊறி
      எப்பொழுதும் தித்திக்குமே             (5)
   
1582பண்டு ஏனம் ஆய் உலகை அன்று இடந்த
      பண்பாளா என்று நின்று
தொண்டு ஆனேன் திருவடியே துணை அல்லால்
      துணை இலேன் சொல்லுகின்றேன்
வண்டு ஏந்தும் மலர்ப் புறவின் வண் சேறை
      எம் பெருமான் அடியார்-தம்மைக்
கண்டேனுக்கு இது காணீர்-என் நெஞ்சும்
      கண் இணையும் களிக்கும் ஆறே             (6)
   
1583பை விரியும் வரி அரவில் படு கடலுள்
      துயில் அமர்ந்த பண்பா என்றும்
மை விரியும் மணி வரைபோல் மாயவனே
      என்று என்றும் வண்டு ஆர் நீலம்
செய் விரியும் தண் சேறை எம் பெருமான்
      திரு வடிவைச் சிந்தித்தேற்கு என்
ஐ அறிவும் கொண்டானுக்கு ஆள் ஆனார்க்கு
      ஆள் ஆம்-என் அன்பு-தானே             (7)
   
1584உண்ணாது வெம் கூற்றம் ஓவாத
      பாவங்கள் சேரா-மேலை
விண்ணோரும் மண்ணோரும் வந்து இறைஞ்சும்
      மென் தளிர்போல் அடியினானை
பண் ஆர வண்டு இயம்பும் பைம் பொழில் சூழ்
      தண் சேறை அம்மான்-தன்னை
கண் ஆரக் கண்டு உருகி கை ஆரத்
      தொழுவாரைக் கருதுங்காலே             (8)
   
1585கள்ளத்தேன் பொய் அகத்தேன் ஆதலால்
      போது ஒருகால் கவலை என்னும்
வெள்ளத்தேற்கு என்கொலோ?-விளை வயலுள்
      கரு நீலம் களைஞர் தாளால்
தள்ள தேன் மணம் நாறும் தண் சேறை
      எம் பெருமான் தாளை நாளும்
உள்ளத்தே வைப்பாருக்கு இது காணீர்-
      என் உள்ளம் உருகும் ஆறே             (9)
   
1586பூ மாண் சேர் கருங் குழலார்போல் நடந்து
      வயல் நின்ற பெடையோடு அன்னம்
தேமாவின் இன் நிழலில் கண் துயிலும்
      தண் சேறை அம்மான்-தன்னை
வா மான் தேர்ப் பரகாலன் கலிகன்றி
      ஒலி மாலை கொண்டு தொண்டீர்
தூ மாண் சேர் பொன் அடிமேல் சூட்டுமின்-நும்
      துணைக் கையால் தொழுது நின்றே             (10)