நாலாயிர திவ்ய பிரபந்தம்

இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி

திருவழுந்தூர்: 3
1607திறல் முருகன் அனையார் தென் அழுந்தையில் மன்னி நின்ற
அற முதல்வன்-அவனை அணி ஆலியர்-கோன் மருவார்
கறை நெடு வேல் வலவன் கலிகன்றி சொல் ஐ இரண்டும்
முறை வழுவாமை வல்லார் முழுது ஆள்வர்-வான்-உலகே             (10)
   
1608திருவுக்கும் திரு ஆகிய செல்வா
      தெய்வத்துக்கு அரசே செய்ய கண்ணா
உருவச் செஞ் சுடர் ஆழி வல்லானே
      உலகு உண்ட ஒருவா திரு மார்பா
ஒருவற்கு ஆற்றி உய்யும் வகை இன்றால்
      உடன் நின்று ஐவர் என்னுள் புகுந்து ஒழியாது
அருவித் தின்றிட அஞ்சி நின் அடைந்தேன்
      அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே             (1)
   
1609பந்து ஆர் மெல் விரல் நல் வளைத் தோளி
      பாவை பூ-மகள்-தன்னொடும் உடனே
வந்தாய் என் மனத்தே மன்னி நின்றாய்
      மால் வண்ணா மழைபோல் ஒளி வண்ணா
சந்தோகா பௌழியா தைத்திரியா
      சாம வேதியனே நெடுமாலே
அந்தோ நின் அடி அன்றி மற்று அறியேன்-
      அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே            (2)
   
1610நெய் ஆர் ஆழியும் சங்கமும் ஏந்தும்
      நீண்ட தோள் உடையாய் அடியேனைச்
செய்யாத உலகத்திடைச் செய்தாய்
      சிறுமைக்கும் பெருமைக்கும் உள் புகுந்து
பொய்யால் ஐவர் என் மெய் குடி ஏறிப்
      போற்றி வாழ்வதற்கு அஞ்சி நின் அடைந்தேன்
ஐயா நின் அடி அன்றி மற்று அறியேன்-
      அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே             (3)
   
1611பரனே பஞ்சவன் பூழியன் சோழன்
      பார் மன்னர் மன்னர்-தாம் பணிந்து ஏத்தும்
வரனே மாதவனே மதுசூதா
      மற்று ஓர் நல் துணை நின் அலால் இலேன் காண்
      நரனே நாரணனே திருநறையூர்
      நம்பீ எம் பெருமான் உம்பர் ஆளும்
அரனே ஆதிவராகம் முன் ஆனாய்
      அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே             (4)
   
1612விண்டான் விண் புக வெம் சமத்து அரி ஆய்
      பரியோன் மார்வு-அகம் பற்றிப் பிளந்து
பண்டு ஆன் உய்ய ஓர் மால் வரை ஏந்தும்
      பண்பாளா பரனே பவித்திரனே
கண்டேன் நான் கலியுகத்ததன் தன்மை
      கருமம் ஆவதும் என்-தனக்கு அறிந்தேன்
அண்டா நின் அடி அன்றி மற்று அறியேன்
      -அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே             (5)
   
1613தோயா இன் தயிர் நெய் அமுது உண்ண
      சொன்னார் சொல்லி நகும் பரிசே பெற்ற
தாயால் ஆப்புண்டு இருந்து அழுது ஏங்கும்
      தாடாளா தரையோர்க்கும் விண்ணோர்க்கும்
சேயாய் கிரேத திரேத துவாபர
      கலியுகம்-இவை நான்கும் முன் ஆனாய்
ஆயா நின் அடி அன்றி மற்று அறியேன்
      -அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே             (6)
   
1614கறுத்து கஞ்சனை அஞ்ச முனிந்தாய்
      கார் வண்ணா கடல்போல் ஒளி வண்ணா
இறுத்திட்டு ஆன் விடை ஏழும் முன் வென்றாய்
      எந்தாய் அந்தரம் ஏழும் முன் ஆனாய்
பொறுத்துக்கொண்டிருந்தால் பொறுக்கொணாப் போகமே
      நுகர்வான் புகுந்து ஐவர்
அறுத்துத் தின்றிட அஞ்சி நின் அடைந்தேன்
      -அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே            (7)
   
1615நெடியானே கடி ஆர்கலி நம்பீ
      நின்னையே நினைந்து இங்கு இருப்பேனைக்
கடி ஆர் காளையர் ஐவர் புகுந்து
      காவல் செய்த அக் காவலைப் பிழைத்து
குடிபோந்து உன் அடிக்கீழ் வந்து புகுந்தேன்
      கூறை சோறு இவை தந்து எனக்கு அருளி
அடியேனைப் பணி ஆண்டுகொள்-எந்தாய்
      அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே             (8)
   
1616கோ ஆய் ஐவர் என் மெய் குடி ஏறி
      கூறை சோறு இவை தா என்று குமைத்து
போகார் நான் அவரைப் பொறுக்ககிலேன்
      புனிதா புள் கொடியாய் நெடுமாலே
தீ வாய் நாகணையில் துயில்வானே
      திருமாலே இனிச் செய்வது ஒன்று அறியேன்
ஆஆ என்று அடியேற்கு இறை இரங்காய்
      -அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே            (9)