நாலாயிர திவ்ய பிரபந்தம்

இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி

திருவழுந்தூர்: 4
1617அன்னம் மன்னு பைம் பூம் பொழில் சூழ்ந்த
      அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானைக்
கன்னி மன்னு திண் தோள் கலிகன்றி
      ஆலி நாடன் மங்கைக் குல வேந்தன்
சொன்ன இன் தமிழ் நல் மணிக் கோவை
      தூய மாலை இவை-பத்தும் வல்லார்
மன்னி மன்னவர் ஆய் உலகு ஆண்டு
      மான வெண் குடைக்கீழ் மகிழ்வாரே             (10)
   
1618செங் கமலத் திருமகளும் புவியும் செம் பொன்
      திருவடியின் இணை வருட முனிவர் ஏத்த
வங்கம் மலி தடங் கடலுள் அநந்தன் என்னும்
      வரி அரவின் அணைத் துயின்ற மாயோன் காண்மின்-
எங்கும் மலி நிறை புகழ் நால் வேதம் ஐந்து
      வேள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை
அம் கமலத்து அயன் அனையார் பயிலும் செல்வத்து
      அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்-கோவே            (1)
   
1619முன் இவ் உலகு ஏழும் இருள் மண்டி உண்ண
      முனிவரொடு தானவர்கள் திசைப்ப வந்து
பன்னு கலை நால் வேதப் பொருளை எல்லாம்
      பரி முகம் ஆய் அருளிய எம் பரமன் காண்மின்-
செந்நெல் மலி கதிர் கவரி வீச சங்கம்
      -அவை முரல செங் கமல மலரை ஏறி
அன்னம் மலி பெடையோடும் அமரும் செல்வத்து
      அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்-கோவே             (2)
   
1620குலத் தலைய மத வேழம் பொய்கை புக்கு
      கோள் முதலை பிடிக்க அதற்கு அனுங்கி நின்று
நிலத் திகழும் மலர்ச் சுடர் ஏய் சோதீ என்ன
      நெஞ்சு இடர் தீர்த்தருளிய என் நிமலன் காண்மின்-
மலைத் திகழ் சந்து அகில் கனகம் மணியும் கொண்டு
      வந்து உந்தி வயல்கள்தொறும் மடைகள் பாய
அலைத்து வரும் பொன்னி வளம் பெருகும் செல்வத்து
      அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்-கோவே             (3)
   
1621சிலம்பு முதல் கலன் அணிந்து ஓர் செங்கல் குன்றம்
      திகழ்ந்தது என திரு உருவம் பன்றி ஆகி
இலங்கு புவி மடந்தை-தனை இடந்து புல்கி
      எயிற்றிடை வைத்தருளிய எம் ஈசன் காண்மின்-
புலம்பு சிறை வண்டு ஒலிப்ப பூகம் தொக்க
      பொழில்கள்தொறும் குயில் கூவ மயில்கள் ஆல
அலம்பு திரைப் புனல் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து
      அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்-கோவே             (4)
   
1622சினம் மேவும் அடல் அரியின் உருவம் ஆகி
      திறல் மேவும் இரணியனது ஆகம் கீண்டு
மனம் மேவு வஞ்சனையால் வந்த பேய்ச்சி
      மாள உயிர் வவ்விய எம் மாயோன் காண்மின்-
இனம் மேவு வரி வளைக் கை ஏந்தும் கோவை
      ஏய் வாய மரகதம்போல் கிளியின் இன் சொல்
அனம் மேவு நடை மடவார் பயிலும் செல்வத்து
      அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்-கோவே             (5)
   
1623வானவர்-தம் துயர் தீர வந்து தோன்றி
      மாண் உரு ஆய் மூவடி மாவலியை வேண்டி
தான் அமர ஏழ் உலகும் அளந்த வென்றித்
      தனி முதல் சக்கரப் படை என் தலைவன் காண்மின்-
தேன் அமரும் பொழில் தழுவும் எழில் கொள் வீதி
      செழு மாட மாளிகைகள் கூடம்தோறும்
ஆன தொல் சீர் மறையாளர் பயிலும் செல்வத்து
      அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்-கோவே (6)
   
1624பந்து அணைந்த மெல் விரலாள் சீதைக்கு ஆகி
      பகலவன் மீது இயங்காத இலங்கை வேந்தன்
அந்தம் இல் திண் கரம் சிரங்கள் புரண்டு வீழ
      அடு கணையால் எய்து உகந்த அம்மான் காண்மின்-
செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர்
      திசைமுகனை அனையவர்கள் செம்மை மிக்க
அந்தணர்-தம் ஆகுதியின் புகை ஆர் செல்வத்து
      அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்-கோவே (7)
   
1625கும்பம் மிகு மத வேழம் குலைய கொம்பு
      பறித்து மழ விடை அடர்த்து குரவை கோத்து
வம்பு அவிழும் மலர்க் குழலாள் ஆய்ச்சி வைத்த
      தயிர் வெண்ணெய் உண்டு உகந்த மாயோன் காண்மின்-
செம் பவளம் மரதகம் நல் முத்தம் காட்டத்
      திகழ் பூகம் கதலி பல வளம் மிக்கு எங்கும்
அம் பொன் மதிள் பொழில் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து
      அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்-கோவே            (8)
   
1626ஊடு ஏறு கஞ்சனொடு மல்லும் வில்லும்
      ஒண் கரியும் உருள் சகடும் உடையச் செற்ற
நீடு ஏறு பெரு வலித் தோள் உடைய வென்றி
      நிலவு புகழ் நேமி அங்கை நெடியோன் காண்மின்-
சேடு ஏறு பொழில் தழுவும் எழில் கொள் வீதி
      திருவிழவில் மணி அணிந்த திண்ணைதோறும்
ஆடு ஏறு மலர்க் குழலார் பயிலும் செல்வத்து
      அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்-கோவே             (9)