நாலாயிர திவ்ய பிரபந்தம்

இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி

சிறுபுலியூர்ச் சலசயனம்
1627பன்றி ஆய் மீன் ஆகி அரி ஆய் பாரைப்
      படைத்து காத்து உண்டு உமிழ்ந்த பரமன்-தன்னை
அன்று அமரர்க்கு அதிபதியும் அயனும் சேயும்
      அடி பணிய அணி அழுந்தூர் நின்ற கோவை
      கன்றி நெடு வேல் வலவன் ஆலி நாடன்
      கலிகன்றி ஒலிசெய்த இன்பப் பாடல்
ஒன்றினொடு நான்கும் ஓர் ஐந்தும் வல்லார்
      ஒலி கடல் சூழ் உலகு ஆளும் உம்பர்-தாமே            (10)
   
1628கள்ளம் மனம் விள்ளும் வகை கருதி கழல் தொழுவீர்
வெள்ளம் முது பரவைத் திரை விரிய கரை எங்கும்
தெள்ளும் மணி திகழும் சிறுபுலியூர்ச் சலசயனத்து
உள்ளும் எனது உள்ளத்துளும் உறைவாரை உள்ளீரே (1)
   
1629தெருவில் திரி சிறு நோன்பியர் செஞ் சோற்றொடு கஞ்சி
மருவிப் பிரிந்தவர் வாய்மொழி மதியாது வந்து அடைவீர்-
திருவில் பொலி மறையோர் சிறுபுலியூர்ச் சலசயனத்து
உருவக் குறள் அடிகள் அடி உணர்மின்-உணர்வீரே            (2)
   
1630பறையும் வினை தொழுது உய்ம்மின் நீர்-பணியும் சிறு தொண்டீர்
அறையும் புனல் ஒருபால் வயல் ஒருபால் பொழில் ஒருபால்
சிறை வண்டு இனம் அறையும் சிறுபுலியூர்ச் சலசயனத்து
உறையும் இறை அடி அல்லது ஒன்று இறையும் அறியேனே            (3)
   
1631வான் ஆர் மதி பொதியும் சடை மழுவாளியொடு ஒருபால்
தான் ஆகிய தலைவன்-அவன் அமரர்க்கு அதிபதி ஆம்
தேன் ஆர் பொழில் தழுவும் சிறுபுலியூர்ச் சலசயனத்து
ஆன் ஆயனது அடி அல்லது ஒன்று அறியேன் அடியேனே            (4)
   
1632நந்தா நெடு நரகத்திடை நணுகாவகை நாளும்
எந்தாய் என இமையோர் தொழுது ஏத்தும் இடம் எறி நீர்ச்
செந்தாமரை மலரும் சிறுபுலியூர்ச் சலசயனத்து
அம் தாமரை அடியாய் உனது அடியேற்கு அருள்புரியே            (5)
   
1633முழு நீலமும் மலர் ஆம்பலும் அரவிந்தமும் விரவிக்
கழுநீரொடு மடவார்-அவர் கண் வாய் முகம் மலரும்
செழு நீர் வயல் தழுவும் சிறுபுலியூர்ச் சலசயனம்
தொழும் நீர்மை-அது உடையார் அடி தொழுவார் துயர் இலரே            (6)
   
1634சேய் ஓங்கு தண் திருமாலிருஞ்சோலை மலை உறையும்
மாயா எனக்கு உரையாய் இது-மறை நான்கின் உளாயோ?
தீ ஓம்புகை மறையோர் சிறுபுலியூர்ச் சலசயனத்-
தாயோ? உனது அடியார் மனத்தாயோ? அறியேனே            (7)
   
1635மை ஆர் வரி நீல மலர்க் கண்ணார் மனம் விட்டிட்டு
உய்வான் உன கழலே தொழுது எழுவேன் கிளி மடவார்
செவ்வாய் மொழி பயிலும் சிறுபுலியூர்ச் சலசயனத்து
ஐ வாய் அரவு-அணைமேல் உறை அமலா அருளாயே            (8)
   
1636கரு மா முகில் உருவா கனல் உருவா புனல் உருவா
பெரு மால் வரை உருவா பிற உருவா நினது உருவா
திரு மா மகள் மருவும் சிறுபுலியூர்ச் சலசயனத்து
அரு மா கடல் அமுதே உனது அடியே சரண் ஆமே (9)