நாலாயிர திவ்ய பிரபந்தம்

இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி

திருக்கண்ணபுரம்: 3
1667கார் மலி கண்ணபுரத்து எம் அடிகளைப்
பார் மலி மங்கையர்-கோன் பரகாலன் சொல்
சீர் மலி பாடல் இவை பத்தும் வல்லவர்
நீர் மலி வையத்து நீடு நிற்பார்களே            (10)
   
1668கரை எடுத்த சுரி சங்கும் கன பவளத்து எழு கொடியும்
திரை எடுத்து வரு புனல் சூழ் திருக்கண்ணபுரத்து உறையும்
விரை எடுத்த துழாய் அலங்கல் விறல் வரைத் தோள் புடைபெயர
வரை எடுத்த பெருமானுக்கு இழந்தேன்-என் வரி வளையே             (1)
   
1669அரி விரவு முகில் கணத்தால் அகில் புகையால் வரையோடும்
தெரிவு அரிய மணி மாடத் திருக்கண்ணபுரத்து உறையும்
வரி அரவின் அணைத் துயின்று மழை மதத்த சிறு தறு கண்
கரி வெருவ மருப்பு ஒசித்தாற்கு இழந்தேன்-என் கன வளையே (2)
   
1670துங்க மா மணி மாட நெடு முகட்டின் சூலிகை போம்
திங்கள் மா முகில் துணிக்கும் திருக்கண்ணபுரத்து உறையும்
பைங் கண் மால் விடை அடர்த்து பனி மதி கோள் விடுத்து உகந்த
செங் கண் மால் அம்மானுக்கு இழந்தேன்-என் செறி வளையே             (3)
   
1671கணம் மருவும் மயில் அகவு கடி பொழில் சூழ் நெடு மறுகின்
திணம் மருவு கன மதிள் சூழ் திருக்கண்ணபுரத்து உறையும்
மணம் மருவு தோள் ஆய்ச்சி ஆர்க்க போய் உரலோடும்
புணர் மருதம் இற நடந்தாற்கு இழந்தேன்-என் பொன் வளையே (4)
   
1672வாய் எடுத்த மந்திரத்தால் அந்தணர் தம் செய் தொழில்கள்
தீ எடுத்து மறை வளர்க்கும் திருக்கண்ணபுரத்து உறையும்
தாய் எடுத்த சிறு கோலுக்கு உளைந்து ஓடி தயிர் உண்ட
வாய் துடைத்த மைந்தனுக்கு இழந்தேன்-என் வரி வளையே (5)
   
1673மடல் எடுத்த நெடுந் தாழை மருங்கு எல்லாம் வளர் பவளம்
திடல் எடுத்து சுடர் இமைக்கும் திருக்கண்ணபுரத்து உறையும்
அடல் அடர்த்து அன்று இரணியனை முரண் அழிய அணி உகிரால்
உடல் எடுத்த பெருமானுக்கு இழந்தேன்-என் ஒளி வளையே             (6)
   
1674வண்டு அமரும் மலர்ப் புன்னை வரி நீழல் அணி முத்தம்
தெண் திரைகள் வரத் திரட்டும் திருக்கண்ணபுரத்து உறையும்
எண் திசையும் எழு கடலும் இரு நிலனும் பெரு விசும்பும்
உண்டு உமிழ்ந்த பெருமானுக்கு இழந்தேன்-என் ஒளி வளையே (7)
   
1675கொங்கு மலி கருங் குவளை கண் ஆகத் தெண் கயங்கள்
செங் கமலம் முகம் அலர்த்தும் திருக்கண்ணபுரத்து உறையும்
வங்கம் மலி தடங் கடலுள் வரி அரவின் அணைத் துயின்ற
செங்கமலநாபனுக்கு இழந்தேன்-என் செறி வளையே            (8)
   
1676வார் ஆளும் இளங் கொங்கை நெடும் பணைத் தோள் மடப் பாவை
சீர் ஆளும் வரை மார்வன் திருக்கண்ணபுரத்து உறையும்
பேராளன் ஆயிரம் பேர் ஆயிர வாய் அரவு-அணைமேல்
பேராளர் பெருமானுக்கு இழந்தேன்-என் பெய் வளையே            (9)
   
1677தே மருவு பொழில் புடை சூழ் திருக்கண்ணபுரத்து உறையும்
வாமனனை மறி கடல் சூழ் வயல் ஆலி வள நாடன்
காமரு சீர்க் கலிகன்றி கண்டு உரைத்த தமிழ்-மாலை
நா மருவி இவை பாட வினை ஆய நண்ணாவே            (10)