நாலாயிர திவ்ய பிரபந்தம்

இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி

திருக்கண்ணபுரம்: 7
1707வியம் உடை விடை இனம் உடைதர மட மகள்
குயம் மிடை தட வரை அகலம்-அது உடையவர்-
நயம் உடை நடை அனம் இளையவர் நடை பயில்
கயம் மிடை கணபுரம்-அடிகள்-தம் இடமே             (1)
   
1708இணை மலி மருது இற எருதினொடு இகல் செய்து
துணை மலி முலையவள் மணம் மிகு கலவியுள்-
மணம் மலி விழவினொடு அடியவர் அளவிய
கணம் மலி கணபுரம்-அடிகள்-தம் இடமே             (2)
   
1709புயல் உறு வரை-மழை பொழிதர மணி நிரை
மயல் உற வரை குடை எடுவிய நெடியவர்-
முயல் துளர் மிளை முயல் துள வள விளை வயல்
கயல் துளு கணபுரம்-அடிகள்-தம் இடமே             (3)
   
1710ஏதலர் நகைசெய இளையவர் அளை வெணெய்
போது செய்து அமரிய புனிதர்-நல் விரை மலர்
கோதிய மதுகரம் குலவிய மலர்-மகள்
காதல்செய் கணபுரம்-அடிகள்-தம் இடமே             (4)
   
1711தொண்டரும் அமரரும் முனிவரும் தொழுது எழ
அண்டமொடு அகல்-இடம் அளந்தவர் அமர்செய்து
விண்டவர் பட மதிள் இலங்கை முன் எரி எழக்
கண்டவர் கணபுரம்-அடிகள்-தம் இடமே             (5)
   
1712மழுவு இயல் படை உடையவன் இடம் மழை முகில்
தழுவிய உருவினர்-திருமகள் மருவிய
கொழுவிய செழு மலர் முழுசிய பறவை பண்
எழுவிய கணபுரம்-அடிகள்-தம் இடமே             (6)
   
1713பரிதியொடு அணி மதி பனி வரை திசை நிலம்
எரி தியொடு என இன இயல்வினர் செலவினர்-
சுருதியொடு அரு மறை முறை சொலும் அடியவர்
கருதிய கணபுரம்-அடிகள்-தம் இடமே            (7)
   
1714படி புல்கும் அடி-இணை பலர் தொழ மலர் வைகு
கொடி புல்கு தட வரை அகலம்-அது உடையவர்-
முடி புல்கு நெடு வயல் படை செல அடி மலர்
கடி புல்கு கணபுரம்-அடிகள்-தம் இடமே            (8)
   
1715புலம் மனும் மலர்மிசை மலர்-மகள் புணரிய
நிலமகள் என இன மகளிர்கள் இவரொடும்
வலம் மனு படையுடை மணி வணர்-நிதி குவைக்
கலம் மனு கணபுரம்-அடிகள்-தம் இடமே             (9)
   
1716மலி புகழ் கணபுரம் உடைய எம் அடிகளை
வலி கெழு மதிள் அயல் வயல் அணி மங்கையர்
கலியன தமிழ் இவை விழுமிய இசையினொடு
ஒலி சொலும் அடியவர் உறு துயர் இலரே (10)