நாலாயிர திவ்ய பிரபந்தம்

இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி

திருக்கண்ணபுரம்: 8
1717வானோர் அளவும் முது முந்நீர் வளர்ந்த காலம் வலி உருவின்
மீன் ஆய் வந்து வியந்து உய்யக் கொண்ட தண் தாமரைக் கண்ணன்
ஆனா உருவில் ஆன் ஆயன்-அவனை-அம் மா விளை வயலுள்
கான் ஆர் புறவின் கண்ணபுரத்து-அடியேன் கண்டுகொண்டேனே (1)
   
1718மலங்கு விலங்கு நெடு வெள்ளம் மறுக அங்கு ஓர் வரை நட்டு
இலங்கு சோதி ஆர் அமுதம் எய்தும் அளவு ஓர் ஆமை ஆய்
விலங்கல் திரியத் தடங் கடலுள் சுமந்து கிடந்த வித்தகனை-
கலங்கல் முந்நீர்க் கண்ணபுரத்து-அடியேன் கண்டுகொண்டேனே (2)
   
1719பார் ஆர் அளவும் முது முந்நீர் பரந்த காலம் வளை மருப்பின்
ஏர் ஆர் உருவத்து ஏனம் ஆய் எடுத்த ஆற்றல் அம்மானை-
கூர் ஆர் ஆரல் இரை கருதி குருகு பாய கயல் இரியும்
கார் ஆர் புறவின் கண்ணபுரத்து-அடியேன் கண்டுகொண்டேனே (3)
   
1720உளைந்த அரியும் மானிடமும் உடனாய்த் தோன்ற ஒன்றுவித்து
விளைந்த சீற்றம் விண் வெதும்ப வேற்றோன் அகலம் வெம் சமத்துப்
பிளந்து வளைந்த உகிரானை-பெருந் தண் செந்நெல் குலை தடிந்து
களம் செய் புறவின் கண்ணபுரத்து-அடியேன் கண்டுகொண்டேனே (4)
   
1721தொழும் நீர் வடிவின் குறள் உருவு ஆய் வந்து தோன்றி மாவலிபால்
முழுநீர் வையம் முன் கொண்ட மூவா உருவின் அம்மானை-
உழும் நீர் வயலுள் பொன் கிளைப்ப ஒருபால் முல்லை முகையோடும்
கழுநீர் மலரும் கண்ணபுரத்து-அடியேன் கண்டுகொண்டேனே            (5)
   
1722வடிவாய் மழுவே படை ஆக வந்து தோன்றி மூவெழுகால்
படி ஆர் அரசு களைகட்ட பாழியானை அம்மானை-
குடியா வண்டு கொண்டு உண்ண கோல நீலம் மட்டு உகுக்கும்
கடி ஆர் புறவின் கண்ணபுரத்து-அடியேன் கண்டுகொண்டேனே             (6)
   
1723வையம் எல்லாம் உடன் வணங்க வணங்கா மன்னனாய்த் தோன்றி
வெய்ய சீற்றக் கடி இலங்கை குடிகொண்டு ஓட வெம் சமத்துச்
செய்த வெம்போர் நம்பரனை-செழுந் தண் கானல் மணம் நாறும்
கைதை வேலிக் கண்ணபுரத்து-அடியேன் கண்டுகொண்டேனே            (7)
   
1724ஒற்றைக் குழையும் நாஞ்சிலும் ஒருபால் தோன்ற தான் தோன்றி
வெற்றித் தொழிலார் வேல் வேந்தர் விண்பால் செல்ல வெம் சமத்துச்
செற்ற கொற்றத் தொழிலானை-செந்தீ மூன்றும் இல் இருப்ப
கற்ற மறையோர் கண்ணபுரத்து-அடியேன் கண்டுகொண்டேனே            (8)
   
1725துவரிக் கனிவாய் நில மங்கை துயர் தீர்ந்து உய்ய பாரதத்துள்
இவரித்து அரசர் தடுமாற இருள் நாள் பிறந்த அம்மானை-
உவரி ஓதம் முத்து உந்த ஒருபால் ஒருபால் ஒண் செந்நெல்
கவரி வீசும் கண்ணபுரத்து-அடியேன் கண்டுகொண்டேனே            (9)
   
1726மீனோடு ஆமை கேழல் அரி குறள் ஆய் முன்னும் இராமன் ஆய்
தான் ஆய் பின்னும் இராமன் ஆய் தாமோதரன் ஆய் கற்கியும்
ஆனான்-தன்னைக் கண்ணபுரத்து அடியன் கலியன் ஒலிசெய்த
தேன் ஆர் இன் சொல் தமிழ்-மாலை செப்ப பாவம் நில்லாவே             (10)