நாலாயிர திவ்ய பிரபந்தம்

இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி

திருக்கண்ணபுரம்: 10
1737வண்டு ஆர் பூ மா மலர்-மங்கை மண நோக்கம்
உண்டானே!-உன்னை உகந்து-உகந்து உன்-தனக்கே
தொண்டு ஆனேற்கு என் செய்கின்றாய்? சொல்லு-நால்வேதம்
கண்டானே கண்ணபுரத்து உறை அம்மானே (1)
   
1738பெரு நீரும் விண்ணும் மலையும் உலகு ஏழும்
ஒரு தாரா நின்னுள் ஒடுக்கிய நின்னை அல்லால்
வரு தேவர் மற்று உளர் என்று என் மனத்து இறையும்
கருதேன் நான்-கண்ணபுரத்து உறை அம்மானே            (2)
   
1739மற்றும் ஓர் தெய்வம் உளது என்று இருப்பாரோடு
உற்றிலேன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
மற்று எல்லாம் பேசிலும் நின் திரு எட்டு எழுத்தும்
கற்று நான்-கண்ணபுரத்து உறை அம்மானே            (3)
   
1740பெண் ஆனாள் பேர் இளங் கொங்கையின் ஆர் அழல்போல்
உண்ணா நஞ்சு உண்டு உகந்தாயை உகந்தேன் நான்-
மண் ஆளா வாள் நெடுங் கண்ணி மது மலராள்
கண்ணாளா கண்ணபுரத்து உறை அம்மானே            (4)
   
1741பெற்றாரும் சுற்றமும் என்று இவை பேணேன் நான்
மற்று ஆரும் பற்று இலேன் ஆதலால் நின் அடைந்தேன்
உற்றான் என்று உள்ளத்து வைத்து அருள்செய் கண்டாய்-
கற்றார் சேர் கண்ணபுரத்து உறை அம்மானே            (5)
   
1742ஏத்தி உன் சேவடி எண்ணி இருப்பாரைப்
பார்த்திருந்து அங்கு நமன்-தமர் பற்றாது
சோத்தம் நாம் அஞ்சுதும் என்று தொடாமை நீ
காத்திபோல்-கண்ணபுரத்து உறை அம்மானே             (6)
   
1743வெள்ளை நீர் வெள்ளத்து அணைந்த அரவு-அணைமேல்
துள்ளு நீர் மெள்ளத் துயின்ற பெருமானே
வள்ளலே உன் தமர்க்கு என்றும் நமன்தமர்
கள்ளர்போல்-கண்ணபுரத்து உறை அம்மானே            (7)
   
1744மாண் ஆகி வையம் அளந்ததுவும் வாள் அவுணன்
பூண் ஆகம் கீண்டதுவும் ஈண்டு நினைந்து இருந்தேன்
பேணாத வல்வினையேன் இடர் எத்தனையும்
காணேன் நான்-கண்ணபுரத்து உறை அம்மானே            (8)
   
1745நாட்டினாய் என்னை உனக்கு முன் தொண்டு ஆக
மாட்டினேன் அத்தனையே கொண்டு என் வல்வினையை
பாட்டினால் உன்னை என் நெஞ்சத்து இருந்தமை
காட்டினாய்-கண்ணபுரத்து உறை அம்மானே            (9)
   
1746கண்ட சீர்க் கண்ணபுரத்து உறை அம்மானை
கொண்ட சீர்த் தொண்டன் கலியன் ஒலி மாலை
பண்டமாய்ப் பாடும் அடியவர்க்கு எஞ்ஞான்றும்
அண்டம் போய் ஆட்சி அவர்க்கு அது அறிந்தோமே (10)