இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி
|
திருநாகை: அச்சோப்பதிகம் |
1757 | பொன் இவர் மேனி மரகதத்தின் பொங்கு இளஞ் சோதி அகலத்து ஆரம் மின் இவர் வாயில் நல் வேதம் ஓதும் வேதியர் வானவர் ஆவர் தோழீ என்னையும் நோக்கி என் அல்குல் நோக்கி ஏந்து இளங் கொங்கையும் நோககுகின்றார் அன்னை என் நோக்கும் என்று அஞ்சுகின்றேன்- அச்சோ ஒருவர் அழகியவா (1) | |
|
|
|
|
1758 | தோடு அவிழ் நீலம் மணம் கொடுக்கும் சூழ் புனல் சூழ் குடந்தைக் கிடந்த சேடர்கொல் என்று தெரிக்கமாட்டேன் செஞ் சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி பாடக மெல் அடியார் வணங்க பல் மணி முத்தொடு இலங்கு சோதி ஆடகம் பூண்டு ஒரு நான்கு தோளும்- அச்சோ ஒருவர் அழகியவா (2) | |
|
|
|
|
1759 | வேய் இருஞ் சோலை விலங்கல் சூழ்ந்த மெய்ய மணாளர் இவ் வையம் எல்லாம் தாயின நாயகர் ஆவர் தோழீ தாமரைக் கண்கள் இருந்த ஆறு சேய் இருங் குன்றம் திகழ்ந்தது ஒப்பச் செவ்விய ஆகி மலர்ந்த சோதி ஆயிரம் தோளொடு இலங்கு பூணும்- அச்சோ ஒருவர் அழகியவா (3) | |
|
|
|
|
1760 | வம்பு அவிழும் துழாய் மாலை தோள்மேல் கையன ஆழியும் சங்கும் ஏந்தி நம்பர் நம் இல்லம் புகுந்து நின்றார் நாகரிகர் பெரிதும் இளையர் செம் பவளம் இவர் வாயின் வண்ணம் தேவர் இவரது உருவம் சொலலில் அம் பவளத் திரளேயும் ஒப்பர்- அச்சோ ஒருவர் அழகியவா (4) | |
|
|
|
|
1761 | கோழியும் கூடலும் கோயில் கொண்ட கோவலரே ஒப்பர் குன்றம் அன்ன பாழி அம் தோளும் ஓர் நான்கு உடையர் பண்டு இவர்-தம்மையும் கண்டறியோம் வாழியரோ இவர் வண்ணம் எண்ணில் மா கடல் போன்று உளர் கையில் வெய்ய ஆழி ஒன்று ஏந்தி ஓர் சங்கு பற்றி- அச்சோ ஒருவர் அழகியவா (5) | |
|
|
|
|
1762 | வெம் சின வேழ மருப்பு ஒசித்த வேந்தர்கொல்? ஏந்திழையார் மனத்தைத் தஞ்சு உடையாளர்கொல்? யான் அறியேன் தாமரைக் கண்கள் இருந்த ஆறு கஞ்சனை அஞ்ச முன் கால் விசைத்த காளையர் ஆவர் கண்டார் வணங்கும் அஞ்சன மா மலையேயும் ஒப்பர்- அச்சோ ஒருவர் அழகியவா (6) | |
|
|
|
|
1763 | பிணி அவிழ் தாமரை மொட்டு அலர்த்தும் பேர் அருளாளர்கொல்? யான் அறியேன் பணியும் என் நெஞ்சம் இது என்கொல்? தோழீ பண்டு இவர்-தம்மையும் கண்டறியோம் அணி கெழு தாமரை அன்ன கண்ணும் அம் கையும் பங்கயம் மேனி வானத்து அணி கெழு மா முகிலேயும் ஒப்பர்- அச்சோ ஒருவர் அழகியவா (7) | |
|
|
|
|
1764 | மஞ்சு உயர் மா மதி தீண்ட நீண்ட மாலிருஞ்சோலை மணாளர் வந்து என் நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்கார் நீர்மலையார்கொல்? நினைக்கமாட்டேன் மஞ்சு உயர் பொன்மலைமேல் எழுந்த மா முகில் போன்று உளர் வந்து காணீர் அம் சிறைப் புள்ளும் ஒன்று ஏறி வந்தார்- அச்சோ ஒருவர் அழகியவா (8) | |
|
|
|
|
1765 | எண் திசையும் எறி நீர்க் கடலும் ஏழ் உலகும் உடனே விழுங்கி மண்டி ஓர் ஆல் இலைப் பள்ளிகொள்ளும் மாயர்கொல்? மாயம் அறியமாட்டேன் கொண்டல் நல் மால்வரையேயும் ஒப்பர் கொங்கு அலர் தாமரை கண்ணும் வாயும் அண்டத்து அமரர் பணிய நின்றார்- அச்சோ ஒருவர் அழகியவா (9) | |
|
|
|
|
1766 | அன்னமும் கேழலும் மீனும் ஆய ஆதியை நாகை அழகியாரை கன்னி நல் மா மதிள் மங்கை வேந்தன் காமரு சீர்க் கலிகன்றி குன்றா இன் இசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏழும் இரண்டும் ஓர் ஒன்றும் வல்லார் மன்னவர் ஆய் உலகு ஆண்டு மீண்டும் வானவர் ஆய் மகிழ்வு எய்துவரே (10) | |
|
|
|
|