இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி
|
| திருப்புல்லாணி: 1 |
| 1767 | தன்னை நைவிக்கிலேன் வல் வினையேன் தொழுதும் எழு- பொன்னை நைவிக்கும் அப் பூஞ் செருந்தி மண நீழல்வாய் என்னை நைவித்து எழில் கொண்டு அகன்ற பெருமான் இடம் புன்னை முத்தம் பொழில் சூழ்ந்து அழகு ஆய புல்லாணியே (1) | |
|
| |
|
|
| 1768 | உருகி நெஞ்சே நினைந்து இங்கு இருந்து என்? தொழுதும் எழு- முருகு வண்டு உன் மலர்க் கைதையின் நீழலில் முன் ஒருநாள் பெருகு காதன்மை என் உள்ளம் எய்தப் பிரிந்தான் இடம் பொருது முந்நீர் கரைக்கே மணி உந்து புல்லாணியே (2) | |
|
| |
|
|
| 1769 | ஏது செய்தால் மறக்கேன்? மனமே தொழுதும் எழு- தாது மல்கு தடம் சூழ் பொழில் தாழ்வர் தொடர்ந்து பின் பேதை நின்னைப் பிரியேன் இனி என்று அகன்றான் இடம் போது நாளும் கமழும் பொழில் சூழ்ந்த புல்லாணியே (3) | |
|
| |
|
|
| 1770 | கொங்கு உண் வண்டே கரியாக வந்தான் கொடியேற்கு முன் நங்கள் ஈசன் நமக்கே பணித்த மொழி செய்திலன் மங்கை நல்லாய் தொழுதும் எழு-போய் அவன் மன்னும் ஊர் பொங்கு முந்நீர் கரைக்கே மணி உந்து புல்லாணியே (4) | |
|
| |
|
|
| 1771 | உணரில் உள்ளம் சுடுமால் வினையேன் தொழுதும் எழு- துணரி நாழல் நறும் போது நம் சூழ் குழல் பெய்து பின் தணரில் ஆவி தளரும் என அன்பு தந்தான் இடம் புணரி ஓதம் பணில மணி உந்து புல்லாணியே (5) | |
|
| |
|
|
| 1772 | எள்கி நெஞ்சே நினைந்து இங்கு இருந்து என்? தொழுதும் எழு- வள்ளல் மாயன் மணிவண்ணன் எம்மான் மருவும் இடம் கள் அவிழும் மலர்க் காவியும் தூ மடல் கைதையும் புள்ளும் அள்ளல் பழனங்களும் சூழ்ந்த புல்லாணியே (6) | |
|
| |
|
|
| 1773 | பரவி நெஞ்சே தொழுதும் எழு-போய் அவன் பாலம் ஆய் இரவும் நாளும் இனி கண் துயிலாது இருந்து என் பயன்? விரவி முத்தம் நெடு வெண் மணல் மேல் கொண்டு வெண் திரை புரவி என்னப் புதம்செய்து வந்து உந்து புல்லாணியே (7) | |
|
| |
|
|
| 1774 | அலமும் ஆழிப் படையும் உடையார் நமக்கு அன்பர் ஆய் சலம்-அது ஆகி தகவு ஒன்று இலர் நாம் தொழுதும் எழு- உலவு கால் நல் கழி ஓங்கு தண் பைம் பொழிலூடு இசை புலவு கானல் களி வண்டு இனம் பாடு புல்லாணியே (8) | |
|
| |
|
|
| 1775 | ஓதி நாமம் குளித்து உச்சி-தன்னால் ஒளி மா மலர்ப் பாதம் நாளும் பணிவோம் நமக்கே நலம் ஆதலின் ஆது தாரான் எனிலும் தரும் அன்றியும் அன்பர் ஆய்ப் போதும் மாதே தொழுதும்-அவன் மன்னு புல்லாணியே (9) | |
|
| |
|
|
| 1776 | இலங்கு முத்தும் பவளக் கொழுந்தும் எழில் தாமரைப் புலங்கள் முற்றும் பொழில் சூழ்ந்த அழகு ஆய புல்லாணிமேல் கலங்கல் இல்லாப் புகழான் கலியன் ஒலிமாலைகள் வலம்கொள் தொண்டர்க்கு இடம் ஆவது-பாடு இல் வைகுந்தமே (10) | |
|
| |
|
|