நாலாயிர திவ்ய பிரபந்தம்

இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி

திருமாலிருஞ்சோலை: 1
1817முந்துற உரைக்கேன் விரைக் குழல் மடவார்
      கலவியை விடு தடுமாறல்
அந்தரம் ஏழும் அலை கடல் ஏழும்
      ஆய எம் அடிகள்-தம் கோயில்-
சந்தொடு மணியும் அணி மயில் தழையும்
      தழுவி வந்து அருவிகள் நிரந்து
வந்து இழி சாரல் மாலிருஞ்சோலை-
      வணங்குதும் வா மட நெஞ்சே (1)
   
1818இண்டையும் புனலும் கொண்டு இடை இன்றி
      எழுமினோ தொழுதும் என்று இமையோர்
அண்டரும் பரவ அரவணைத் துயின்ற
      சுடர் முடிக் கடவுள்-தம் கோயில்-
விண்டு அலர் தூளி வேய் வளர் புறவில்
      விரை மலர் குறிஞ்சியின் நறுந் தேன்
வண்டு அமர் சாரல் மாலிருஞ்சோலை-
      வணங்குதும் வா மட நெஞ்சே            (2)
   
1819பிணி வளர் ஆக்கை நீங்க நின்று ஏத்த
      பெரு நிலம் அருளின் முன் அருளி
அணி வளர் குறள் ஆய் அகல்-இடம் முழுதும்
      அளந்த எம் அடிகள்-தம் கோயில்-
கணி வளர் வேங்கை நெடு நிலம்-அதனில்
      குறவர்-தம் கவணிடைத் துரந்த
மணி வளர் சாரல் மாலிருஞ்சோலை-
      வணங்குதும் வா மட நெஞ்சே             (3)
   
1820சூர்மையில் ஆய பேய் முலை சுவைத்து
      சுடு சரம் அடு சிலைத் துரந்து
நீர்மை இலாத தாடகை மாள
      நினைந்தவர் மனம் கொண்ட கோயில்-
கார் மலி வேங்கை கோங்கு அலர் புறவில்
      கடி மலர்க் குறிஞ்சியின் நறுந் தேன்
வார் புனல் சூழ் தண் மாலிருஞ்சோலை-
      வணங்குதும் வா மட நெஞ்சே            (4)
   
1821வணங்கல் இல் அரக்கன் செருக்களத்து அவிய
      மணி முடி ஒருபதும் புரள
அணங்கு எழுந்து அவன்-தன் கவந்தம் நின்று ஆட
      அமர்செய்த அடிகள்-தம் கோயில்-
பிணங்கலின் நெடு வேய் நுதி முகம் கிழிப்ப
      பிரசம் வந்து இழிதர பெருந் தேன்
மணங் கமழ் சாரல் மாலிருஞ்சோலை-
      வணங்குதும் வா மட நெஞ்சே             (5)
   
1822விடம் கலந்து அமர்ந்த அரவணைத் துயின்று
      விளங்கனிக்கு இளங் கன்று விசிறி
குடம் கலந்து ஆடி குரவை முன் கோத்த
      கூத்த எம் அடிகள்-தம் கோயில்-
தடங் கடல் முகந்து விசும்பிடைப் பிளிற
      தடவரைக் களிறு என்று முனிந்து
மடங்கல் நின்று அதிரும் மாலிருஞ்சோலை-
      வணங்குதும் வா மட நெஞ்சே            (6)
   
1823தேனுகன் ஆவி போய் உக அங்கு ஓர்
      செழுந் திரள் பனங்கனி உதிர
தான் உகந்து எறிந்த தடங் கடல் வண்ணர்
      எண்ணி முன் இடம் கொண்ட கோயில்-
வானகச் சோலை மரகதச் சாயல்
      மா மணிக் கல் அதர் நுழைந்து
மான் நுகர் சாரல் மாலிருஞ்சோலை-
      வணங்குதும் வா மட நெஞ்சே            (7)
   
1824புதம் மிகு விசும்பில் புணரி சென்று அணவ
      பொரு கடல் அரவணைத் துயின்று
பதம் மிகு பரியின் மிகு சினம் தவிர்த்த
      பனி முகில் வண்ணர்-தம் கோயில்-
கதம் மிகு சினத்த கட தடக் களிற்றின்
      கவுள் வழி களி வண்டு பருக
மதம் மிகு சாரல் மாலிருஞ்சோலை-
      வணங்குதும் வா மட நெஞ்சே             (8)
   
1825புந்தி இல் சமணர் புத்தர் என்று இவர்கள்
      ஒத்தன பேசவும் உவந்திட்டு
எந்தை பெம்மானார் இமையவர் தலைவர்
      எண்ணி முன் இடம் கொண்ட கோயில்-
      சந்தனப் பொழிலின் தாழ் சினை நீழல்
      தாழ்வரை மகளிர்கள் நாளும்
மந்திரத்து இறைஞ்சும் மாலிருஞ்சோலை-
      வணங்குதும் வா மட நெஞ்சே            (9)
   
1826வண்டு அமர் சாரல் மாலிருஞ்சோலை
      மா மணி வண்ணரை வணங்கும்
தொண்டரைப் பரவும் சுடர் ஒளி நெடு வேல்
      சூழ் வயல் ஆலி நல் நாடன்
கண்டல் நல் வேலி மங்கையர் தலைவன்
      கலியன் வாய் ஒலிசெய்த பனுவல்
கொண்டு இவை பாடும் தவம் உடையார்கள்
      ஆள்வர்-இக் குரை கடல் உலகே            (10)