நாலாயிர திவ்ய பிரபந்தம்

இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி

திருமாலிருஞ்சோலை: 2
1827மூவரில் முன் முதல்வன் முழங்கு ஆர் கடலுள் கிடந்து
பூ வளர் உந்தி-தன்னுள் புவனம் படைத்து உண்டு உமிழ்ந்த
தேவர்கள் நாயகனை திருமாலிருஞ்சோலை நின்ற
கோவலர் கோவிந்தனை கொடி ஏர் இடை கூடும்கொலோ?            (1)
   
1828புனை வளர் பூம் பொழில் ஆர் பொன்னி சூழ் அரங்க நகருள்
முனைவனை மூவுலகும் படைத்த முதல் மூர்த்தி-தன்னை
சினை வளர் பூம் பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நின்றான்
கனை கழல் காணும்கொலோ-கயல் கண்ணி எம் காரிகையே?            (2)
   
1829உண்டு உலகு ஏழினையும் ஒரு பாலகன் ஆல் இலைமேல்
கண்துயில் கொண்டு உகந்த கரு மாணிக்க மா மலையை
திண் திறல் மா கரி சேர் திருமாலிருஞ்சோலை நின்ற
அண்டர்-தம் கோவினை இன்று அணுகும்கொல்-என் ஆய்-இழையே?            (3)
   
1830சிங்கம்-அது ஆய் அவுணன் திறல் ஆகம் முன் கீண்டு உகந்த
பங்கய மா மலர்க் கண் பரனை எம் பரம் சுடரை
திங்கள் நல் மா முகில் சேர் திருமாலிருஞ்சோலை நின்ற
நங்கள் பிரானை இன்று நணுகும்கொல்-என் நல் நுதலே?            (4)
   
1831தானவன் வேள்வி-தன்னில் தனியே குறள் ஆய் நிமிர்ந்து
வானமும் மண்ணகமும் அளந்த திரிவிக்கிரமன்
தேன் அமர் பூம் பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நின்ற
வானவர்-கோனை இன்று வணங்கித் தொழ வல்லள்கொலோ?            (5)
   
1832நேசம் இலாதவர்க்கும் நினையாதவர்க்கும் அரியான்
வாச மலர்ப் பொழில் சூழ் வட மா மதுரைப் பிறந்தான்
தேசம் எல்லாம் வணங்கும் திருமாலிருஞ்சோலை நின்ற
கேசவ நம்பி-தன்னைக் கெண்டை ஒண் கண்ணி காணும்கொலோ?            (6)
   
1833புள்ளினை வாய் பிளந்து பொரு மா கரி கொம்பு ஒசித்து
கள்ளச் சகடு உதைத்த கரு மாணிக்க மா மலையை
தெள் அருவி கொழிக்கும் திருமாலிருஞ்சோலை நின்ற
வள்ளலை வாள் நுதலாள் வணங்கித் தொழ வல்லள்கொலோ?            (7)
   
1834பார்த்தனுக்கு அன்று அருளி பாரதத்து ஒரு தேர் முன் நின்று
காத்தவன்-தன்னை விண்ணோர் கரு மாணிக்க மா மலையை
தீர்த்தனை பூம் பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நின்ற
மூர்த்தியைக் கைதொழவும் முடியும் கொல்-என் மொய் குழற்கே?            (8)
   
1835வலம்புரி ஆழியனை வரை ஆர் திரள் தோளன்-தன்னை
புலம் புரி நூலவனை பொழில் வேங்கட வேதியனை
சிலம்பு இயல் ஆறு உடைய திருமாலிருஞ்சோலை நின்ற
நலம் திகழ் நாரணனை நணுகும் கொல்-என் நல் நுதலே?            (9)
   
1836தேடற்கு அரியவனை திருமாலிருஞ்சோலை நின்ற
ஆடல் பறவையனை அணி ஆய்-இழை காணும் என்று
மாடக் கொடி மதிள் சூழ் மங்கையார் கலிகன்றி சொன்ன
பாடல் பனுவல் பத்தும் பயில்வார்க்கு இல்லை-பாவங்களே            (10)