இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி
|
| திருக்கோட்டியூர் |
| 1837 | எங்கள் எம் இறை எம் பிரான் இமையோர்க்கு நாயகன் ஏத்து அடியவர்- தங்கள் தம் மனத்துப் பிரியாது அருள் புரிவான்- பொங்கு தண் அருவி புதம் செய்ய பொன்களே சிதற இலங்கு ஒளி செங்கமலம் மலரும்-திருக்கோட்டியூரானே (1) | |
|
| |
|
|
| 1838 | எவ்வ நோய் தவிர்ப்பான் எமக்கு இறை இன் நகைத் துவர் வாய் நில-மகள் செவ்வி தோய வல்லான் திரு மா மகட்கு இனியான்- மௌவல் மாலை வண்டு ஆடும் மல்லிகை மாலையொடும் அணைந்த மாருதம் தெய்வம் நாற வரும்-திருக்கோட்டியூரானே (2) | |
|
| |
|
|
| 1839 | வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன் விண்ணவர்-தமக்கு இறை எமக்கு ஒள்ளியான் உயர்ந்தான் உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான்- துள்ளு நீர் மொண்டு கொண்டு சாமரைக் கற்றை சந்தனம் உந்தி வந்து அசை தெள்ளு நீர்ப் புறவில்-திருக்கோட்டியூரானே (3) | |
|
| |
|
|
| 1840 | ஏறும் ஏறி இலங்கும் ஒண் மழுப் பற்றும் ஈசற்கு இசைந்து உடம்பில் ஓர் கூறு-தான் கொடுத்தான் குல மா மகட்கு இனியான்- நாறு செண்பகம் மல்லிகை மலர் புல்கி இன் இள வண்டு நல் நறும் தேறல் வாய்மடுக்கும்-திருக்கோட்டியூரானே (4) | |
|
| |
|
|
| 1841 | வங்க மா கடல் வண்ணன் மா மணி வண்ணன் விண்ணவர்-கோன் மதுமலர்த் தொங்கல் நீள் முடியான் நெடியான் படி கடந்தான்- மங்குல் தோய் மணி மாட வெண் கொடி மாகம்மீது உயர்ந்து ஏறி வான் உயர் திங்கள்-தான் அணவும்-திருக்கோட்டியூரானே (5) | |
|
| |
|
|
| 1842 | காவலன் இலங்கைக்கு இறை கலங்க சரம் செல உய்த்து மற்று அவன் ஏவலம் தவிர்த்தான் என்னை ஆளுடை எம் பிரான்- நா வலம் புவி மன்னர் வந்து வணங்க மால் உறைகின்றது இங்கு என தேவர் வந்து இறைஞ்சும்-திருக்கோட்டியூரானே (6) | |
|
| |
|
|
| 1843 | கன்று கொண்டு விளங்கனி எறிந்து ஆ-நிரைக்கு அழிவு என்று மா மழை நின்று காத்து உகந்தான் நில மா மகட்கு இனியான்- குன்றின் முல்லையின் வாசமும் குளிர் மல்லிகை மணமும் அளைந்து இளம் தென்றல் வந்து உலவும்-திருக்கோட்டியூரானே (7) | |
|
| |
|
|
| 1844 | பூங் குருந்து ஒசித்து ஆனை காய்ந்து அரி மாச் செகுத்து அடியேனை ஆள் உகந்து ஈங்கு என்னுள் புகுந்தான் இமையோர்கள்-தம் பெருமான்- தூங்கு தண் பலவின் கனி தொகு வாழையின் கனியொடு மாங்கனி தேங்கு தண் புனல் சூழ்-திருக்கோட்டியூரானே (8) | |
|
| |
|
|
| 1845 | கோவை இன் தமிழ் பாடுவார் குடம் ஆடுவார் தட மா மலர்மிசை மேவும் நான்முகனில் விளங்கு புரி நூலர் மேவும் நான்மறை வாணர் ஐவகை வேள்வி ஆறு அங்கம் வல்லவர் தொழும் தேவ-தேவபிரான்-திருக்கோட்டியூரானே (9) | |
|
| |
|
|
| 1846 | ஆலும் மா வலவன் கலிகன்றி மங்கையர் தலைவன் அணி பொழில் சேல்கள் பாய் கழனித் திருக்கோட்டியூரானை நீல மா முகில் வண்ணனை நெடுமாலை இன் தமிழால் நினைந்த இந் நாலும் ஆறும் வல்லார்க்கு இடம் ஆகும்-வான் உலகே (10) | |
|
| |
|
|