நாலாயிர திவ்ய பிரபந்தம்

இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி

பதினென் திருப்பதிகள்
1847ஒரு நல் சுற்றம் எனக்கு உயிர் ஒண் பொருள்
வரும் நல் தொல் கதி ஆகிய மைந்தனை
நெருநல் கண்டது நீர்மலை இன்று போய்
கரு நெல் சூழ் கண்ணமங்கையுள் காண்டுமே            (1)
   
1848பொன்னை மா மணியை அணி ஆர்ந்தது ஓர்
மின்னை வேங்கடத்து உச்சியில் கண்டு போய்
என்னை ஆளுடை ஈசனை எம்பிரான்-
தன்னை யாம் சென்று காண்டும்-தண்காவிலே            (2)
   
1849வேலை ஆல் இலைப் பள்ளி விரும்பிய
பாலை ஆர் அமுதத்தினை பைந் துழாய்
மாலை ஆலியில் கண்டு மகிழ்ந்து போய்
ஞாலம் உன்னியைக் காண்டும்-நாங்கூரிலே            (3)
   
1850துளக்கம் இல் சுடரை அவுணன் உடல்
பிளக்கும் மைந்தனைப் பேரில் வணங்கிப் போய்
அளப்பு இல் ஆர் அமுதை அமரர்க்கு அருள்
விளக்கினைச் சென்று வெள்ளறைக் காண்டுமே            (4)
   
1851சுடலையில் சுடு நீறன் அமர்ந்தது ஓர்
நடலை தீர்த்தவனை நறையூர்க் கண்டு என்
உடலையுள் புகுந்து உள்ளம் உருக்கி உண்
விடலையைச் சென்று காண்டும்-மெய்யத்துள்ளே            (5)
   
1852வானை ஆர் அமுதம் தந்த வள்ளலை
தேனை நீள் வயல் சேறையில் கண்டு போய்
ஆனை வாட்டி அருளும் அமரர்-தம்
கோனை யாம் குடந்தைச் சென்று காண்டுமே            (6)
   
1853கூந்தலார் மகிழ் கோவலன் ஆய் வெண்ணெய்
மாந்து அழுந்தையில் கண்டு மகிழ்ந்து போய்
பாந்தள்-பாழியில் பள்ளி விரும்பிய
வேந்தனைச் சென்று காண்டும்-வெஃகாவுளே            (7)
   
1854பத்தர் ஆவியை பால் மதியை அணித்
தொத்தை மாலிருஞ்சோலைத் தொழுது போய்
முத்தினை மணியை மணி மாணிக்க
வித்தினைச் சென்று விண்ணகர்க் காண்டுமே            (8)
   
1855கம்ப மா களிறு அஞ்சிக் கலங்க ஓர்
கொம்பு கொண்ட குரை கழல் கூத்தனை
கொம்பு உலாம் பொழில் கோட்டியூர்க் கண்டு போய்
நம்பனைச் சென்று காண்டும்-நாவாயுளே            (9)
   
1856பெற்ற மாளிகைப் பேரில் மணாளனை
கற்ற நூல் கலிகன்றி உரைசெய்த
சொல் திறம்-இவை சொல்லிய தொண்டர்கட்கு
அற்றம் இல்லை அண்டம் அவர்க்கு ஆட்சியே            (10)