நாலாயிர திவ்ய பிரபந்தம்

இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி

குழமணிதூரம்
1867ஏத்துகின்றோம் நாத் தழும்ப இராமன் திருநாமம்
சோத்தம் நம்பீ சுக்கிரீவா உம்மைத் தொழுகின்றோம்
வார்த்தை பேசீர் எம்மை உங்கள் வானரம் கொல்லாமே
கூத்தர் போல ஆடுகின்றோம்-குழமணிதூரமே            (1)
   
1868எம்பிரானே என்னை ஆள்வாய் என்று என்று அலற்றாதே
அம்பின் வாய்ப்பட்டு ஆற்றகில்லாது இந்திரசித்து அழிந்தான்
நம்பி அநுமா சுக்கிரீவா அங்கதனே நளனே
கும்பகர்ணன் பட்டுப்போனான்_-குழமணிதூரமே            (2)
   
1869ஞாலம் ஆளும் உங்கள் கோமான் எங்கள் இராவணற்குக்
காலன் ஆகி வந்தவா கண்டு அஞ்சி கரு முகில்போல்
நீலன் வாழ்க சுடேணன் வாழ்க அங்கதன் வாழ்க என்று
கோலம் ஆக ஆடுகின்றோம்-குழமணிதூரமே             (3)
   
1870மணங்கள் நாறும் வார் குழலார் மாதர்கள் ஆதரத்தைப்
புணர்ந்த சிந்தைப் புன்மையாளன் பொன்ற வரி சிலையால்
கணங்கள் உண்ண வாளி ஆண்ட காவலனுக்கு இளையோன்
குணங்கள் பாடி ஆடுகின்றோம்-குழமணிதூரமே            (4)
   
1871வென்றி தந்தோம் மானம் வேண்டோம் தானம் எமக்கு ஆக
இன்று தம்மின் எங்கள் வாழ்நாள் எம் பெருமான்-தமர்காள்
நின்று காணீர் கண்கள் ஆர நீர் எம்மைக் கொல்லாதே
குன்று போல ஆடுகின்றோம்-குழமணிதூரமே            (5)
   
1872கல்லின் முந்நீர் மாற்றி வந்து காவல் கடந்து இலங்கை
அல்லல் செய்தான் உங்கள் கோமான் எம்மை அமர்க்களத்து
வெல்லகில்லாது அஞ்சினோம்காண் வெம் கதிரோன் சிறுவா
கொல்லவேண்டா ஆடுகின்றோம்-குழமணிதூரமே             (6)
   
1873மாற்றம் ஆவது இத்தனையே வம்மின் அரக்கர் உள்ளீர்
சீற்றம் நும்மேல் தீர வேண்டின் சேவகம் பேசாதே
ஆற்றல் சான்ற தொல் பிறப்பின் அநுமனை வாழ்க என்று
கூற்றம் அன்னார் காண ஆடீர்-குழமணிதூரமே             (7)
   
1874கவள யானை பாய் புரவி தேரொடு அரக்கர் எல்லாம்
துவள வென்ற வென்றியாளன்-தன் தமர் கொல்லாமே
தவள மாடம் நீடு அயோத்தி காவலன்-தன் சிறுவன்
குவளை வண்ணன் காண ஆடீர்-குழமணிதூரமே            (8)
   
1875ஏடு ஒத்து ஏந்தும் நீள் இலை வேல் எங்கள் இராவணனார்
ஓடிப்போனார் நாங்கள் எய்த்தோம் உய்வது ஓர் காரணத்தால்
சூடிப் போந்தோம் உங்கள் கோமான் ஆணை தொடரேல்மின்
கூடிக் கூடி ஆடுகின்றோம்-குழமணிதூரமே            (9)
   
1876வென்ற தொல் சீர்த் தென் இலங்கை வெம் சமத்து அன்று அரக்கர்
குன்றம் அன்னார் ஆடி உய்ந்த குழமணிதூரத்தைக்
கன்றி நெய்ந் நீர் நின்ற வேல் கைக் கலியன் ஒலிமாலை
ஒன்றும் ஒன்றும் ஐந்தும் மூன்றும் பாடிநின்று ஆடுமினே            (10)