நாலாயிர திவ்ய பிரபந்தம்

இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி

கண்ணனது செய்தியைக் குறித்து யசோதை பணித்தலும் ஆய்ச்சியர் முறையிடுதலும்
1907மானம் உடைத்து உங்கள் ஆயர் குலம்
      அதனால் பிறர் மக்கள்-தம்மை
ஊனம் உடையன செய்யப் பெறாய் என்று
      இரப்பன் உரப்பகில்லேன்
நானும் உரைத்திலேன் நந்தன் பணித்திலன்
      நங்கைகாள் நான் என் செய்கேன்?
தானும் ஓர் கன்னியும் கீழை அகத்துத்
      தயிர் கடைகின்றான் போலும்            (1)
   
1908காலை எழுந்து கடைந்த இம் மோர் விற்கப்
      போகின்றேன் கண்டே போனேன்
மாலை நறுங் குஞ்சி நந்தன் மகன் அல்லால்
      மற்று வந்தாரும் இல்லை
மேலை அகத்து நங்காய் வந்து காண்மின்கள்
      வெண்ணெயே அன்று இருந்த
பாலும் பதின் குடம் கண்டிலேன் பாவியேன்
      என் செய்கேன்? என் செய்கேனோ? (2)
   
1909தெள்ளிய வாய்ச் சிறியான் நங்கைகாள்
      உறிமேலைத் தடா நிறைந்த
வெள்ளி மலை இருந்தால் ஒத்த வெண்ணெயை
      வாரி விழுங்கியிட்டு
கள்வன் உறங்குகின்றான் வந்து காண்மின்கள்
      கை எல்லாம் நெய் வயிறு
பிள்ளை பரம் அன்று இவ் ஏழ் உலகும் கொள்ளும்
      பேதையேன் என் செய்கேனோ? (3)
   
1910மைந்நம்பு வேல் கண் நல்லாள் முன்னம் பெற்ற
      வளை வண்ண நல் மா மேனி
தன் நம்பி நம்பியும் இங்கு வளர்ந்தது
      அவன் இவை செய்தறியான்
பொய்ந் நம்பி புள்ளுவன் கள்வம் பொதி அறை
      போகின்றவா தவழ்ந்திட்டு
      இந் நம்பி நம்பியா ஆய்ச்சியர்க்கு உய்வு இல்லை
      என் செய்கேன்? என் செய்கேனோ? (4)
   
1911தந்தை புகுந்திலன் நான் இங்கு இருந்திலேன்
      தோழிமார் ஆரும் இல்லை
சந்த மலர்க் குழலாள் தனியே
      விளையாடும் இடம் குறுகி
பந்து பறித்து துகில் பற்றிக் கீறி
      படிறன் படிறுசெய்யும்
நந்தன் மதலைக்கு இங்கு என் கடவோம்? நங்காய்
      என் செய்கேன்? என் செய்கேனோ? (5)
   
1912மண்மகள் கேள்வன் மலர் மங்கை நாயகன்
      நந்தன் பெற்ற மதலை
அண்ணல் இலைக் குழல் ஊதி நம் சேரிக்கே
      அல்லில்-தான் வந்த பின்னை
கண் மலர் சோர்ந்து முலை வந்து விம்மி
      கமலச் செவ்வாய் வெளுப்ப
என் மகள் வண்ணம் இருக்கின்றவா நங்காய்
      என் செய்கேன்? என் செய்கேனோ? (6)
   
1913ஆயிரம் கண் உடை இந்திரனாருக்கு
      அன்று ஆயர் விழவு எடுப்ப
பாசனம் நல்லன பண்டிகளால் புகப்
      பெய்த அதனை எல்லாம்
போயிருந்து அங்கு ஒரு பூத வடிவுகொண்டு
      உன் மகன் இன்று நங்காய்
மாயன் அதனை எல்லாம் முற்ற வாரி
      வளைத்து உண்டு இருந்தான் போலும்            (7)
   
1914தோய்த்த தயிரும் நறு நெய்யும் பாலும்
      ஓர் ஓர் குடம் துற்றிடும் என்று
ஆய்ச்சியர் கூடி அழைக்கவும் நான் இதற்கு
      எள்கி இவனை நங்காய்
சோத்தம் பிரான் இவை செய்யப் பெறாய் என்று
      இரப்பன் உரப்பகில்லேன்
பேய்ச்சி முலை உண்ட பின்னை இப்
      பிள்ளையைப் பேசுவது அஞ்சுவனே            (8)
   
1915ஈடும் வலியும் உடைய இந் நம்பி
      பிறந்த எழு திங்களில்
ஏடு அலர் கண்ணியினானை வளர்த்தி
      யமுனை நீராடப் போனேன்
சேடன் திரு மறு மார்வன் கிடந்து
      திருவடியால் மலைபோல்
ஓடும் சகடத்தைச் சாடிய பின்னை
      உரப்புவது அஞ்சுவனே            (9)
   
1916அஞ்சுவன் சொல்லி அழைத்திட நங்கைகாள்
      ஆயிரம் நாழி நெய்யை
பஞ்சிய மெல் அடிப் பிள்ளைகள் உண்கின்று
      பாகம்-தான் வையார்களே
கஞ்சன் கடியன் கறவு எட்டு நாளில் என்
      கைவலத்து ஆதும் இல்லை
நெஞ்சத்து இருப்பன செய்துவைத்தாய் நம்பீ
      என் செய்கேன்? என் செய்கேனோ? (10)
   
1917அங்ஙனம் தீமைகள் செய்வர்களோ-
      நம்பீ ஆயர் மட மக்களை?
பங்கய நீர் குடைந்து ஆடுகின்றார்கள்
      பின்னே சென்று ஒளித்திருந்து
அங்கு அவர் பூந் துகில் வாரிக்கொண்டிட்டு
      அரவு ஏர் இடையார் இரப்ப
        மங்கை நல்லீர் வந்து கொள்மின் என்று
      மரம் ஏறி இருந்தாய் போலும்             (11)
   
1918அச்சம் தினைத்தனை இல்லை இப் பிள்ளைக்கு
      ஆண்மையும் சேவகமும்
உச்சியில் முத்தி வளர்த்து எடுத்தேனுக்கு
      உரைத்திலன் தான் இன்று போய்
பச்சிலைப் பூங் கடம்பு ஏறி விசைகொண்டு
      பாய்ந்து புக்கு ஆயிர வாய்
நச்சு அழல் பொய்கையில் நாகத்தினோடு
      பிணங்கி நீ வந்தாய் போலும்            (12)
   
1919தம்பரம் அல்லன ஆண்மைகளைத்
      தனியே நின்று தாம் செய்வரோ?
எம் பெருமான் உன்னைப் பெற்ற வயிறு உடையேன்
      இனி யான் என் செய்கேன்?
அம்பரம் ஏழும் அதிரும் இடி குரல்
      அங்கு அனல் செங் கண் உடை
வம்பு அவிழ் கானத்து மால் விடையோடு
      பிணங்கி நீ வந்தாய் போலும்             (13)
   
1920அன்ன நடை மட ஆய்ச்சி வயிறு அடித்து
      அஞ்ச அரு வரைபோல்
மன்னு கருங் களிற்று ஆர் உயிர் வவ்விய
      மைந்தனை மா கடல் சூழ்
கன்னி நல் மா மதிள் மங்கையர் காவலன்
      காமரு சீர்க் கலிகன்றி
இன் இசை மாலைகள் ஈர் ஏழும் வல்லவர்க்கு
      ஏதும் இடர் இல்லையே             (14)