நாலாயிர திவ்ய பிரபந்தம்

இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி

பழமொழியால் பணிந்து உரைத்த பாட்டு
1931புள் உரு ஆகி நள் இருள் வந்த
      பூதனை மாள இலங்கை
ஒள் எரி மண்டி உண்ணப் பணித்த
      ஊக்கம்-அதனை நினைந்தோ-
கள் அவிழ் கோதை காதலும் எங்கள்
      காரிகை மாதர் கருத்தும்
பிள்ளை-தன் கையில் கிண்ணமே ஒக்கப்
      பேசுவது? எந்தை பிரானே            (1)
   
1932மன்றில் மலிந்து கூத்து உவந்து ஆடி
      மால் விடை ஏழும் அடர்த்து ஆயர்
அன்று நடுங்க ஆ-நிரை காத்த
      ஆண்மை கொலோ? அறியேன் நான்-
நின்ற பிரானே நீள் கடல் வண்ணா
      நீ இவள்-தன்னை நின் கோயில்
முன்றில் எழுந்த முருங்கையில் தேனா
      முன் கை வளை கவர்ந்தாயே            (2)
   
1933ஆர் மலி ஆழி சங்கொடு பற்றி
      ஆற்றலை ஆற்றல் மிகுத்து
கார் முகில் வண்ணா கஞ்சனை முன்னம்
      கடந்த நின் கடுந் திறல் தானோ-
நேர் இழை மாதை நித்திலத் தொத்தை
      நெடுங் கடல் அமுது அனையாளை
ஆர் எழில் வண்ணா அம் கையில் வட்டு ஆம்
      இவள் எனக் கருதுகின்றாயே?            (3)
   
1934மல்கிய தோளும் மான் உரி அதளும்
      உடையவர்-தமக்கும் ஓர் பாகம்
நல்கிய நலமோ? நரகனைத் தொலைத்த
      கரதலத்து அமைதியின் கருத்தோ?
அல்லி அம் கோதை அணி நிறம் கொண்டு
      வந்து முன்னே நின்று போகாய்
சொல்லி என்-நம்பி இவளை நீ உங்கள்
      தொண்டர் கைத் தண்டு என்ற ஆறே? (4)
   
1935செரு அழியாத மன்னர்கள் மாள
      தேர் வலம் கொண்டு அவர் செல்லும்
அரு வழி வானம் அதர்படக் கண்ட
      ஆண்மை கொலோ? அறியேன் நான்-
திருமொழி எங்கள் தே மலர்க் கோதை
      சீர்மையை நினைந்திலை அந்தோ
பெரு வழி நாவல் கனியினும் எளியள்
      இவள் எனப் பேசுகின்றாயே            (5)
   
1936அரக்கியர் ஆகம் புல் என வில்லால்
      அணி மதிள் இலங்கையார்-கோனைச்
செருக்கு அழித்து அமரர் பணிய முன் நின்ற
      சேவகமோ செய்தது இன்று?-
முருக்கு இதழ் வாய்ச்சி முன் கை வெண் சங்கம்
      கொண்டு முன்னே நின்று போகாய்
எருக்கு இலைக்கு ஆக எறி மழு ஓச்சல்
      என் செய்வது? எந்தை பிரானே             (6)
   
1937ஆழி அம் திண் தேர் அரசர் வந்து இறைஞ்ச
      அலை கடல் உலகம் முன் ஆண்ட
பாழி அம் தோள் ஓர் ஆயிரம் வீழ
      படை மழுப் பற்றிய வலியோ-
மாழை மென் நோக்கி மணி நிறம் கொண்டு
      வந்து முன்னே நின்று போகாய்?
கோழி வெண் முட்டைக்கு என் செய்வது-எந்தாய்!-
      குறுந்தடி? நெடுங் கடல் வண்ணா            (7)
   
1938பொருந்தலன் ஆகம் புள் உவந்து ஏற
      வள் உகிரால் பிளந்து அன்று
பெருந்தகைக்கு இரங்கி வாலியை முனிந்த
      பெருமைகொலோ செய்தது இன்று?-
பெருந் தடங் கண்ணி சுரும்பு உறு கோதை
      பெருமையை நினைந்திலை பேசில்
கருங் கடல் வண்ணா கவுள் கொண்ட நீர் ஆம்
      இவள் எனக் கருதுகின்றாயே            (8)
   
1939நீர் அழல் வான் ஆய் நெடு நிலம் கால் ஆய்
      நின்ற நின் நீர்மையை நினைந்தோ-
சீர் கெழு கோதை என் அலது இலள் என்று
      அன்னது ஓர் தேற்றன்மை தானோ-
பார் கெழு பவ்வத்து ஆர் அமுது அனைய
      பாவையைப் பாவம் செய்தேனுக்கு
ஆர் அழல் ஓம்பும் அந்தணன் தோட்டம்
      ஆக நின் மனத்து வைத்தாயே?            (9)
   
1940வேட்டத்தைக் கருதாது அடி-இணை வணங்கி
      மெய்ம்மையே நின்று எம் பெருமானை
வாள் திறல் தானை மங்கையர் தலைவன்
      மான வேல் கலியன் வாய் ஒலிகள்
தோட்டு அலர் பைந்தார்ச் சுடர் முடியானைப்
      பழமொழியால் பணிந்து உரைத்த
பாட்டு இவை பாட பத்திமை பெருகிச்
      சித்தமும் திருவொடு மிகுமே            (10)