நாலாயிர திவ்ய பிரபந்தம்

இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி

பிரிவு ஆற்றாத தலைவி இரங்கிக் கூறுதல்
1951குன்றம் ஒன்று எடுத்து ஏந்தி மா மழை
அன்று காத்த அம்மான் அரக்கரை
வென்ற வில்லியார் வீரமே கொலோ-
தென்றல் வந்து தீ வீசும்? என் செய்கேன்            (1)
   
1952காரும் வார் பனிக் கடலும் அன்னவன்
தாரும் மார்வமும் கண்ட தண்டமோ-
சோரும் மா முகில் துளியினூடு வந்து
ஈர வாடை-தான் ஈரும் என்னையே? 2
   
1953சங்கும் மாமையும் தளரும் மேனிமேல்
திங்கள் வெம் கதிர் சீறும்-என் செய்கேன்?-
பொங்கு வெண் திரைப் புணரி வண்ணனார்
கொங்கு அலர்ந்த தார் கூவும் என்னையே 3
   
1954அங்கு ஓர் ஆய்க்குலத்துள் வளர்ந்து சென்று
அங்கு ஓர் தாய் உரு ஆகி வந்தவள்
கொங்கை நஞ்சு உண்ட கோயின்மை கொலோ-
திங்கள் வெம் கதிர் சீறுகின்றதே? 4
   
1955அங்கு ஓர் ஆள் அரி ஆய் அவுணனை
பங்கமா இரு கூறு செய்தவன்
மங்குல் மா மதி வாங்கவே கொலோ-
பொங்கு மா கடல் புலம்புகின்றதே? 5
   
1956சென்று வார் சிலை வளைத்து இலங்கையை
வென்ற வில்லியார் வீரமே கொலோ-
முன்றில் பெண்ணைமேல் முளரிக் கூட்டகத்து
அன்றிலின் குரல் அடரும் என்னையே? 6
   
1957பூவை வண்ணனார் புள்ளின்மேல் வர
மேவி நின்று நான் கண்ட தண்டமோ-
வீவு இல் ஐங்கணை வில்லி அம்பு கோத்து
ஆவியே இலக்கு ஆக எய்வதே? 7
   
1958மால் இனம் துழாய் வரும் என் நெஞ்சகம்
மாலின் அம் துழாய் வந்து என் உள்புக
கோல வாடையும் கொண்டு வந்தது ஓர்
ஆலி வந்ததால்-அரிது காவலே 8
   
1959கெண்டை ஒண் கணும் துயிலும் என் நிறம்
பண்டு பண்டு போல் ஒக்கும்-மிக்க சீர்த்
தொண்டர் இட்ட பூந் துளவின் வாசமே
வண்டு கொண்டுவந்து ஊதுமாகிலே 9
   
1960அன்று பாரதத்து ஐவர் தூதனாய்ச்
சென்ற மாயனை செங் கண் மாலினை
மன்றில் ஆர் புகழ் மங்கை வாள் கலி-
கன்றி சொல் வல்லார்க்கு அல்லல் இல்லையே 10