நாலாயிர திவ்ய பிரபந்தம்

இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி

தலைவி பிரிவு ஆற்றாது வருந்திக் கூறுதல்
1961குன்றம் எடுத்து மழை தடுத்து இளையாரொடும்
மன்றில் குரவை பிணைந்த மால் என்னை மால்செய்தான்
முன்றில் தனி நின்ற பெண்ணைமேல் கிடந்து ஈர்கின்ற
அன்றிலின் கூட்டைப் பிரிக்ககிற்பவர் ஆர்கொலோ? 1
   
1962பூங் குருந்து ஒசித்து ஆனை காய்ந்து அரி மாச் செகுத்து
ஆங்கு வேழத்தின் கொம்பு கொண்டு வன் பேய் முலை
வாங்கி உண்ட அவ் வாயன் நிற்க இவ் ஆயன் வாய்
ஏங்கு வேய்ங்குழல் என்னோடு ஆடும் இளமையே 2
   
1963மல்லொடு கஞ்சனும் துஞ்ச வென்ற மணிவண்ணன்
அல்லி மலர்த் தண் துழாய் நினைந்திருந்தேனையே
எல்லியில் மாருதம் வந்து அடும் அது அன்றியும்
கொல்லை வல் ஏற்றின் மணியும் கோயின்மை செய்யுமே 3
   
1964பொருந்து மா மரம் ஏழும் எய்த புனிதனார்
திருந்து சேவடி என் மனத்து நினைதொறும்
கருந் தண் மா கடல் கங்குல் ஆர்க்கும் அது அன்றியும்
வருந்த வாடை வரும் இதற்கு இனி என் செய்கேன்? 4
   
1965அன்னை முனிவதும் அன்றிலின் குரல் ஈர்வதும்
மன்னு மறி கடல் ஆர்ப்பதும் வளை சோர்வதும்-
பொன் அம் கலை அல்குல் அன்ன மென் நடை பூங் குழல்-
பின்னை மணாளர்திறத்தம் ஆயின பின்னையே 5
   
1966ஆழியும் சங்கும் உடைய நங்கள் அடிகள்-தாம்
பாழிமையான கனவில் நம்மைப் பகர்வித்தார்
தோழியும் நானும் ஒழிய வையம் துயின்றது
கோழியும் கூகின்றது இல்லை கூர் இருள் ஆயிற்றே 6
   
1967காமன்-தனக்கு முறை அல்லேன் கடல் வண்ணனார்
மா மணவாளர் எனக்குத் தானும் மகன் சொல்லில்
யாமங்கள் தோறு எரி வீசும் என் இளங் கொங்கைகள்
மா மணி வண்ணர்திறத்தவாய் வளர்கின்றவே 7
   
1968மஞ்சு உறு மாலிருஞ்சோலை நின்ற மணாளனார்
நெஞ்சம் நிறைகொண்டு போயினார் நினைகின்றிலர்
வெம் சுடர் போய் விடியாமல் எவ்விடம் புக்கதோ?
நஞ்சு உடலம் துயின்றால் நமக்கு இனி நல்லதே 8
   
1969காமன் கணைக்கு ஓர் இலக்கம் ஆய் நலத்தின் மிகு
பூ மரு கோலம் நம் பெண்மை சிந்தித்து இராது போய்
தூ மலர் நீர் கொடு தோழி நாம் தொழுது ஏத்தினால்
கார் முகில் வண்ணரைக் கண்களால் காணல் ஆம்கொலோ? 9
   
1970வென்றி விடை உடன் ஏழ் அடர்த்த அடிகளை
மன்றில் மலி புகழ் மங்கை மன் கலிகன்றி சொல்
ஒன்று நின்ற ஒன்பதும் உரைப்பவர்-தங்கள்மேல்
என்றும் நில்லா வினை ஒன்றும் சொல்லில் உலகிலே 10