நாலாயிர திவ்ய பிரபந்தம்

இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி

திருச்சாழல்
1991மான் அமரும் மென் நோக்கி வைதேவி இன் துணையா
கான் அமரும் கல் அதர் போய் காடு உறைந்தான் காண் ஏடீ!-
கான் அமரும் கல் அதர் போய் காடு உறைந்த பொன் அடிக்கள்
வானவர்-தம் சென்னி மலர் கண்டாய் சாழலே 1
   
1992தந்தை தளை கழலத் தோன்றிப் போய் ஆய்ப்பாடி
நந்தன் குல மதலையாய் வளர்ந்தான் காண் ஏடீ!-
நந்தன் குல மதலையாய் வளர்ந்தான் நான்முகற்குத்
தந்தை காண் எந்தை பெருமான் காண் சாழலே 2
   
1993ஆழ் கடல் சூழ் வையகத்தார் ஏசப் போய் ஆய்ப்பாடித்
தாழ் குழலார் வைத்த தயிர் உண்டான் காண் ஏடீ
தாழ் குழலார் வைத்த தயிர் உண்ட பொன் வயிறு இவ்
ஏழ் உலகும் உண்டும் இடம் உடைத்தால் சாழலே 3
   
1994அறியாதார்க்கு ஆன் ஆயன் ஆகிப் போய் ஆய்ப்பாடி
உறி ஆர் நறு வெண்ணெய் உண்டு உகந்தான் காண் ஏடீ!-
உறி ஆர் நறு வெண்ணெய் உண்டு உகந்த பொன் வயிற்றுக்கு
எறி நீர் உலகு அனைத்தும் எய்தாதால் சாழலே 4
   
1995வண்ணக் கருங் குழல் ஆய்ச்சியால் மொத்துண்டு
கண்ணிக் குறுங் கயிற்றால் கட்டுண்டான் காண் ஏடீ-
கண்ணிக் குறுங் கயிற்றால் கட்டுண்டான் ஆகிலும்
எண்ணற்கு அரியன் இமையோர்க்கும் சாழலே             (5)
   
1996கன்றப் பறை கறங்க கண்டவர்-தம் கண் களிப்ப
மன்றில் மரக்கால் கூத்து ஆடினான் காண் ஏடீ!-
மன்றில் மரக்கால் கூத்து ஆடினான் ஆகிலும்
என்றும் அரியன் இமையோர்க்கும் சாழலே             (6)
   
1997கோதை வேல் ஐவர்க்கு ஆய் மண் அகலம் கூறு இடுவான்
தூதன் ஆய் மன்னவனால் சொல்லுண்டான் காண் ஏடீ!-
தூதன் ஆய் மன்னவனால் சொல்லுண்டான் ஆகிலும்
ஓத நீர் வையகம் முன் உண்டு உமிழ்ந்தான் சாழலே             (7)
   
1998பார் மன்னர் மங்கப் படைதொட்டு வெம் சமத்துத்
தேர் மன்னற்கு ஆய் அன்று தேர் ஊர்ந்தான் காண் ஏடீ!-
தேர் மன்னற்கு ஆய் அன்று தேர் ஊர்ந்தான் ஆகிலும்
தார் மன்னர்-தங்கள் தலைமேலான் சாழலே             (8)
   
1999கண்டார் இரங்க கழியக் குறள் உரு ஆய்
வண் தாரான் வேள்வியில் மண் இரந்தான் காண் ஏடீ
வண் தாரான் வேள்வியில் மண் இரந்தான் ஆகிலும்
விண்டு ஏழ் உலகுக்கும் மிக்கான் காண் சாழலே             (9)
   
2000கள்ளத்தால் மாவலியை மூவடி மண் கொண்டு அளந்தான்
வெள்ளத்தான் வேங்கடத்தான் என்பரால் காண் ஏடீ!-
வெள்ளத்தான் வேங்கடத்தானேலும் கலிகன்றி
உள்ளத்தின் உள்ளே உளன் கண்டாய் சாழலே             (10)