நாலாயிர திவ்ய பிரபந்தம்

இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி

எம்பெருமான் திறத்தில் உதவாத அவயவங்கள் பயனற்றன எனல்
2011நீள் நாகம் சுற்றி நெடு வரை நட்டு ஆழ் கடலைப்
பேணான் கடைந்து அமுதம் கொண்டு உகந்த பெம்மானை
பூண் ஆர மார்வனை புள் ஊரும் பொன் மலையை-
காணாதார் கண் என்றும் கண் அல்ல கண்டாமே 1
   
2012நீள்வான் குறள் உரு ஆய் நின்று இரந்து மாவலி மண்
தாளால் அளவிட்ட தக்கணைக்கு மிக்கானை
தோளாத மா மணியை தொண்டர்க்கு இனியானை-
கேளாச் செவிகள் செவி அல்ல கேட்டாமே 2
   
2013தூயானை தூய மறையானை தென் ஆலி
மேயானை மேவாள் உயிர் உண்டு அமுது உண்ட
வாயானை மாலை-வணங்கி அவன் பெருமை
பேசாதார் பேச்சு என்றும் பேச்சு அல்ல கேட்டாமே 3
   
2014கூடா இரணியனைக் கூர் உகிரால் மார்வு இடந்த
ஓடா அடல் அரியை உம்பரார் கோமானை
தோடு ஆர் நறுந் துழாய் மார்வனை-ஆர்வத்தால்
பாடாதார் பாட்டு என்றும் பாட்டு அல்ல கேட்டாமே 4
   
2015மை ஆர் கடலும் மணி வரையும் மா முகிலும்
கொய் ஆர் குவளையும் காயாவும் போன்று இருண்ட
மெய்யானை மெய்ய மலையானை சங்கு ஏந்தும்
கையானை-கை தொழா கை அல்ல கண்டாமே 5
   
2016கள் ஆர் துழாயும் கணவலரும் கூவிளையும்
முள் ஆர் முளரியும் ஆம்பலும் முன் கண்டக்கால்
புள் ஆய் ஓர் ஏனம் ஆய்ப் புக்கு இடந்தான் பொன் அடிக்கு என்று-
உள்ளாதார் உள்ளத்தை உள்ளமாக் கொள்ளோமே 6
   
2017கனை ஆர் கடலும் கருவிளையும் காயாவும்
அனையானை-அன்பினால் ஆர்வத்தால் என்றும்
சுனை ஆர் மலர் இட்டு தொண்டராய் நின்று
நினையாதார் நெஞ்சு என்றும் நெஞ்சு அல்ல கண்டாமே 7
   
2018வெறி ஆர் கருங் கூந்தல் ஆய்ச்சியர் வைத்த
உறி ஆர் நறு வெண்ணெய் தான் உகந்து உண்ட
சிறியானை செங் கண் நெடியானை-சிந்தித்து
அறியாதார் என்றும் அறியாதார் கண்டாமே 8
   
2019தேனொடு வண்டு ஆலும் திருமாலிருஞ்சோலை
தான் இடமாக் கொண்டான் தட மலர்க் கண்ணிக்காய்
ஆன் விடை ஏழ் அன்று அடர்த்தாற்கு-ஆள் ஆனார் அல்லாதார்
மானிடவர் அல்லர் என்று என் மனத்தே வைத்தேனே 9
   
2020மெய்ந் நின்ற பாவம் அகல திருமாலைக்
கைந் நின்ற ஆழியான் சூழும் கழல் சூடிக்
கைந் நின்ற வேல் கைக் கலியன் ஒலி மாலை
ஐயொன்றும் ஐந்தும் இவை-பாடி ஆடுமினே 10