நாலாயிர திவ்ய பிரபந்தம்

மூன்றாம் ஆயிரம்
இயற்பா
திருமங்கை ஆழ்வார்

திரு எழு கூற்றிருக்கை
2671ஒரு பேர் உந்தி இரு மலர்த் தவிசில்
ஒருமுறை அயனை ஈன்றனை ஒரு முறை
இரு சுடர் மீதினில் இயங்கா மும் மதிள்
இலங்கை இரு கால் வளைய ஒரு சிலை
ஒன்றிய ஈர் எயிற்று அழல் வாய் வாளியில்   (5)
அட்டனை மூவடி நானிலம் வேண்டி
முப்புரி நூலொடு மான் உரி இலங்கு
மார்வினில் இரு பிறப்பு ஒரு மாண் ஆகி
ஒரு முறை ஈர் அடி மூவுலகு அளந்தனை
நால் திசை நடுங்க அம் சிறைப் பறவை   (10)
ஏறி நால் வாய் மும் மதத்து இரு செவி
ஒரு தனி வேழத்து அரந்தையை ஒருநாள்
இரு நீர் மடுவுள் தீர்த்தனை முத் தீ
நான்மறை ஐ வகை வேள்வி அறு தொழில்
அந்தணர் வணங்கும் தன்மையை ஐம்புலன்   (15)
அகத்தினுள் செறித்து நான்கு உடன் அடக்கி
முக் குணத்து இரண்டு அவை அகற்றி ஒன்றினில்
ஒன்றி நின்று ஆங்கு இரு பிறப்பு அறுப்போர்
அறியும் தன்மையை முக் கண் நால் தோள்
ஐ வாய் அரவோடு ஆறு பொதி சடையோன்   (20)
அறிவு அரும் தன்மைப் பெருமையுள் நின்றனை
ஏழ் உலகு எயிற்றினில் கொண்டனை கூறிய
அறு சுவைப் பயனும் ஆயினை சுடர்விடும்
ஐம் படை அங்கையுள் அமர்ந்தனை சுந்தர
நால் தோள் முந்நீர் வண்ண நின் ஈர் அடி   (25)
ஒன்றிய மனத்தால் ஒரு மதி முகத்து
மங்கையர் இருவரும் மலர் அன அங்கையில்
முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை
நெறி முறை நால் வகை வருணமும் ஆயினை
மேதகும் ஐம் பெரும் பூதமும் நீயே   (30)
அறுபதம் முரலும் கூந்தல் காரணம்
ஏழ் விடை அடங்கச் செற்றனை
அறு வகைச் சமயமும் அறிவு அரு நிலையினை
ஐம்பால் ஓதியை ஆகத்து இருத்தினை
அறம் முதல் நான்கு அவை ஆய்   (35)
மூர்த்தி மூன்று ஆய் இரு வகைப் பயன் ஆய்
ஒன்று ஆய் விரிந்து நின்றனை குன்றா
மது மலர்ச் சோலை வண் கொடிப் படப்பை
வரு புனல் பொன்னி மா மணி அலைக்கும்
செந்நெல் ஒண் கழனித் திகழ் வனம் உடுத்த   (40)
கற்போர் புரிசைக் கனக மாளிகை
நிமிர் கொடி விசும்பில் இளம் பிறை துவக்கும்
செல்வம் மல்கு தென் திருக் குடந்தை
அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க
ஆடு அரவு அமளியில் அறிதுயில் அமர்ந்த
பரம நின் அடி இணை பணிவன்
வரும் இடர் அகல மாற்றோ வினையே   (45)